மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 26 செப் 2021

ஐபிஎல்: ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் அணி வெற்றி!

ஐபிஎல்: ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் அணி வெற்றி!

ஹைதராபாத் அணிக்கு எதிரான நேற்றைய (செப்டம்பர் 25) ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட்டில் நேற்று இரண்டு போட்டிகள் நடைபெற்றன. 37ஆவது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மோதியது. இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணியின் கேப்டன் வில்லியம்சன் முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்தார்.

இதனையடுத்து, பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் கே.எல்.ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் களமிறங்கினர். கே.எல்.ராகுல் 21 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஹோல்டர் பந்து வீச்சில் வெளியேறினார். 5 ரன்கள் எடுத்திருந்த அகர்வாலையும் ஹோல்டர் வீழ்த்தினார்.

அடுத்து வந்த கெயில் மற்றும் மார்க்ரம் அணியின் ஸ்கோரை உயர்த்த முயற்சி செய்தனர். ஆனால், 14 ரன்கள் எடுத்த கெயில் சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கானிடம் எல்பிடபிள்யூ முறையில் அவுட் ஆனார். அடுத்து வந்த நிகோலஸ் பூரன் 8 ரன்னில் வெளியேறினார். சற்று நிலைத்து நின்று ஆடிய மார்க்ரம் அதிகபட்சமாக 27 ரன்கள் எடுத்து அப்துல் சமத் பந்து வீச்சில் விக்கெட்டை இழந்தார். ஆனால், ஹைதராபாத் அணியின் சிறப்பான பந்து வீச்சால் பஞ்சாப் வீரர்கள் யாராலும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை.

இதனால் 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் கிங்ஸ் அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 125 ரன்கள் மட்டுமே எடுத்தது. சிறப்பாக பந்து வீசிய ஹைதராபாத் அணியின் ஜேசன் ஹோல்டர் அதிகபட்சமாக மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதை அடுத்து 126 ரன்கள் என்ற இலக்குடன் ஹைதராபாத் அணி களமிறங்கியது.

தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர், ஷமி பந்துவீச்சில் 2 ரன்களில் அவுட் ஆகி வெளியேற, அடுத்து வந்த கேன் வில்லியம்சன் (1) ஷமியின் பந்து வீச்சில் போல்டு ஆனார். தொடர்ந்து களமிறங்கிய மணீஷ் பாண்டே (13), கேதர் ஜாதவ் (12), அப்துல் சமத் (1) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால், ஹைதராபாத் அணியின் ரன் ரேட் வெகுவாக குறைந்தது.

மறுபுறம் நிலைத்து நின்று நிதானமாக ஆடிய விருத்திமான் சகாவுடன், ஜேசன் ஹோல்டர் ஜோடி சேர்ந்தார். அதிரடியாக ஆடி சிக்சர்களை பறக்கவிட்ட ஹோல்டர், சற்று நேரத்தில் ஆட்டத்தின் போக்கை மாற்றினார். ஆனால், இந்த நிலையில் விருத்திமான் சகா 31 ரன்களில் ரன் அவுட் ஆனதால் இந்த ஜோடி பிரிந்தது.

இதற்கடுத்து வந்த ரஷீத் கான் 3 ரன்களில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 5 சிக்சர்களுடன் 29 பந்துகளில் 47 ரன்கள் குவித்த ஜேசன் ஹோல்டர் இறுதி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். ஆனால் மறுமுனையில் அவருக்கு சரியான பார்ட்னர்ஷிப் அமையாததால், நிர்ணயித்த இலக்கை ஹைதராபாத் அணியால் அடைய முடியவில்லை.

அதிகபட்சமாக ரவி பிஷ்னோய் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்திய நிலையில், ஷமி இரண்டு விக்கெட்டுகளையும், அர்ஷ்தீப் சிங் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி ஏழு விக்கெட்டுகளை இழந்து 120 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் நேற்றைய ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இன்று (செப்டம்பர் 26) இரண்டு ஆட்டங்கள் நடைபெறுகின்றன. மாலை 3.30 மணிக்குத் தொடங்கும் 38ஆவது லீக் ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை அணியும் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா அணியும் மோதுகின்றன.

இரவு 7.30 மணிக்குத் தொடங்கும் 39ஆவது லீக் ஆட்டத்தில் விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணியும் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை அணியும் மோதுகின்றன.

-ராஜ்

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

3 நிமிட வாசிப்பு

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

பிக்பாஸ் அக்‌ஷரா ரெட்டியின் மறுமுகம்!

6 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் அக்‌ஷரா ரெட்டியின் மறுமுகம்!

முதல்வர் வீட்டின் முன் உண்ணாவிரதம் இருப்பேன்: டி.ராஜேந்தர்

8 நிமிட வாசிப்பு

முதல்வர் வீட்டின் முன் உண்ணாவிரதம் இருப்பேன்: டி.ராஜேந்தர்

ஞாயிறு 26 செப் 2021