மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 26 செப் 2021

ராய் லட்சுமியிடம் ரோபோ சங்கர் நடந்து கொண்ட விதம்!

ராய் லட்சுமியிடம் ரோபோ சங்கர் நடந்து கொண்ட விதம்!

நடிகை ராய் லட்சுமி முக்கிய வேடத்தில் நடிக்கும் ‘சிண்ட்ரெல்லா’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு செப்டம்பர் 23 மாலை பிரசாத் பிரிவியூ தியேட்டரில் நடைபெற்றது.

இந்த விழாவின்போது காமெடி நடிகர் ரோபோ சங்கர் மேடையில் நடந்து கொண்டவிதம் அநாகரிகமான செயல் என்று விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது.

படத்தில் ரோபோ சங்கர் தையற்கலைஞராக நடித்திருக்கிறார். கதையின்படி ’சிண்ட்ரெல்லா’ உடையின் மீது ஆசை கொண்ட படத்தின் நாயகியான ராய் லட்சுமி தனக்கும் அதேபோல் ஒரு டிரஸ்ஸை தைத்து போட வேண்டும் என்று ஆசைப்படுகிறார். இதற்காக ரோபோ சங்கரிடம் வருகிறார்.

சிண்ட்ரெல்லா உடையைத் தைக்க கேட்டு வரும் ராய் லட்சுமியிடம் ரோபோ சங்கர் பேசும் வசனங்கள் முழுவதுமே இரட்டை அர்த்த ஆபாச வசனங்களாக இருந்தது அதிர்ச்சியாக இருந்தது.

நடிகை ராய் லட்சுமி இந்த இரட்டை அர்த்த ஆபாச வசனங்களுக்குப் புரியாமல் பதில் சொல்வது போல காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். அதிலும் ஒரு கொடுமை... ஒரு சிறுவனையும் இந்தக் காட்சியில் உடன் இருப்பதுபோல் காட்சிப்படுத்தியிருப்பதுதான்!

இந்த விழா மேடையில் பேசும்போது நடிகர் ரோபோ சங்கர் இதை நியாயப்படுத்தி பேசினார். இந்த மாதிரியான வசனங்களைப் பேசும்போது ராய் லட்சுமி என்ன சொல்வாரோ என்று பயந்தேன். நல்லவேளையாக அவர் எதுவும் சொல்லவில்லை. ஆனால் அந்தக் காட்சியை ரொம்பவே என்ஜாய் செய்து நடித்தார் என்று குறிப்பிட்டார் ரோபோ சங்கர்.

மேலும், ராய் லட்சுமி மெழுகு சிலை போன்று இருக்கிறார். அவரை பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காகவே வேகமாக வந்து அவர் அருகில் அமர்ந்தேன் என்று சற்று அதீதமான சபலப் பார்வையில் பேசினார்.

அதோடு நிறுத்தியிருந்தாலும் பரவாயில்லை. பேசி முடித்துவிட்டு ரோபோ சங்கர் வந்து அமர்ந்தவுடன் அடுத்து பேசுவதற்காக நடிகை ராய் லட்சுமி பேச எழுந்தபோது, அவரது கையைப் பிடித்திழுத்த ரோபோ சங்கர், “எங்க போறீங்க.. போகாதீங்க..” என்று கையைவிடாமல் இழுக்க.. ராய் லட்சுமி மிகப் பிரயத்தனப்பட்டு தன் கையை ரோபோ சங்கரிடமிருந்து விடுவித்துக் கொண்டு மைக் முன்னால் வந்து நின்றார்.

இப்படி ஏதோ காமெடி செய்வதாக நினைத்து மேடை நாகரிகத்தையே குழி தோண்டி புதைத்துவிட்டார் ரோபோ சங்கர் என்கிற விமர்சனம் சமூக வலைதளங்களில் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

ஏற்கெனவே சினிமா நட்சத்திரங்களுக்கு வெளியில் மரியாதையே இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. இந்த லட்சணத்தில் இது மாதிரி ஒவ்வொருவரும் செய்து கொண்டிருந்தால் நாளை சினிமாவில் இருக்கும் பெண்களுக்கு வெளியில் என்ன மரியாதை கிடைக்கப் போகிறது? சினிமாக்காரர்களைப் பொதுமக்கள் என்ன நினைத்துப் பேசுவார்கள் என்கிற கேள்வி திரைத் துறை வட்டாரத்தில் எழுப்பப்பட்டு வருகிறது.

அதேவேளை இது பற்றி ரோபோ சங்கர் வட்டாரத்தில் விசாரித்தபோது இது ராய் லட்சுமியும், ரோபோ சங்கரும் ஏற்கனவே பேசி முடிவு செய்து விளம்பரத்துக்காக நடத்திய நாடகம். பத்திரிகையாளர்கள் நிறைந்திருந்த அரங்கத்தில் அநாகரிகமாக நடந்துகொண்டால் அதன் எதிர்விளைவுகள் கடுமையாக இருக்கும் என்பது அவருக்கும் தெரியும். இதனை தெரிந்துகொண்டவர்கள் விமர்சிக்காமல் கடந்து போகின்றனர் என்றனர்.

-இராமானுஜம்

சிவகார்த்திகேயன் எதிர்பார்க்காத டாக்டர் வசூல்!

5 நிமிட வாசிப்பு

சிவகார்த்திகேயன் எதிர்பார்க்காத டாக்டர் வசூல்!

ஜெய் பீம் கதைக்களம்!

2 நிமிட வாசிப்பு

ஜெய் பீம்  கதைக்களம்!

10 ஆண்டுகளுக்குப் பின் நடிக்கும் வாணி விஸ்வநாத்

2 நிமிட வாசிப்பு

10 ஆண்டுகளுக்குப் பின் நடிக்கும் வாணி விஸ்வநாத்

ஞாயிறு 26 செப் 2021