ஐபிஎல்: இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி!

entertainment

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில், இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அசத்தல் வெற்றி பெற்றுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் ஆட்டத்தில் நேற்று (செப்டம்பர் 21) ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் விளையாடின. டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் ராஜஸ்தான் அணியை பேட்டிங் செய்யுமாறு பணித்தது.

இதன்படி முதலில் பேட்டிங்கை தொடங்கிய ராஜஸ்தான் அணி தொடக்கம் முதலே அதிரடி காட்டியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெய்ஸ்வால் மற்றும் லீவிஸ் ஆகிய இருவரும் நாலாபுறமும் பந்துகளை சிதறடித்தனர். இதனால், பவர்பிளே முடிவில் அந்த அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 57 ரன்கள் எடுத்திருந்தது. முதல் 10 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி இரண்டு விக்கெட்டுகள் இழப்புக்கு 94 ரன்கள் எடுத்திருந்தது.

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெய்ஸ்வால் 36 பந்துகளில் 49 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மஹிபால் லோம்ரோர் அதிரடியாக ஆடி 17 பந்துகளில் 43 ரன்கள் குவித்தார். ஆட்டத்தின் கடைசி ஓவர்களில் சிறப்பாக பந்துவீசிய பஞ்சாப் அணியால், ராஜஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 185 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் அணி தரப்பில் சிறப்பாக பந்து வீசிய அர்ஷ்தீப் சிங் 5 விக்கெட்டுகளும், முகமது ஷமி 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இதை அடுத்து 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணியின் சார்பில் கேப்டன் கே.எல்.ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். இந்த ஜோடி தங்களது சிறப்பான ஆட்டத்தால் அணியின் ரன் ரேட்டை வேகமாக உயர்த்தினர். இந்த ஜோடியில் அதிரடி காட்டிய மயங்க் அகர்வால் 34 பந்துகளில் 50 ரன்களை பூர்த்தி செய்து அசத்தினார்.

மற்றொரு முனையில் சிறப்பாக ஆடிய கே.எல்.ராகுல் 33 பந்துகளில் 49 ரன்கள் சேர்த்து கேட்ச் ஆகி வெளியேறினார். அவரைத்தொடர்ந்து மயங்க் அகர்வாலும் 67 (43) ரன்களில் கேட்ச் ஆனார். அடுத்ததாக அய்டன் மார்கிராம் மற்றும் நிக்கோலஸ் பூரன் ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். இந்த ஜோடியின் அதிரடி காரணமாக அணியின் ரன் ரேட் வேகமாக உயர்ந்தது.

கடைசி ஓவரில் வெற்றிபெற 3 ரன்கள் தேவைப்பட்டநிலையில் நிக்கோலஸ் பூரன் 32 (22) ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்து களமிறங்கிய தீபக் ஹூடாவும் ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினார். இதனால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இறுதியில் அய்டன் மார்கிராம் 26 (20) ரன்களும், பெபியன் ஆலன் (0) ரன் எதுவும் எடுக்காமலும் கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முடிவில் பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஒவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 183 ரன்கள் மட்டுமே எடுத்தது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சார்பில் அதிகபட்சமாக கார்த்திக் தியாகி இரண்டு விக்கெட்டுகளும், சேத்தன் சகாரியா மற்றும் ராகுல் தேவாட்டியா ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இதன்மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில், இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அசத்தல் வெற்றி பெற்றுள்ளது.

இன்று (செப்டம்பர் 22) அரங்கேறும் 33ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி, முன்னாள் சாம்பியன் ஐதராபாத் சன் ரைசர்ஸை எதிர்கொள்கிறது.

**- ராஜ்**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *