மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 20 செப் 2021

தியேட்டர் தொடங்கும் தேவரகொண்டா

தியேட்டர் தொடங்கும் தேவரகொண்டா

சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருப்பவர்கள் திரையரங்குகள், விநியோகம், தயாரிப்புகளில் முதலீடு செய்வது இல்லை. 2000ம் ஆண்டுகளில் இந்தி, தெலுங்கு திரைப்பட நட்சத்திரங்கள் தங்கள் படங்களின் வர்த்தக மதிப்பை அதிகரிப்பதன் மூலம் சம்பளத்தை அதிகமாக்க முடியும் என்கிற நம்பிக்கையில் படத்தயாரிப்பில் ஈடுபட்டனர். தெலுங்கின் முன்னணி நடிகர்கள் பெரும்பாலும் தயாரிப்பாளர்களின் வாரிசுகளாக, உறவினர்களாகவே இருக்கின்றனர். இதனால் தயாரிப்பு, திரையரங்கு தொழில்களில் முன்னணி நடிகர்களின் முதலீடுகள் அதிகமாக இருக்கிறது.

தற்போது அந்த வரிசையில் வளர்ந்து வரும் கதாநாயகன் விஜய் தேவரகொண்டா இணைந்திருக்கிறார். சினிமா பின்புலம் பலமாக இல்லாத இவர், தற்போது 'லிகர்' படத்தில் நடித்து வருகிறார். விஜய் அவரது பெற்றோர் சொந்த ஊரான தெலங்கானா மாநிலத்தில் உள்ள மெகபூப் நகரில் 'எவிடி சினிமாஸ்' என்ற பெயரில் கட்டியுள்ள மல்டிபிளக்ஸ் தியேட்டரை வரும் செப்டம்பர் 24ஆம் தேதி திறக்கிறார்.

அன்றைய தினம் கோவாவில் 'லிகர்' படத்தின் படப்பிடிப்பில் இருப்பதால் தன்னால் தியேட்டர் திறப்பு விழாவில் கலந்து கொள்ள முடியாது என்றும் மெகபூப் நகர் மக்கள் அனைவரும் விழாவில் வந்து கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

அது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “ஒரு இனிமையான, மகிழ்ச்சியான, முக்கியமான செய்தி ஒன்றை உங்களிடம் பகிர்ந்து கொள்ளவே இந்த வீடியோ. பல நாட்கள் கடுமையான உழைப்பிற்குப் பிறகு நடிகரானேன். அப்படி கனவு கண்டது நேற்று நடந்தது போல இருக்கிறது.

என்னுடைய முதல் மல்டிபிளக்ஸ் தியேட்டர் திறப்பு பற்றி உங்களிடம் இன்று பகிர்கிறேன். 'எவிடி - ஏசியன் விஜய் தேவரகொன்டா சினிமாஸ்', எனது அப்பா, அம்மா சொந்த ஊரான மெகபூப் நகரில் திறக்கிறேன். மெகபூப் நகரின் அனைத்து மக்கள், நண்பர்கள், குடும்பத்தினரை அவர்களது மகிழ்ச்சியான நேரத்தை செலவிட, வெளியில் செல்ல, விசேஷ நாட்களில், விடுமுறை நாட்களில் வரவேற்கிறேன்.

ஒரு உலகத்தரம் வாய்ந்த, வசதியான, ஆடம்பரமான தியேட்டர் அனுபவத்தைத் தருவதே எங்களது லட்சியம். வரும் செப்டம்பர் 24ஆம் தேதி 'லவ் ஸ்டோரி' படத்துடன் ஆரம்பிக்கிறோம். சேகர் கம்முலா காரு இயக்கத்தில், நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்திருக்கிறார்கள். எனது சினிமா வாழ்க்கை சேகர் கம்முலா காருவிடம் இருந்துதான் ஆரம்பமானது என்பது எனக்கு கூடுதலான மகிழ்ச்சி. லவ் ஸ்டோரி குழுவிற்கு எனது வாழ்த்துகள்.

எனது வாழ்க்கையில் தியேட்டரைத் திறப்பது பெரிய மகிழ்ச்சிதான். ஆனால், கோவாவில் பெரும் பட்ஜெட் படமான 'லிகர்' படப்பிடிப்பில் இருக்கிறேன். அதனால், என்னால் வர இயலவில்லை. பெரிய படம், படப்பிடிப்பு என இருப்பதால் அன்றைய தினம் வர இயலாதது வருத்தமில்லை. இப்படியான விஷயங்களால் என்னால் பல வேலைகளைச் செய்ய முடிகிறது. தியேட்டர் திறப்பது, எனது அறக்கட்டளை போன்ற வேலைகள் நடக்கின்றன. அனைவருக்கும் எனது நன்றி, தியேட்டர் திறப்புக்கு வாருங்கள்,” எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.

-இராமானுஜம்

சித்தார்த் விவகாரத்தில் நடிகை கஸ்தூரி கருத்து!

3 நிமிட வாசிப்பு

சித்தார்த் விவகாரத்தில் நடிகை கஸ்தூரி கருத்து!

‘அழகி-2’: நடிகை நந்திதா தாஸின் ஆசை!

3 நிமிட வாசிப்பு

‘அழகி-2’: நடிகை நந்திதா தாஸின் ஆசை!

100 மில்லியன் பார்வைகளைக் கடந்த ‘டம் டம்’

2 நிமிட வாசிப்பு

100 மில்லியன் பார்வைகளைக் கடந்த ‘டம் டம்’

திங்கள் 20 செப் 2021