மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 14 செப் 2021

‘லிஃப்ட்’ படத்தின் உரிமை யாருக்கு?

‘லிஃப்ட்’ படத்தின் உரிமை யாருக்கு?

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்ற நடிகர் கவின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘லிஃப்ட்’. இந்தப் படத்தில் கவினுக்கு ஜோடியாக அம்ரிதா ஐயர் நடிக்கிறார். இந்தப் படத்தை வினீத் வரப்பிரசாத் இயக்கி உள்ளார்.

ஏகா என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தின் தமிழ்நாடு திரையரங்க வெளியீட்டு விநியோக உரிமையை லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் பெற்றிருந்தது.

இந்த நிலையில், படத்தின் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்… ‘ஏகா என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனத்தின் தமிழ்த் திரைப்படமான லிஃப்ட்டின் தமிழ்நாடு திரையரங்கு வெளியீட்டு விநியோக உரிமையை மட்டும் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரனின் லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்திடம் கடந்த ஏப்ரல் 2021இல் ஒப்பந்தம் போடப்பட்டது.

இதையடுத்து ஒப்பந்தத்தில் குறிப்பிட்டபடி ரவீந்தர் சந்திரசேகரன் நடந்து கொள்ளாததால் எங்கள் ஏகா என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனத்துக்கும் லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்துக்குமான ஒப்பந்தம் முறித்துக்கொள்ளப்பட்டது.

இதையடுத்து ஏகா என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனத்தின் அதிகாரபூர்வ நபரான திலீப்குமார் மூலம் சென்னை காவல் ஆணையரிடம் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

எனவே, தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரனிடம் லிஃப்ட் தமிழ்த் திரைப்படம் சம்பந்தமான எந்த ஒரு காப்புரிமமும் இல்லை. எனவே தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரனிடம் லிஃப்ட் தமிழ்த் திரைப்படத்தின் திரையரங்கு வெளியீட்டு வியாபாரத்துக்காக எந்த ஒரு நிறுவனமும் தொடர்பு கொள்ள வேண்டாம் என இதன்மூலம் கேட்டுக்கொள்கிறோம்.

லிஃப்ட் தமிழ்த்திரைப்படத்தின் அனைத்து அதிகாரபூர்வ செய்திகளும் ஏகா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தினால் மட்டுமே தெரிவிக்கப்படும்.’ இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதற்குப் பதிலளிக்கும் விதமாக லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்… ‘ஏகா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிகர் கவின் நடிப்பில் உருவாகியுள்ள லிஃப்ட் திரைப்படத்தின் தமிழ்நாடு உரிமையை எனது லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் கடந்த ஏப்ரல் மாதம் ஒப்பந்தம் செய்தது.

ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ளது போல் ஐம்பது விழுக்காடு முன்பணம் செலுத்தியுள்ளோம். மீதமுள்ள ஐம்பது விழுக்காடு தொகை படத்தின் வெளியீட்டுக்கு முன் செலுத்த வேண்டும் என ஒப்பந்தத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனா இரண்டாம் அலைக்குப் பின் தியேட்டர்கள் திறந்தவுடன் அக்டோபரில் படத்தைத் தியேட்டரில் வெளியிடலாம் என முடிவு செய்து கடந்த ஒரு மாதமாக தயாரிப்பாளரைத் தொடர்பு கொள்ள முயன்று வருகிறோம். ஆனால் அவர் எங்கள் அழைப்புகளை எடுப்பதில்லை. இது தொடர்பாக தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளித்துள்ளோம். சங்கத்தில் இருந்து பேச்சுவார்த்தைக்கு அழைத்த போதும் லிஃப்ட் படத் தயாரிப்பாளர் எந்தப் பதிலும் அளிக்கவில்லை.

தற்போது லிஃப்ட் படத் தயாரிப்பாளர் லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் உடன் செய்த ஒப்பந்தம் முறித்துக் கொள்ளப்பட்டது என தானாகவே ஒரு வேடிக்கை அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

லிஃப்ட் படத்தின் தமிழ்நாடு தியேட்டர் வெளியீட்டு உரிமை லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்திடம்தான் உள்ளது என்பதை மீண்டும் ஒருமுறை தெரியப்படுத்திக் கொள்கிறோம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

-இராமானுஜம்

பேரு வச்சாலும் பாடல்... ரகசியத்தைப் பகிர்ந்த இளையராஜா

3 நிமிட வாசிப்பு

பேரு வச்சாலும் பாடல்... ரகசியத்தைப் பகிர்ந்த இளையராஜா

படக்குழுவினரைக் கண்கலங்க வைத்த கீர்த்தி சுரேஷ்

2 நிமிட வாசிப்பு

படக்குழுவினரைக் கண்கலங்க வைத்த கீர்த்தி சுரேஷ்

உதயநிதி படத்தில் வடிவேலு?

3 நிமிட வாசிப்பு

உதயநிதி படத்தில் வடிவேலு?

செவ்வாய் 14 செப் 2021