மாநாடு தீபாவளி ரிலீஸ் பின்னணி என்ன?

entertainment

சிவா இயக்கத்தில், ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா மற்றும் பலர் நடிக்கும் ‘அண்ணாத்த’ படம் நவம்பர் 4ஆம் தேதி தீபாவளியன்று வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக சன்பிக்சர்ஸ் ஏற்கனவே அறிவித்தார்கள்.

அதே நாளில் வெங்கட் பிரபு இயக்கத்தில், சிலம்பரசன், கல்யாணி, எஸ்.ஜே சூர்யா மற்றும் பலர் நடிக்கும் ‘மாநாடு’ படம் வெளியாகும் என இரு தினங்களுக்கு முன்பு அப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ்காமாட்சி அறிவித்தார்.

அண்ணாத்த படம் வெளியாகும் அன்றே மாநாடு படம் வருவது திரையுலகத்தில், வியப்பையும்,விவாதங்களையும் தற்போது ஏற்படுத்தியுள்ளது. மேலும், தீபாவளிக்கு அஜித் நடிக்கும் வலிமை படம் வருமா என்பது குறித்தும் தற்போது கேள்வி எழுந்துள்ளது.

கொரோனா இரண்டாம் அலை தளர்வுகளுக்குப் பிறகு தியேட்டர்கள் 50 சதவீத இருக்கை அனுமதியுடன் கடந்த மாதம் 23ம் தேதி திறக்கப்பட்டது. எப்படியும் தீபாவளிக்கு முன்னதாக 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி வழங்கிவிடுவார்கள் என திரையுலகத்தில் எதிர்பார்க்கிறார்கள்.

அண்ணாத்த படத்தைத் தயாரித்துள்ள சன்பிக்சர்ஸ் ஆளும்கட்சியின் குடும்ப உறுப்பினர் நிறுவனம் என்பதால் 100% இருக்கைக்கு அனுமதி கிடைக்கும். அதனால் அதிகமான திரையரங்குகள் தேவைப்படாது எனத் தெரிந்தே தான் மாநாடு படத்தையும் வெளியிட முடிவு செய்திருக்கலாம் என யூகங்கள் கிளப்பப்பட்டு வருகிறது.

ஒருவேளை 50 சதவீத இருக்கை தொடரும் நிலையில் அண்ணாத்த, வலிமை, மாநாடு என எந்தப் படமும் நேர்வழியில் அப்படத்தின் விலைக்கு உரிய வசூலை திரையரங்குகளில் எடுக்க முடியாது.

எனவே தற்போது அண்டை மாநிலமான ஆந்திரா, தெலங்கானாவில் 100% இருக்கைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா தவிர்த்து பிற வடமாநிலங்களில் உள்ள திரையரங்குகளுக்கு 100% இருக்கையை பயன்படுத்திக் கொள்ள படிப்படியாக அனுமதி வழங்கப்பட்டு வருகிறது

அதனை முன்மாதிரியாக கொண்டு தமிழ்நாட்டில் 100% இருக்கை அனுமதி கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை அதிகரித்து வருகிறது. அதன் காரணமாக 3 படங்கள் வெளியானாலும் தேவையான காட்சிகளும் இருக்கை எண்ணிக்கையும் எல்லாப் படங்களுக்கும் கிடைக்கும் என்கிற தொலைநோக்கு திட்டமிடுதலே மாநாடு படம் தீபாவளி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டதன் பின்னணி என்கின்றனர்.

**-பிரியா**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *