மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 12 செப் 2021

பேயை நம்பும் இடியட்!

பேயை நம்பும் இடியட்!

உணவு விடுதிகளில் உணவுப் பொருட்கள் காலியாகிவிட்டால் உடனே தயாராவது உப்புமா உணவு வகைகள்தாம். அதைத்தான் உடனடியாகத் தயாரிக்க முடியும். அதேபோன்று திரைப்படங்களுக்கான திரைக்கதையும் தயாராக தொடங்கியுள்ளது.

புதிய கதை களங்களை உருவாக்க முடியாதவர்கள், நேரமில்லாதவர்கள், எழுத்தாளர்களிடம் பணம் கொடுத்து கதையை வாங்க விரும்பாதவர்கள் வேற்று மொழிப்படங்களில் இருந்து கதையை உருவுவார்கள் அல்லது எல்லோருக்கும் பொதுவான, பிடித்தமான ஒன்லைன் என்பது பேய்க்கதைதான். அப்படியான ஒரு திரைப்படம்தான் இடியட் என்கிறது கோடம்பாக்கம் வட்டாரம்.

ஸ்கிரீன் சீன் மீடியா தயாரிப்பில் மிர்ச்சி சிவா, நிக்கி கல்ராணி முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள ஹாரர் காமெடி திரைப்படம் “இடியட்”. ‘தில்லுக்கு துட்டு’ இரண்டு பாகங்களை தொடர்ந்து, ஹாரர் காமெடி பாணியில், இந்தப் படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் ராம்பாலா.

விரைவில் படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று (செப்டம்பர் 11) நடைபெற்றது. படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டு படம் குறித்தான அனுபவங்களைப் பத்திரிகையாளர்களிடம் பகிர்ந்துகொண்டனர்.

இசையமைப்பாளர் விக்ரம் செல்வா பேசியதாவது...

‘தில்லுக்கு துட்டு’ படத்தின்போதே ராம்பாலாவைச் சந்தித்து வாய்ப்பு கேட்டிருந்தேன். அவர் ஞாபகம்வைத்து இந்தப் படத்தில் எனக்கு வாய்ப்பு தந்தார். இந்தப் படம் வித்தியாசமான காமெடி படமாக இருக்கும். முதலில் இரண்டு பாடல்கள் இருந்தன. இடையில் கதையில் சில மாற்றங்களைச் செய்ததால், ஒரு பாட்டை எடுத்துவிட்டோம். இந்தப் படம் மிக வித்தியாசமான அனுபவமாக இருக்கும். ஒரு காமெடி காட்சி வந்தால் அடுத்து உடனே சீரியஸ் காட்சி வரும் படம் உங்களுக்கு ஒரு விருந்தாக இருக்கும் என்றார்.

நடிகர் ரவி மரியா பேசியதாவது...

ஒரு படத்தை பற்றி, வழக்கமாக இந்தப் படம் சூப்பராக வந்திருக்கிறது, நடிக்கும்போதே ஹிட்டாகும் என்று தெரியும் என எப்போதும் சொல்வோம். ஆனால், இந்தப் படத்தை பற்றி உண்மையிலேயே அப்படிச் சொல்லலாம். நான் வில்லன் சேரில் உட்கார்ந்து காமெடி செய்பவன், என்னை கூப்பிட்டு நீங்கள் காமெடி சேரில் அமர்ந்து, காமெடி பண்ணுங்கள் என்று சொன்னார். ராம்பாலா எனக்குப் பிடித்த படங்கள் செய்பவர்.

அவர் படங்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும். படப்பிடிப்பில் காட்சிக்குக் காட்சி கடுமையான உழைப்பை தருபவர் ராம்பாலா. ஷூட்டிங்கில் எல்லாவற்றையும் இறுதி நொடி வரை மாற்றிக்கொண்டே இருப்பார். படம் நன்றாக வர வேண்டும் என்கிற அக்கறைதான் அதற்கு காரணம்.

நடிகர் மிர்ச்சி சிவாவை இயக்க அவரிடம் கதை சொல்லியிருக்கிறேன். ஆனால், அது நடக்காமல் போனதே நன்று. ஏனெனில் இந்தப் படத்தில் நடிக்கும் வாய்ப்பை இழந்திருப்பேன். மிக இயல்பாக இருக்கும் நல்ல மனிதர். நிக்கி கல்ராணி ஷூட்டிங்கில் என்னை பார்த்துதான் திட்டி பயிற்சி எடுப்பார். நல்ல நடிகை.

மயில்சாமி நல்ல கதாபாத்திரம் செய்திருக்கிறார். ஒரு சின்ன அறைக்குள் அட்டகாசமாக லைட்டிங் செய்து அசத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் ராஜா பட்டாசார்ஜீ, ராம்பாலா சாருக்கு இந்தப் படம் கண்டிப்பாக ஹாட்ரிக் வெற்றியைத் தரும்.

நடிகர் RNR மனோகர் பேசியதாவது...

நீண்ட நாளுக்கு பிறகு சினிமா விழா, திரையரங்கில் நடப்பது மகிழ்ச்சி. ராம்பாலா கலகலப்பானவர், மிர்ச்சி சிவா காமெடியில் கலக்குபவர். இருவரும் இணைந்தால் எப்படி இருக்கும் என்று நீங்களே முடிவு செய்து கொள்ளலாம். Screen Scene Media Entertainment எத்தனை தடைகள் வந்தாலும் அதைத்தாண்டி சினிமாவை, திரையரங்குகளை வாழவைக்க வேண்டும் என்ற நோக்கில் இந்தப் படத்தை திரையரங்கில் வெளியிடுகிறது. தயாரிப்பாளரின் அந்த மனதிற்கு என் நன்றி.

நடிகர் மயில்சாமி பேசியதாவது...

இந்தப் படத்தை வாழ்த்தும் அனைவருக்கும் என் நன்றி. முன்பெல்லாம் படம் 50 நாள், 100 நாள் விழா வைப்பார்கள். ஆனால், அது இப்போது நடப்பதில்லை. ஆனால், சினிமா எந்த காலத்திலும் அழியாது. எல்லாவற்றையும் கடந்து நிற்கும். இந்தப் படத்தில் நடித்திருந்தாலும் எனக்கு கதை தெரியாது.

ராம்பாலா என்னை அழைத்து, ஒரு காட்சியைச் சொல்லி நடிக்க சொன்னார். நடித்து முடித்தவுடன் நடிகன்யா நீ என என்னை பாராட்டினார். ஒரு காலத்தில் சினிமாவை விட்டே போக நினைத்தேன், ஆனால் சிவகுமார் இரு, உனக்கென்று ஒரு கதாபாத்திரம் கிடைக்கும் என்றார். அப்படி கிடைத்ததுதான் குடிகாரன் கதாபாத்திரம்.

இப்போது எல்லா படங்களிலும் குடிகாரன் அல்லது சாமியார் கதாபாத்திரம்தான் வருகிறது. அதுதான் என்னை வாழவைக்கிறது. ராம்பாலா லொள்ளு சபாவில் நிமிடத்துக்கு 10 பஞ்ச் அடித்து கலக்குபவர். லேட்டாகத் திரைக்கு வந்திருக்கிறார். ஆனால், கண்டிப்பாக தொடர்ந்து ஜெயிப்பார். இந்தப் படம் எல்லோருக்கும் பெயர் வாங்கி தரும். எனக்கும் பெயர் வாங்கி தரும்.

நடிகர் ஆனந்த்ராஜ் பேசியதாவது...

ராம்பாலா மிக நல்ல மனிதர். அவர் ஒரு காமெடி கடல். அவரின் திறமையை யாராலும் திருட முடியாது. அவருடன் தில்லுக்கு துட்டு படத்தில் இணைந்து பணியாற்றினேன். இரண்டில் நடிக்க முடியவில்லை. இப்போது இந்தப் படம் மிக நன்றாக வந்திருக்கிறது. தயாரிப்பாளர்களுக்கு முதலில் நன்றி சொல்லிக்கொள்கிறேன். ஓடிடியில் படத்தை கொடுத்துவிடும் இக்காலத்தில் தியேட்டரில் இந்தப் படத்தை வெளியிட வேண்டும் என உறுதியாக இருந்ததற்கு நன்றி. தியேட்டர் அனுபவம் என்பது மிகச்சிறப்பான ஒன்று அது ஆலயம் போன்றது.

இந்தப் படம் அடுத்த வாரம் திரைக்கு வருகிறது. திரையரங்கில் அனைவரும் கொண்டாடுவார்கள். மிர்ச்சி சிவா உடன் முதன்முறையாக நடித்திருக்கிறேன். அவர் படிப்படியாக வளர்ந்து முழு சந்திரமுகியாக மாறியிருக்கிறார். மிகச் சிறப்பாக நடித்துள்ளார். நிக்கி கல்ராணி என் தோழி அவரும் நானும் இணைந்து நடித்த அனைத்து படங்களுமே ஹிட். இந்தப் படம் அனைவருக்கும் பிடிக்கும் படமாக இருக்கும். இந்த மேடையில் தமிழக முதல்வருக்கு ஒரு வேண்டுகோளை வைக்கிறேன். சிறு படங்களின் தேவைகளை நிவர்த்தி செய்து அவற்றை வாழவைக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

நாயகி நிக்கி கல்ராணி பேசியதாவது...

இத்தனை மாதம் கடந்து அனைவரையும் சந்தித்ததில் சந்தோஷம். கொரோனா காலத்தில் ராம்பாலா சார் அழைத்து இந்த வாய்ப்பைப் பற்றி சொன்னார். இந்தப் படத்தின் அனுபவமே சிறப்பாக இருந்தது. போன வருடம் கொரோனா காலத்தில் உலகமே மன அழுத்தத்தில் இருந்தபோது நான் இந்தப் படக்குழுவினருடன் மகிழ்ச்சியாக இருந்தேன்.

மயில்சாமி, ஆனந்த்ராஜ், மனோகர், மிர்ச்சி சிவா அனைவருடனும் நடித்தது சந்தோஷம். இந்தப் படத்துக்கு ராஜா அட்டகாசமாக ஒளிப்பதிவு செய்துள்ளார். ஏற்கனவே டார்லிங், மரகத நாணயம் படங்களில் பேய் கேரக்டர் செய்துள்ளேன். அந்தப் படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதே போல் “இடியட்” படமும் மிகப்பெரிய வெற்றி பெறும். இந்தப்படம் உங்கள் அனைவரையும் சந்தோஷப்படுத்தும் என்று கூறினார்.

இயக்குநர் ராம் பாலா பேசியதாவது...

“இடியட்” படத்திலேயே நிறைய கலகலப்பான சம்பவங்கள் நடந்தது. யார் யாரை இடியட் ஆக்கியுள்ளார்கள் என்பதை படத்தைப் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள். ஒளிப்பதிவாளர் ராஜா, எடிட்டிங் முடித்து அவரது ஒளிப்பதிவைப் பார்த்து விட்டேன். நன்றாக செய்துள்ளார். மிர்ச்சி சிவா மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். நிக்கி கல்ராணி நிறைய கேள்வி கேட்பார், எல்லா லாஜிக்குக்கும் அவருக்குப் பதில் சொல்ல வேண்டும் மிகச் சிறப்பான நடிகை. நடிகர் ரவி மரியாவை முன்பிருந்தே தெரியும். அவரை வில்லனாகத்தான் பார்த்திருக்கிறேன்.

ஆனால், ஒரு படத்தில் காமெடியில் கலக்கியிருந்தார். அவரது பாடி லாங்குவேஜ் அட்டகாசமாக இருக்கும். ஆனந்தராஜ் எனக்கு சீனியர். முரட்டுத்தனமான ஒரு ஆள் முட்டாள்தனமாக இருந்தால் எப்படி இருக்கும் என நினைத்தபோது அதற்கு பொருத்தமாக ஆனந்தராஜ் இருந்தார். ஊர்வசி மேடத்துடன் மூன்று படங்கள் செய்திருக்கிறேன். இன்னும் பல படங்கள் செய்வேன்.

மயில்சாமி மிகச் சிறப்பாக செய்திருக்கிறார். அடுத்த படத்தில் அவருக்கு ஃபாரின் மாப்பிள்ளை வேடம்தான். எனது உதவியாளர்கள்தான் இந்தப் படம் சரியாக உருவாக துணையாக இருந்தார்கள். சிவா காலையில் ஷூட்டிங்குக்கு வரும்போதே, சிரித்துகொண்டே வருவார். முடிந்து செல்லும்போதும் அந்தப் புன்னகை அப்படியே இருக்கும். ஜனங்களை குஷிப்படுத்தும் படமாக சிரிக்க வைக்கும் படமாக இப்படம் இருக்கும்.

நடிகர் மிர்ச்சி சிவா பேசியதாவது...

இரண்டு வருடங்கள் கடந்து எல்லோரையும் பார்ப்பதில் மகிழ்ச்சி. இந்த கொரோனா நிறைய கற்றுக்கொடுத்துவிட்டது. கொரோனா உச்சக்கட்டத்தில் இருந்த நேரத்தில் ராம்பாலா சார் இந்தப் படத்தைப் பற்றி சொன்னார். ஆனால் அப்படிப்பட்ட நேரத்திலும் அனைவரையும் ஒன்று சேர்த்து படத்தைத் தொடங்கி விட்டார் தயாரிப்பாளர் சுந்தர். நிக்கி கல்ராணி போல அர்ப்பணிப்பு கொண்ட நடிகையைப் பார்க்க முடியாது. ஒரு காட்சியில் அவர் டெட் பாடியாக இருக்க வேண்டும். ஆனால், அதற்கே நிறைய டவுட் கேட்டார். அந்தளவு சீரியஸான நடிகை.

நடிகர் ஆனந்த்ராஜ் உலகத்தில் எதை பற்றி வேண்டுமானாலும் அவரிடம் பேசலாம். ஆனால் நடிப்பில் அசத்திவிடுவார். மயில்சாமி பிரமிப்பு தரும் மனிதர். தமிழ்நாட்டில் உள்ள சிவ ஆலயங்களுக்கு அவர் செய்யும் கொடைகள் பெரிது.

அவரிடம் பெரிய மரியாதை உள்ளது. டீம் கேப்டன் நன்றாக இருந்தால்தான் எல்லோரும் நன்றாக இருக்க முடியும். எங்கள் டீமிலேயே பெரிய ‘இடியட்’ ராம்பாலா சார் தான். உண்மையிலேயே அவரின் உழைப்பு, அவர் அமைக்கும் காட்சிகள் எல்லாமே அட்டகாசமாக இருக்கும்.

இன்னும் நிறைய படங்கள் அவர் செய்ய வேண்டும். தியேட்டரில்தான் இந்தப் படத்தை வெளியிட வேண்டும் என்றார் தயாரிப்பாளர். அவரின் நம்பிக்கைக்கு நன்றி. ஒரு பேய் எப்போதும் இருட்டில், மியூசிக்கில் பயமுறுத்தும். ஆனால், அது இந்தப்படத்தில் இருக்காது.

அதனால்தான் இந்தப் படத்தை ஒப்புக்கொண்டேன். படத்தின் ரகசியத்தைச் சொல்லிவிட்டேன் ஆனாலும், இந்தப் படம் உங்கள் அனைவரையும் சந்தோஷப்படுத்தும் என்று கூறினார்.

-இராமானுஜம்

விவாகரத்து செய்யும் தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

3 நிமிட வாசிப்பு

விவாகரத்து செய்யும் தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

புதிய படங்களை ஓரங்கட்டிய எம்.ஜி.ஆர்

5 நிமிட வாசிப்பு

புதிய படங்களை  ஓரங்கட்டிய எம்.ஜி.ஆர்

'ஓ சொல்றியா பாடல்': சமந்தாவின் சம்பளம் எவ்வளவு?

3 நிமிட வாசிப்பு

'ஓ சொல்றியா பாடல்': சமந்தாவின் சம்பளம்  எவ்வளவு?

ஞாயிறு 12 செப் 2021