மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 2 செப் 2021

பிக்பாஸ் டைட்டில் வின்னர் மாரடைப்பால் மரணம்!

பிக்பாஸ் டைட்டில் வின்னர் மாரடைப்பால் மரணம்!

பிரபல நடிகரும், இந்தி பிக்பாஸ் 13வது சீசன் டைட்டில் வின்னருமான சித்தார்த் சுக்லா திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் 1980ஆம் ஆண்டு டிசம்பர் 12ஆம் தேதி பிறந்தார் சித்தார்த் சுக்லா. பள்ளிப் படிப்பை சேவியர் பள்ளியில் முடித்த சித்தார்த், கல்லூரியில் இண்டீரியர் டிசைனிங் படித்து முடித்தார். இவர் தன்னுடைய அம்மா மற்றும் இரு சகோதரிகளுடன் மும்பையில் வசித்து வந்தார்.

இவர் 2008 ஆம் ஆண்டில் தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க ஆரம்பித்தார். 2014ஆம் ஆண்டு ‘ஹம்ப்டி சர்மா கி துல்ஹானியா’ என்ற படத்தில் துணை கதாபாத்திரத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார்.

தொடர்ந்து "ஜலக் திக் லாஜா 6", "ஃபியர் ஃபேக்டர்: காட்ரோன் கே கிலாடி 7",”பிக்பாஸ் 13” உள்ளிட்ட ரியாலிட்டி ஷோக்கள் மூலமாக தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டார். பிக்பாஸ் 13வது சீசனில் டைட்டில் வின்னர் ஆகி ரசிகர்களின் மனதில் ஆழமான இடத்தை பிடித்தார். இவர் நடித்த ‘பலிகா வாது’ என்ற தொடர் தமிழில் ‘மண் வாசனை’ என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்டு ஒளிபரப்பானது.

ரசிகர்கள் மத்தியில் எந்தளவுக்கு பிரபலமானரோ அந்தளவுக்கு விமர்சனங்களையும் எதிர்கொள்ள தவறவில்லை. இருந்தாலும், சினிமா துறையில் அனைவரும் எதிர்கொள்ளும் விமர்சனம்தான்.

இந்நிலையில் இன்று(செப்டம்பர் 2) காலை திடீரென நடிகர் சித்தார்த் சுக்லாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து மும்பையிலுள்ள கூப்பர் மருத்துவமனையில் காலை 11 மணியளவில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அவரை பரிசோதனை செய்த அம்மருத்துவமனையின் மூத்த டாக்டர், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினார். நடிகர் சித்தார்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பே இறந்துவிட்டார் என்பதை நிரஞ்சன் என்ற மற்றொரு மருத்துவரும் உறுதி செய்தார். பிரேத பரிசோதனை முடிந்து, அவரது உடல் உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

அதேசமயம், அவர் தூங்குவதற்கு முன் சில மருந்துகளை உட்கொண்டதாகவும், பின்னர் காலையில் எழுந்திருக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. ஆனால், சித்தார்த் சத்து மாத்திரைகளை மட்டுமே இரவில் எடுத்து கொண்டதாக குடும்பத்தினர் கூறியுள்ளனர்.

பாலிவுட்டில் பெரிதாக சாதிக்க வேண்டும் என்கிற கனவுகளுடன் இருந்த சித்தார்த் சுக்லா 40 வயதிலேயே மாரடைப்பு ஏற்பட்டு திடீரென உயிரிழந்தது ஒட்டுமொத்த ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

சித்தார்த்தின் மறைவுக்கு திரையுலகினர், ரசிகர்கள் உட்பட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ”அனைவரிடம் அன்பாகவும், பாசமாகவும் நடந்து கொள்வார். அமைதியாக நடந்து கொள்வார். ஈகோ என்ற பேச்சுக்கே அவரிடம் இல்லை. இவ்வளவு சீக்கிரத்தில் எங்களை விட்டு செல்வார் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை” என்று அவருடன் பணியாற்றியவர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

-வினிதா

யோகிபாபுவுக்கு நன்றி சொன்ன விவேக் மகள்!

2 நிமிட வாசிப்பு

யோகிபாபுவுக்கு நன்றி சொன்ன விவேக் மகள்!

ஐபிஎல்: கோலி அணியை வீழ்த்திய டோனி அணி!

5 நிமிட வாசிப்பு

ஐபிஎல்: கோலி அணியை வீழ்த்திய டோனி அணி!

ஒன்றிய அரசுக்கு பயப்படும் விஜய்: தயாரிப்பாளர் கே.ராஜன்

3 நிமிட வாசிப்பு

ஒன்றிய அரசுக்கு பயப்படும் விஜய்: தயாரிப்பாளர் கே.ராஜன்

வியாழன் 2 செப் 2021