மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 2 செப் 2021

சந்தனத்தேவன் படத்தை தொடரும் ஆர்யா: காரணம் என்ன?

சந்தனத்தேவன் படத்தை தொடரும் ஆர்யா: காரணம் என்ன?

மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர்.சுந்தரம் தயாரிப்பில் பானுமதி, ஜி.எம்.பஷீர், எம்.ஆர்.ராதா நடிக்க எம்.நோட்டர்னி இயக்கி 1939 ஜூன் 3 அன்று வெளியான தமிழ் படம் சந்தனத்தேவன்

கடந்த 2017ஆம் ஆண்டு ஜனவரி 13ஆம் தேதியன்று சந்தனத்தேவன் எனும் பெயரில் அமீர் இயக்கத்தில் இந்தப் படத்திற்கான தொடக்கவிழா சென்னை சாலிக்கிராமம் பிரசாத் ப்ரிவியூ தியேட்டரில் நடைபெற்றது

சந்தனத்தேவன் படத்தில் ஆர்யா, ஆர்யாவின் சகோதரரான சத்யா மற்றும் அமீர் மூவருமே முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இது ஜல்லிக்கட்டை மையமாக வைத்து உருவாகத் துவங்கிய திரைப்படம். 2017ல் நடைபெற்ற ‘மெரினா புரட்சி’தான் இந்தப் படம் உருவாகக் காரணமாக இருந்தது.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு 35 நாட்கள் நடந்த பின்பு,திட்டமிடப்பட்ட பட்ஜெட்டை கடந்ததால், பைனான்சியர்கள் நிதி உதவி செய்யாததால் படப்பிடிப்பை அமீரால் தொடர்ந்து நடத்த முடியவில்லை.

இது சம்பந்தமாக அசோக் தியாகராஜன் இயக்கத்தில் தயாரான மாயநதி இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா 20.01.2020 அன்று சென்னையில் நடைபெற்றது.இந்த விழாவில் தனது 'சந்தனத்தேவன்'படம் மீண்டும் தொடங்கப்படாமல் இருப்பதற்கான காரணத்தை தன் பேச்சில் குறிப்பிட்டார் அமீர்.

“சந்தனத்தேவன் என்ற ஒரு படத்தைத் தொடங்கினேன். அது ஒரு பிரீயட் ஃபிலிம். 35 நாட்கள் படப்பிடிப்பு முடிந்து, இப்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நான்தான் அந்தப் படத்துக்குத் தயாரிப்பாளர். அதுக்கு ஒரு பைனான்சியர்தான் பணம் கொடுத்தார். அதற்குப் பிறகு 10 பைனான்சியர்கள் வரை என்னைச் சந்தித்தார்கள்.

அவர்கள் அனைவருமே எனக்குப் போட்ட கண்டிஷன் என்னவென்றால்,

நீ பொதுவெளியில் பேசக்கூடாது அரசியலை எதிர்த்து கருத்துச் சொல்லக் கூடாது, ஒன்றிய அரசு - மாநில அரசு இரண்டையும் ரொம்பவே பேசுகிறீர்கள். அதனால் சிக்கல் இருக்கிறது என்றார்கள். இதற்கு நீங்கள் உத்தரவாதம் அளித்தால் பைனான்ஸ் பண்றோம் என்று தெரிவித்தார்கள்.அப்போது என்னை விற்று சினிமா எடுப்பது பைத்தியக்காரத்தனம் என நினைத்துக் கொள்வேன். அப்படியொரு சினிமாவை என்னால் செய்ய முடியாது. நான் நானாகவே இருப்பேன்" என்று கூறினார் அமீர்.

ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்து வலைதளத்தில் வெளியான பீரியட் தமிழ் படம் சார்பட்டா பரம்பரை. நேரடியாக திரையரங்கில் வெளியாகவில்லை என்றாலும் இந்தப் படம் சம்பந்தமான ஆதரவு, எதிர்ப்பு கருத்துக்கள், விமர்சனங்கள் நவீன சமூக வலைதளங்களில் நிரம்பிவழிந்தன. இதன் காரணமாக எந்த உத்தரவாதமும், வணிக மதிப்பீடும் இல்லாமல் இருந்த நடிகர் ஆர்யா நடிக்கும் படங்களின் வணிக மதிப்பு உயர்ந்துவிட்டதாக கருதப்படுகிறது. அதன் காரணமாக ஆர்யாவை புதிய படங்களில் நடிக்க வைக்க தயாரிப்பாளர்கள் முயற்சித்து வரும் சூழ்நிலையில் சந்தனத்தேவன் படத்தின் படப்பிடிப்பை தொடர்ந்து நடத்தி முடித்து படத்தை வெளியிடும் முயற்சியில் ஆர்யா ஈடுபட தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

ஆர்யா இப்போது சுந்தர்.சியின் அரண்மணை 3 மற்றும் ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விஷாலுடன் இணைந்துள்ள எனிமி ஆகிய படங்களில் நடித்து முடித்திருக்கிறார்

இதனைத் தொடர்ந்து இயக்குநர்கள் சாந்தகுமார் மற்றும் சக்திசெளந்தர்ராஜன் ஆகியோர் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. அவற்றில் ஏதாவதொரு படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் சந்தனத்தேவன் படத்தை தொடர்ந்து முடிப்பதை பற்றிய பணிகளில் ஆர்யா கவனம் செலுத்த தொடங்கியுள்ளார் என்கின்றனர்.

போதையேறி புத்திமாறி படத்தைத் தயாரித்து வெளியிட்ட ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இப்போது உதயநிதியின் மனைவி கிருத்திகா உதயநிதி இயக்கும் படத்தைத் தயாரித்துவருகிறது. இந்நிறுவனம் இப்போது சந்தனதேவன் படத்தை பொறுப்பெடுத்து தயாரிக்க பேச்சுவார்த்தை நடத்தி முடிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது

ஒப்புக்கொண்ட புதியபடங்கள் இருக்கும் நிலையிலும் சில பெரிய தயாரிப்பு நிறுவனங்கள் ஆர்யாவை வைத்துப் புதிய படம் தொடங்க ஆர்வம் காட்டும் நேரத்தில் ஏற்கெனவே நின்று போன படத்தைத் தொடங்க ஆர்யா தீவிரம் காட்டுவது எதனால் என்றால்? அவர் தம்பிதான் காரணம் என்கிறார்கள். ஆர்யாவின் தம்பி சத்யா சில படங்களில் நடித்தும் பெரிதாகக் கவனம் பெறவில்லை. அவர் சந்தனதேவன் படத்தில் முக்கிய வேடமொன்றில் நடிக்கிறாராம். அப்படம் வெளியானால் திரையுலகில் தம்பி சத்யாவுக்கு நல்ல இடம் கிடைக்கும் என்பதால் அப்படத்தைத் தொடங்கும் முயற்சியில் ஆர்யா ஆர்வம் காட்டுவதாகவும் கூறப்படுகிறது.

-இராமானுஜம்

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

4 நிமிட வாசிப்பு

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

3 நிமிட வாசிப்பு

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

‘எனிமி’க்கு எனிமியான அண்ணாத்த

10 நிமிட வாசிப்பு

‘எனிமி’க்கு எனிமியான அண்ணாத்த

வியாழன் 2 செப் 2021