மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 30 ஆக 2021

விடுதலையில் நடிப்பதே பாக்கியம்: நடிகர் சூரி

விடுதலையில் நடிப்பதே பாக்கியம்: நடிகர் சூரி

நகைச்சுவை நடிகரான சூரி, தற்போது ‘விடுதலை’ என்ற படத்தில் கதையின் நாயகனாக நடித்து வருகிறார். இந்தப் படத்தை இயக்குநர் வெற்றி மாறன் இயக்கி வருகிறார். ‘அசுரன்’ படத்துக்குப் பிறகு வரவிருக்கும் வெற்றி மாறனின் திரைப்படம் இது என்பதால் விடுதலை படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்தப் படத்தில் நடிக்கக் கிடைத்த வாய்ப்பு மற்றும் பட அனுபவங்கள் பற்றி தனது பிறந்தநாள் அன்று நடிகர் சூரி கூறியதாவது,

“ஒரு காலத்தில் சினிமாவில் ஒரே ஒரு காட்சியிலாவது ஓரமாக வந்துவிட மாட்டோமா என்று ஏங்கி இருக்கிறேன். சின்ன வேடங்களில் நடிக்கும்போது நமக்கும் கை தட்டல் கிடைத்துவிடாதா என்று ஆசைப்பட்டிருக்கிறேன். காமெடியனாக பெயர் வாங்க விரும்பினேன். இவை அனைத்துமே இன்றைக்கு நடந்தே விட்டது.

கதையின் நாயகனாக நடிக்க நிறைய வாய்ப்புகள் பல ஆண்டுகளாக வந்து கொண்டுதான் இருந்தன. காமெடியனாகக் கிடைத்த மக்கள் ஆதரவை தவறாகப் பயன்படுத்திவிடக் கூடாதே என்று நான்தான் அவற்றைத் தவிர்த்து வந்தேன்.

காமெடியன் நாயகனாகும்போது காமெடி கதையில்தான் நடிக்க வேண்டும் என்பதென்ன கட்டாயமா..? அதைத்தான் பிற நடிகர்களுடன் நடிக்கும்போதே பண்ணுகிறோமே என்று நினைத்திருக்கிறேன்.

எனவே அப்படி களம் இறங்கும்போது அது கவனிக்க வைக்கும் நம் நடிப்பை வெளிக்கொண்டுவரும் கதையாக இருக்க வேண்டும் என ஆசைப்பட்டேன். என் இன்னொரு பக்கத்தைக் காட்டும் கதைக்காகத்தான் காத்திருந்தேன். ஆனால், அது வெற்றி அண்ணனின் படமாக அமையும் என்று எதிர்பார்க்கவில்லை.

அவரிடமிருந்து அழைப்பு வந்ததே ஒரு கனவு போல இருந்தது. அவர் அழைத்ததே ஆச்சரியமாக இருக்க இன்னொரு ஆச்சரியமாக உடனேயே கையில் அட்வான்ஸையும் கொடுத்தார். அடுத்து பல வெற்றிப் படங்களைத் தயாரித்த எல்ரெட் குமார்தான் தயாரிப்பாளர்தான் என்றதும் கூடுதல் மகிழ்ச்சியடைந்தேன். முதலில் சிவகார்த்திகேயனிடம்தான் இதைப் பகிர்ந்தேன்.

இந்தப் படத்தில் நடிப்பது பற்றி ‘அசுரன்’ படத்துக்கு முன்பேயே பேசினார்கள். ஆனால், ‘அசுரன்’ படம் பெற்ற மாபெரும் வெற்றிக்குப் பிறகு முன்னணி நடிகர்கள் படங்கள் வெற்றி அண்ணன் முன்னால் வரிசை கட்டி நின்றது. அவ்வளவுதான். நம்ம படம் தாமதம் ஆகலாம் என்று அப்போது நினைத்தேன். ஆனால், வெற்றி அண்ணன் உடனடியாக இந்தப் படத்தைத் தொடங்கியது அவரது பெரிய மனதைக் காட்டியது.

படத்தின் விளம்பரம் பேப்பரில் வந்த அன்று முந்தைய இரவு தூக்கமே வரவில்லை. சிறுவயதில் தீபாவளிக்கும் முதல் நாள் தூங்காமல் விழித்திருப்போமே அது போன்ற மனநிலையில் இருந்தேன். அதேபோல் விஜய் சேதுபதி இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பது நான் செய்த புண்ணியம்.

படத்தில் நடிகர்கள், தொழில் நுட்பக் கலைஞர்கள் உட்பட அனைவருமே தங்களது அபார உழைப்பைக் கொடுத்திருக்கிறார்கள். இந்தப் படத்தைப் பொறுத்தவரை லோகேஷன்தான் முதல் நாயகன். இரண்டாவதுதான் கதை. அதன் பின்னர்தான் நடிகர்கள்.

8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அந்த மலைக் கிராமத்துக்குச் செல்லவே மூன்று மணி நேரம் ஆகும். அந்த ஊரில் மொத்தமே 75 குடும்பங்கள்தான் இருக்கிறார்கள். எங்கள் படக் குழுவுக்குச் சிறப்பான ஒத்துழைப்பைத் தந்தார்கள்" என்றார்.

-இராமானுஜம்

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

3 நிமிட வாசிப்பு

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

பிக்பாஸ் அக்‌ஷரா ரெட்டியின் மறுமுகம்!

6 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் அக்‌ஷரா ரெட்டியின் மறுமுகம்!

முதல்வர் வீட்டின் முன் உண்ணாவிரதம் இருப்பேன்: டி.ராஜேந்தர்

8 நிமிட வாசிப்பு

முதல்வர் வீட்டின் முன் உண்ணாவிரதம் இருப்பேன்: டி.ராஜேந்தர்

திங்கள் 30 ஆக 2021