சுதந்திரப் போராட்ட வீரர்களின் படங்கள்: புறக்கணித்த ஆவணக் காப்பகம்!

entertainment

இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு பல்வேறு துறைகளில் நாடு முன்னேற்றியிருப்பதைச் சுட்டிக்காட்டும் வகையில் ‘அசாதி கா அம்ரித் மகோத்சவ்’ என்ற பெயரில் பல்வேறு துறையினரின் சாதனைகள் கொண்டாடப்பட்டு வருகின்றன.

அந்த வரிசையில் திரைப்படத் துறையில் இந்தியாவின் சாதனைகளாக ‘சித்ராஞ்சலி 75 – ஓர் பிளாட்டினம் பனோராமா’ என்ற பெயரில் ஒரு கண்காட்சி திரையிடலை புனேயில் உள்ள தேசிய திரைப்பட ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ளது.

இந்தச் சிறப்புத் திரையிடலில் ‘சினிமா லென்ஸ் வழியே சுதந்திரப் போராட்டம்’, ‘சமுதாய மாற்றத்தை ஏற்படுத்திய திரைப்படங்கள்’, ‘சுதந்திரப் போராட்ட வீரர்களை வணங்குவோம்’ என்ற தலைப்புகளில் இந்திய அளவில் 75 படங்களைத் தேர்வு செய்து வெளியிட்டுள்ளார்கள்.

இதில் ‘சினிமா லென்ஸ் வழியே சுதந்திரப் போராட்டம்’ என்ற பிரிவில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த வீரபாண்டிய கட்டபொம்மன் (1959) படம் தேர்வாகியுள்ளது.

‘சமுதாய மாற்றத்தை ஏற்படுத்திய திரைப்படங்கள்’ என்ற பிரிவில் இயக்குநர் கே.சுப்ரமணியம் இயக்கிய ‘சேவா சதன் (1938)’, ‘தியாக பூமி (1939)’ ஆகிய படங்களும், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த ‘அந்த நாள் (1954)’, எம்ஜிஆர், ஜெயலலிதா நடித்த ‘நம் நாடு(1969)’, கமல்ஹாசன், ஷாரூக் கான் நடித்த ‘ஹேராம் (2000)’ ஆகிய படங்கள் தேர்வாகியுள்ளன.

‘சுதந்திரப் போராட்ட வீரர்களை வணங்குவோம்’ என்ற பிரிவில், இயக்குநர் தாதா மிராஸி இயக்கிய ‘இரத்தத் திலகம் (1963), மணிரத்னம் இயக்கிய ‘ரோஜா (1992) படமும், ராதா மோகன் இயக்கிய ‘பயணம் (2011)’ ஆகிய படமும் இடம் பிடித்துள்ளன.

இந்தப் பட்டியலில் இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி, பெங்காலி, அசாமிஸ், குஜராத்தி, பஞ்சாபி, ஒடியா ஆகிய மொழிப் படங்கள் மற்றும் 2 மெளனப் படங்கள் உள்ளிட்ட 75 படங்கள் இடம் பெற்றுள்ளன.

இதில் தமிழில் சுதந்திரப் போராட்ட வீரர்களின் கதையைச் சொன்ன கப்பலோட்டிய தமிழன், சிவகங்கை சீமை, பூலித்தேவன் ஆகிய முக்கியமான படங்கள் என்ன காரணத்தாலோ இடம்பெறவில்லை.

இதேபோல் சமுதாய மாற்றத்தை ஏற்படுத்திய திரைப்படங்கள் பட்டியலில் இடம் பெறுவதற்கு 100-க்கும் மேற்பட்ட படங்கள் காத்திருந்தும் ‘ஹே ராம்’ போன்ற ஒரேயொரு இக்கால படத்தைத் தேர்வு செய்திருப்பதும் பொருத்தம் இல்லாதது.

மேலும் இந்திய ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டான படமாக விருதினைப் பெற்றிருந்த ‘பாரத விலாஸ்’ படத்தினையும் தேர்வு செய்யவில்லை.

**-இராமானுஜம்**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *