விமல் பொய் பேசுகிறார்: மன்னர் வகையறா விநியோகஸ்தர்!

entertainment

நடிகர் விமல், பைனான்சியர் கோபி மீதும் அவருடைய நண்பர் தயாரிப்பாளர் சிங்காரவேலன் மீதும் கொடுத்துள்ள மோசடி புகார் குறித்து மன்னர் வகையறா படத்தின் விநியோகஸ்தர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், “ மன்னர் வகையறா படத்தின் மீது ஒரு வித ஈர்ப்பு ஏற்பட்டதால் அந்த படத்தின் தமிழக விநியோக உரிமையை நடிகர் விமலிடம் பேசி ரூ.3 கோடிக்கு வியாபாரம் பேசி ரூ.1.5 கோடி எம்.ஜி.ஆகவும், மீதி ரூ.1.5 கோடி திருப்பித்தரக்கூடிய டெபாசிட் எனவும் ஒப்பந்தம் செய்தோம்.

மன்னர் வகையறா இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் போதே ஒப்பந்தம் செய்து முன்பணமாக ரூ. 1 கோடியை நடிகர் விமலிடம் கொடுத்தேன். மீதமுள்ள இரண்டு கோடியை மன்னர் வகையறா பட வெளியீட்டிற்கு முதல் நாள் தருவதாக கூறியிருந்தேன்.

மன்னர் வகையறா பட வெளியீட்டிற்கு முன்பு விமலுக்கு ஏற்கனவே கடன் கொடுத்திருந்த மதுரை அன்பு, அழகர், எல்.எம்.எம் முரளி, அல்தாப், மற்றும் விமல் செட்டில் செய்ய வேண்டிய சுரபி மோகன் ரூ 1.1 கோடி ரூபாயை செட்டில் செய்தால் மட்டுமே மன்னர் வகையறா படம் வெளியாகும் என விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பு கூறிவிட்ட காரணத்தால் விமலுக்கு கொடுக்க வேண்டிய ரூ. 2 கோடியும், ரூ 1.1 கோடியை விநியோகஸ்தர்கள் சங்க கூட்டமைப்பில் செலுத்தும்படி விமல் கூறிவிட்டார்.

மீத பணம் 90 லட்சத்தில் ரூ.35 லட்சத்தை டிஜிட்டல் சர்வீஸ் புரொவைடர்களுக்கு செலுத்திவிட்டு மீதி தொகை ரூ.55 லட்சத்தை நடிகர் விமலிடம் ஒப்படைத்துவிட்டேன். அந்த பணத்தை வைத்து TV , Paper, Poster, Vinyl மற்றும் Fefsiக்கு செலுத்த வேண்டிய பாக்கித் தொகை என நடிகர் விமலால் பிரித்து கொடுக்கப்பட்டுவிட்டது. சேட்டிலைட் உரிமையை பெற்ற Zee Network நிறுவனம் படத்தை ஒளிபரப்பிய பின்னரே பணம் தரப்படும் என கூறிவிட்டது.

இதன் காரணமாக படத்தின் பைனான்சியர் கோபிக்கு செட்டில் செய்ய விமலிடம் பணம் இல்லை. அதனால் கோபியிடம் இருந்து லேப் கிளியரன்ஸ் பெற முடியவில்லை.லேப் கிளியரன்ஸ் இல்லாமல் படத்தை வெளியிட முடியாது என்பதால், படத்தின் ஏரியா விநியோக உரிமையை பெற்றிருந்த விநியோகஸ்தர்களையும், நடிகர் விமலையும் அழைத்து கொண்டு, தயாரிப்பாளர் சிங்காரவேலன் அலுவலகத்திற்கு சென்றோம்.

பணம் செட்டிலாகாமல் கோபியிடமிருந்து லேப் கிளியரன்ஸ் எப்படி வாங்க முடியும் என்று கேள்வி கேட்ட சிங்காரவேலன் கையை பிடித்து கொண்டு, தன்னை காப்பாற்றுமாறு விமல் கெஞ்சியது என் கண்களில் அப்படியே நிற்கிறது.

அப்போது அனைத்து விநியோகஸ்தர்களும் என்னுடன் இருந்தனர். கோபிக்கு கொடுக்க வேண்டிய பணத்தை அடுத்தடுத்த படத்தில் நடித்து அந்த சம்பளத்தில் இருந்து தந்துவிடுவதாக விமல் கூறியதையடுத்து, கோபியிடம் எடுத்து சொல்லி, சிங்காரவேலன் உத்தரவாதம் அளித்ததையடுத்து கோபியிடமிருந்து லேப் கிளியரன்ஸ் வந்தது. ஆனால் இதையெல்லாம் மறந்தும், மறைத்தும் தனக்காக இரக்கப்பட்டவர்கள் மீதே மோசடி புகார் கொடுத்த நடிகர் விமல் போன்றவர்களால் தான் சினிமாவுக்கு பைனான்ஸ் தர பைனான்சியர்கள் பயப்படுகிறார்கள்

பல சோதனைகளை தாண்டி மன்னர் வகையறா படம் வெளிவந்ததும் அந்த படம் ரூ 1.3 கோடி அளவில் தான் வசூல் செய்தது. எனவே நான் கொடுத்திருந்த டெபாசிட் தொகையை திருப்பித் தர கேட்டு பலமுறை நடையாய் நடந்து வருகிறேன்.

ஆனால் விமலிடம் இருந்து எனக்கு சேர வேண்டிய பணம் வரவில்லை தற்போது நடக்கின்ற விஷயங்களை பார்த்தால் கோபி மற்றும் சிங்காரவேலன் ஆகியோரை ஏமாற்றியதை போல என்னையும் ஏமாற்றி விடுவாரோ ? என்று அச்சமாக உள்ளது. தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் தர்மம் மறுபடியும் வெல்லும் என்ற வாக்கியங்கள் தான் என்னை தைரியமாக வைத்திருக்கின்றன” எனக் குறிப்பிட்டுள்ளார்.

**இராமானுஜம்**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *