மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 29 ஆக 2021

விடாமுயற்சி: வெள்ளி வென்ற பவினா

விடாமுயற்சி: வெள்ளி வென்ற பவினா

டோக்கியோ பாராஒலிம்பிக்ஸ் டேபிள் டென்னிஸ் இறுதிச் சுற்றில் வெள்ளி வென்று சாதனை படைத்துள்ளார் இந்திய வீராங்கனை பவினாபென் படேல். அவருக்குப் பிரதமர் மோடி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உட்பட பலரும் வாழ்த்துகளைக் கூறி வருகின்றனர்.

மாற்றுத்திறனாளிகளுக்கான 16ஆவது பாரா ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது. இதில் 9 விளையாட்டுகளில் இந்தியாவைச் சேர்ந்த 54 வீரர்கள் வீராங்கனைகள் கலந்துகொள்கின்றனர்.

இதில் டேபிள் டென்னிஸ் போட்டியில் குஜராத்தைச் சேர்ந்த பவினா பென் படேல் கலந்துகொண்டார். மெஹ்சனா மாவட்டத்தில் உள்ள சந்தியா கிராமத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை ஹம்சுக்பாய். 12 வயதில் போலியாவால் பாதிக்கப்பட்டார். அதனால் அவரது கால்கள் வலுவிழந்தன.

அப்போது முதல் தனது வாழ்க்கையில் போராட்டத்தை தொடங்கிய பவினா , தனது கிராமத்தில் பள்ளி படிப்பை முடித்தார். அதனைத்தொடர்ந்து ஐடிஐ படிப்பதற்காக அகமதாபாத்திற்குச் சென்றார். அப்போது அவருக்கு டேபிள் டென்னிஸ் விளையாட்டு மீது ஈர்ப்பு ஏற்பட்டது. இதற்காகப் பயிற்சி எடுக்கத் திட்டமிட்டார். அந்த பயிற்சி வகுப்புக்கும் அவரால் எளிதாகச் செல்ல முடியவில்லை. பயிற்சி வகுப்புக்குச் செல்ல வேண்டுமானால் இரண்டு பேருந்துகள் மற்றும் ஒரு ஷேர் ஆட்டோ மாறிதான் செல்ல வேண்டும்.

எனினும் விடா முயற்சியுடன் தனது வாழ்க்கை மற்றும் விளையாட்டு பயணத்தைத் தொடர்ந்த பவினா இன்று பாராலிம்பிக்ஸ் டேபிள் டென்னிஸ் போட்டியில் வெள்ளி வென்று சாதனை படைத்துள்ளார்.

டோக்கியோவில் 5ஆவது நாளாக நேற்று நடைபெற்ற டேபிள் டென்னிஸ் போட்டியின் பெண்கள் ஒற்றையர் ‘சி4’ பிரிவு (காலில் பாதிப்பு அடைந்தவர்கள்) அரையிறுதி ஆட்டத்தில் பங்கேற்ற பவினா, உலக தரவரிசையில் 3ஆவது இடத்தில் உள்ள சீனாவின் ஜாங் மியாவுடன் மோதினார்.

34 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தில், 7-11, 11-7, 11-4, 9-11, 11-8 என்ற செட் கணக்கில் ஜாங் மியாவை தோற்கடித்து இறுதி போட்டிக்கு முன்னேறினார். இதன்மூலம் பாராலிம்பிக்ஸ் டேபிள் டென்னிஸ் போட்டியில் இறுதி ஆட்டத்துக்கு முன்னேறிய முதல் இந்தியர் என்ற சாதனையைப் படைத்தார். ஏற்கனவே ஜாங் மியாவுடன் 11 முறை மோதி தோல்வியுற்ற பவினா நேற்று வெற்றி பெற்றார்.

இந்நிலையில் இன்று (ஆகஸ்ட் 29) காலை நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் கலந்துகொண்டார் பவினா . உலகின் நம்பர் ஒன் வீராங்கனையான சீனாவின் ஜோவ் யிங்குடன் மோதினார். நேற்று ஜாங் மியாவை வென்றது போல் இன்று, ஜோவ் யிங்கையும் வீழ்த்தி வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஜோவ் யிங்கிடம் இறுதிப்போட்டியில் 7-11, 5-11, 6-11 செட் கணக்கில் தோல்வியுற்றார். இதன்மூலம் அவருக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது.

அவருக்குப் பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துப் பதிவிட்ட ட்வீட்டில், “பவினாவின் வாழ்க்கைப் பயணம் விளையாட்டுத் துறையை நோக்கி இளைஞர்கள் வருவதற்கு ஊக்குவிக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, “உங்கள் சாதனையை இந்தியா பாராட்டுகிறது. உங்களது வெற்றியால் இந்தியா பெருமைகொள்கிறது” என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தனது மகளின் வெற்றி குறித்து பவினாவின் தந்தை ஹம்சுக்பாய் கூறுகையில், “பவினா எங்களைப் பெருமைப்படுத்திவிட்டார். அவருக்குப் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப் போகிறோம். அவருடைய வெற்றியை நாங்கள் கொண்டாடப்போகிறோம்” என்று மகிழ்ச்சி தெரிவித்தார்.

பவினா கணவரும், கிரிக்கெட் வீரருமான, நிகுல் பட்டேல், “பவினாவின் வெற்றிக்கு விடா முயற்சிதான் காரணம். எதைச் செய்தாலும் விடா முயற்சியுடன் தான் செய்வார்” என்றார்.

-பிரியா

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

4 நிமிட வாசிப்பு

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

3 நிமிட வாசிப்பு

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

‘எனிமி’க்கு எனிமியான அண்ணாத்த

10 நிமிட வாசிப்பு

‘எனிமி’க்கு எனிமியான அண்ணாத்த

ஞாயிறு 29 ஆக 2021