களம் திரும்பும் வடிவேலு

entertainment

நடிகர் வடிவேலு கதாநாயகனாக நடித்த முதல்படம் இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி.2006 ஆம் ஆண்டு இப்படம் வெளியாகி வெற்றி பெற்றது. அப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகமான 24 ஆம் புலிகேசி படத்தை இயக்குநர் சிம்புதேவன் இயக்கத்தில் 2018 ஆம் ஆண்டு முதல் பாகத்தை தயாரித்த இயக்குநர் ஷங்கர் தொடங்கினார்.

இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய சில நாட்களில் நின்றுபோனது. வடிவேலு மற்றும் இயக்குநர் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக படப்பிடிப்பு நின்றுபோனது.

வடிவேலு ஒத்துழைப்புக் கொடுக்காததால் படப்பிடிப்பு நடத்த முடியாத நிலை, இதனால் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என இயக்குநர் ஷங்கர் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளித்திருந்தார்.

இது தொடர்பாகப் பலமுறை பேசியும் வடிவேலு தரப்பில் ஒத்துழைப்பு இல்லாததால் வடிவேலு நடிக்கும் படங்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பதில்லை என்று தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவு செய்தது.

சில ஆண்டுகளாக நீடித்த இச்சிக்கல் இப்போது முடிவுக்கு வந்துள்ளது. நேற்று மாலை(27.08.2021)தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “எஸ்.பிக்சர்ஸ் ஷங்கர் ’ வடிவேலு மீது புகார் அளித்திருந்தார். மேற்படி புகார் சம்பந்தமாக, தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள், நடிகர் வடிவேலு மற்றும் எஸ்.பிக்சர்ஸ் நிறுவனத்துடன் பேசி மேற்கண்ட பிரச்சினைக்கு சுமுகமாகத் தீர்வு காணப்பட்டுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.

இச்சிக்கலில் இயக்குநர் ஷங்கர் நடிகர் வடிவேலு மட்டுமின்றி லைகா நிறுவனமும் மூன்றாவது தரப்பாக இருக்கிறது. இதனால், இயக்குநர் ஷங்கர் கொடுத்த முன்பணத்தை ஈடுசெய்யும் விதமாக லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் புதிய படமொன்றில் நடிக்க வடிவேலு ஒப்புக்கொண்டாராம். இதை இயக்குநர் ஷங்கரும் ஏற்றுக் கொண்டு வடிவேலு மீதான புகாரைத் திரும்பப் பெற்றுக் கொண்டாராம். இதன்படி இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி 2 படம் கைவிடப்படுகிறது.

இரண்டு நாட்களுக்கு முன்பாக நடந்த இந்தப் பேச்சுவார்த்தையின்போது, தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகளோடு, இயக்குநர் ஷங்கர் சார்பில் நடிகர்கள் சூர்யா, கார்த்தி, ஜோதிகா ஆகியோர் மற்றும் கால்ஷீட் மேனேஜர் தங்கதுரையும் லைகா நிறுவனத்தின் சார்பில் அதன் தலைமைச் செயல் அதிகாரி தமிழ்க்குமரனும் நடிகர் வடிவேலுவும் கலந்து கொண்டார்களாம்.

சில ஆண்டுகளாக நீடித்த நடிகர் சிம்பு சிக்கலைத் தீர்த்த தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் இப்போது வடிவேலு-ஷங்கர் சம்பந்தப்பட்ட சிக்கலையும் தொடர் பேச்சுவார்த்தைகள் மூலமாக சுமுகமாகத் தீர்த்து வைத்திருக்கிறது.

அதிமுக ஆட்சியில் இருந்த கடந்த பத்தாண்டுகளாக நடிகர் வடிவேலுவை தங்கள் படங்களில் நடிக்க வைக்க தயக்கம் காட்டினார்கள். அதையும் கடந்து அவரை புதிய படங்களில் நடிக்க வைக்க விரும்பிய இயக்குநர்கள், தயாரிப்பாளர்களிடம் பழைய நினைப்பில் ஒரு நாளைக்கு தன்னோட சம்பளம் என பத்து விரல்களையும் காட்டி லட்சங்கள் என்றதால் மெளனத்தை பதிலாக்கி திரும்பி வந்த தயாரிப்பாளர்கள் ஏராளம் என்கின்றனர்.

இந்த நிலையில் ஆட்சிமாற்றத்துக்கு பின் கொரோனா நிதி கொடுக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி தமிழக முதல்வரை சந்தித்து காசோலை கொடுக்கும் போது தனது நிலையை மனம் உருக கூறியதால் தொழில்ரீதியாக வடிவேலுக்கு இருக்கும் பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டு வர கீரீன் சிக்னல் ஆளும் அரசு தரப்பில் கொடுக்கப்பட்டது.

வடிவேலுவுக்கு இருந்த மிகப்பெரும் பிரச்சினை தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் ரெட் கார்டு. அது இப்போது முழுமையாக நீக்கப்பட்டுவிட்டது.

தமிழ் சினிமாவில் வடிவேலு கொடி பறந்த காலத்தில் வடிவேலு கால்ஷீட்டுக்காக தயாரிப்பாளர்கள் காத்திருந்தனர். அதே நிலைமை நடிகர் வடிவேலுவுக்கு வந்திருக்கிறது.

கடந்த பத்தாண்டுகளில் தமிழ் சினிமாவின் முகம் மாறியிருக்கிறது. வடிவேலுவுக்கு மாற்றாக பல்வேறு காமெடி நடிகர்கள், கதாநாயகன்களே பல படங்களில் காமெடி கேரக்டரையும் செய்து வருகின்றனர்.

ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், விக்ரம் என பயணித்த வடிவேலு இன்றைய இளம் தலைமுறை கதாநாயகர்களுக்கு இணையாக, கல்லூரி மாணவராக நடிக்க முடியாது.

கதாபாத்திரங்களின் நடிகராக மாறிய ராஜ்கிரண், பார்த்திபன் போன்று மாறவேண்டிய கட்டாயம் வடிவேலுவுக்கு உண்டு அப்போதுதான் இன்றைய இளம் கதாநாயகர்களின் படங்களில் வடிவேலு பயணிக்க முடியும் அல்லது கதையின் நாயகனாக வடிவேலு சொந்தமாக தயாரித்து தன்னை நிலைநிறுத்திக்கொள்ள வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

சமூக வலைத்தளங்களில் மீம்ஸ்களின் கதாபாத்திரமாக வடிவேலுவை சித்தரித்தவர்கள், அதனை ரசித்தவர்கள் அகன்ற திரையில் அவரது படத்தை பார்க்க தியேட்டருக்கு வருவார்களா என்கிற ஐயம் தயாரிப்பாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

**-இராமானுஜம்**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *