மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 25 ஆக 2021

கோலாகலமாகத் தொடங்கியது பாரா ஒலிம்பிக் போட்டிகள்!

கோலாகலமாகத் தொடங்கியது பாரா ஒலிம்பிக் போட்டிகள்!

டோக்கியோவில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நேற்று (ஆகஸ்ட் 24) இரவு கோலாகலமாகத் தொடங்கியுள்ளது. தொடக்க விழா நிகழ்ச்சியில் இந்திய அணிக்கு தலைமை தாங்கி ஈட்டி எறிதல் வீரர் தேக் சந்த் தேசியக் கொடியை ஏந்தி சென்றார்.

உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டிகள் முடிந்ததும் பாரா ஒலிம்பிக் போட்டி நடத்தப்படும். கொரோனா பரவல் காரணமாக ஓராண்டு தள்ளிவைக்கப்பட்ட 32ஆவது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 23ஆம் தேதி முதல் கடந்த ஆகஸ்ட் மாதம் 8ஆம் தேதி வரை நடந்தது. இந்த நிலையில் மாற்றுத்திறனாளிகளுக்கான 16ஆவது பாரா ஒலிம்பிக் போட்டி டோக்கியோவில் நேற்று தொடங்கி செப்டம்பர் 5ஆம் தேதி வரை நடக்கிறது.

இதில் 163 நாடுகளைச் சேர்ந்த சுமார் 4,500 மாற்றுத்திறனாளி வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு தங்களது திறமையை வெளிக்காட்ட இருக்கிறார்கள். டோக்கியோவில் அரங்கேறும் பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் 54 வீரர், வீராங்கனைகள் கொண்ட அணி பங்கேற்கிறது. இவ்வளவு அதிக வீரர்களை கொண்ட இந்திய அணி கலந்து கொள்வது இதுவே முதன்முறையாகும்.

தொடக்க விழா நிகழ்ச்சியில் இந்திய அணிக்கு தலைமை தாங்கி ஈட்டி எறிதல் வீரர் தேக் சந்த் தேசியக் கொடியை ஏந்தி சென்றார். முன்னதாக தமிழக வீரர் மாரியப்பன் தேசியக் கொடியை ஏந்தி செல்வார் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவருடன் அவர் தொடர்பில் இருந்ததால் மாரியப்பனுக்கு இந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. மாரியப்பன் உள்ளிட்ட ஐந்து பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தொடக்க விழாவில் மாரியப்பன் பங்கேற்க முடியாவிட்டாலும் போட்டியில் கலந்து கொள்வதில் சிக்கல் இருக்காது என்று தெரிகிறது.

கடந்த 2016 ரியோ பாரா ஒலிம்பிக் போட்டியின் உயரம் தாண்டுதலில் தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு தங்கப்பதக்கம் வென்றார். ஈட்டி எறிதலில் ஜகாரியாவும் தங்கம் வென்றார். இவர்கள் மீது அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது. வில் வித்தை, பேட்மிண்டன், துப்பாக்கிச் சுடுதல், நீச்சல், டேபிள் டென்னிஸ், டேக்வாண்டோ, பளுதூக்குதல் உட்பட ஒன்பது விளையாட்டுகளில் இந்தியா கலந்து கொள்கிறது.

இந்தப் போட்டிகளில் பங்கேற்க உள்ள இந்திய வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி, அரசியல் தலைவர்கள், முக்கிய பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் எனப் பல்வேறு தரப்பினர் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்தியாவைப் பெருமைப்படுத்தும் விதமாக இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, தனது ட்விட்டர் பக்கத்தில், டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் பங்கேற்க உள்ள இந்திய வீரர்களுக்கு தனது வாழ்த்துகளையும், ஆதரவையும் தெரிவித்து, இந்திய வீரர்கள் வெற்றி கோப்பையுடன் திரும்புவார்கள் என்று நம்புகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

-ராஜ்

என்னை கைது செய்ய வந்தால்...: கங்கனா

2 நிமிட வாசிப்பு

என்னை கைது செய்ய வந்தால்...: கங்கனா

ஐந்து உணர்வுகள்: ஞான ராஜசேகரன் ஆதங்கம்!

2 நிமிட வாசிப்பு

ஐந்து உணர்வுகள்: ஞான ராஜசேகரன் ஆதங்கம்!

மாநாடு ரிலீஸ் ஆனது எப்படி?

10 நிமிட வாசிப்பு

மாநாடு ரிலீஸ் ஆனது எப்படி?

புதன் 25 ஆக 2021