மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 23 ஆக 2021

தியேட்டர் டிக்கெட் கட்டணம் உயர்வா?

தியேட்டர் டிக்கெட் கட்டணம்  உயர்வா?

தமிழகத்தில் இருக்கும் சினிமா தியேட்டர்களை இன்று திறக்கலாம் என்று தமிழக அரசு அனுமதியளித்ததையடுத்து பல்வேறு ஊர்களில் இருக்கும் தியேட்டர்களில் நேற்று காலையில் இருந்து துப்புறவு பணிகள் நடைபெற்றது.

பெருநகரங்கள், உடனடியாக படங்கள் திரையிடக்கூடிய வசதியுள்ள திரையரங்குகளில் பழைய படங்கள் திரையிடப்பட்டுள்ளது

தியேட்டர்கள் திறப்பு குறித்து தமிழ்நாடு மல்டிபிளக்ஸ், மற்றும் திரையரங்குகள் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவரான திருப்பூர் சுப்ரமணியம் அரசு அறிவித்துள்ள நோய்த் தடுப்பு பாதுகாப்பு ஏற்பாடுகளை அனைத்துத் தியேட்டர் உரிமையாளர்களும் பின்பற்றுவார்கள் என்று கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியுள்ளதாவது “தமிழகத்தில் இப்போது 1,100 திரையரங்குகள் உள்ளன.. கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய கோவை மண்டலத்தில் மட்டும் 168 திரையரங்குகள் உள்ளன.

தற்போது கொரோனா தொற்று படிப்படியாகக் குறைந்து வரும் நிலையில் திரையரங்குகளைத் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அரசின் வழிகாட்டுதலின்படி 50 சதவீதப் பார்வையாளர்களுடன் திரையரங்குகளைச் செயல்படுத்தவுள்ளோம்.

திரையரங்கப் பணியாளர்களுக்கு ஏற்கெனவே நாங்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுத்துவிட்டோம். அரசின் சிறப்பு முகாம்கள் மூலமாகவும், தனியார் மருத்துவமனைகளில் எங்களது செலவிலும் பணியாளர்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுவிட்டது.

தடுப்பூசி செலுத்திய பணியாளர்கள் அனைவரும் ‘நான் தடுப்பூசி செலுத்தி விட்டேன்’ என்பதை அறிவிக்கும் விதமாக ‘பேட்ச்’ ஒன்றை அணிந்துகொள்ளும் வகையில் திட்டம் ஒன்றைச் செயல்படுத்தவுள்ளோம். அப்போதுதான் திரையரங்குக்கு வரும் மக்களுக்கும் எங்கள் மீது நம்பிக்கை வரும்.

தற்போதைய சூழலில் தமிழில் ‘அரண்மனை – 3’, ‘சிவக்குமாரின் சபதம்’, ‘லாபம்’ உள்ளிட்ட திரைப்படங்களும், இந்தி நடிகர் அக்சய்குமார் நடித்த ‘பெல்பாட்டம்’, ‘கான்ஜுரிங் – 3’ உள்ளிட்ட சில திரைப்படங்களும் வெளியீட்டுக்குத் தயாராக உள்ளன. மேலும் அடுத்தடுத்து சில திரைப்படங்கள் திரைக்கு வரவுள்ளன.

தமிழகத்தில் இயல்பு வாழ்க்கை என்பது தற்போது திரும்பிக் கொண்டிருக்கிறது. பொதுமக்களில் பெரும்பாலானவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். ஓட்டல்கள், கடைகள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்டவை வழக்கம்போல் செயல்படத் தொடங்கி விட்டன. இதனால் பொதுமக்களும் திரையரங்குகளுக்கு இயல்பாக வரத் தொடங்குவார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.

வாரத்தில் சனி, ஞாயிறு தவிர்த்து பிற நாட்களில் திரையரங்குகளுக்கு வரும் கூட்டம் 40 சதவீதம் முதல் 50 சதவீதம்வரை மட்டுமே இருக்கும் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். மக்கள் வழக்கம்போல் திரையரங்குகளுக்கு வரத் தொடங்கும்போது, திரையரங்குகளில் இயல்பு நிலை திரும்பும். இன்னும் இரண்டு வாரங்களில் அத்தகைய நிலை ஏற்படும் என நம்புகிறோம்.

இதற்காக டிக்கெட் கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் இல்லை. ஏற்கெனவே இருந்த கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும். கொரோனா தொற்று மேலும் குறையும்போது விரைவில் நூறு சதவீதப் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கிறோம்…” என்றார்.

இராமானுஜம்

விருதுகளை அள்ளிய அசுரன்!

2 நிமிட வாசிப்பு

விருதுகளை அள்ளிய அசுரன்!

கார்த்தி முடிவால் வட்டியில் சிக்கிய தயாரிப்பாளர்!

4 நிமிட வாசிப்பு

கார்த்தி முடிவால் வட்டியில் சிக்கிய தயாரிப்பாளர்!

ஐபிஎல்: மும்பையை வீழ்த்திய சென்னை சூப்பர் கிங்ஸ்!

6 நிமிட வாசிப்பு

ஐபிஎல்: மும்பையை வீழ்த்திய சென்னை சூப்பர் கிங்ஸ்!

திங்கள் 23 ஆக 2021