மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 20 ஆக 2021

லைகாவுக்கும் விஷாலுக்கும் இடையே உள்ள பிரச்சினை!

லைகாவுக்கும் விஷாலுக்கும் இடையே உள்ள பிரச்சினை!

விஷாலுக்கும், லைகாவுக்கும் இடையிலான பிரச்சினையானது 2016ல் துவங்கியது. முத்தையா இயக்கத்தில் விஷால் நடிக்க வெளியான படம் மருது. இந்தப் படத்துக்காக கோபுரம் பிலிம்ஸ் மதுரை அன்புச்செழியனிடம் ரூ. 21.29 கோடி கடன் வாங்கியிருக்கிறார் விஷால்.

அன்புச்செழியனிடம் வாங்கிய கடனை அடைக்க வேறு ஒரு புதிய படத்தை ஒப்புக் கொண்டால், அந்தத் தயாரிப்பு நிறுவனத்திடம் அட்வான்ஸ் வாங்கி அன்புச்செழியனின் கடனை அடைத்துவிடலாம் என திட்டமிட்டிருக்கிறார் விஷால். பொதுவாக, கடனில் இருக்கும் நடிகர்கள், கடனை அடைக்க இப்படியான வழிகளை கையாள்வது வழக்கம். அப்படி, விஷாலுக்கு உதவி செய்தது லைகா நிறுவனம். அன்புச் செழியனுக்கு விஷால் தர வேண்டியத் தொகையை லைகா வழங்கியிருக்கிறது. அதற்குப் பதிலாக, லைகாவுக்கு ஒரு படம் பண்ண இருந்தார் விஷால்.

இது ஒருபக்கம் இருக்க, சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடிக்க வெளியான படம் ஆக்‌ஷன். இந்தப் படத்தினை ட்ரைடண்ட் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்தப் படம் பெரிய தோல்வியை சந்தித்தது. ஆக்‌ஷன் படத்திற்காக கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றவில்லை என விஷால் மீது வழக்கு தொடர்ந்தார் ட்ரைடண்ட் ரவீந்திரன்.

எம்.எஸ்.ஆனந்தன் இயக்கத்தில் விஷால் நடிக்க கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி வெளியான படம் சக்ரா. இந்தப் படத்தை வெளியிடக் கூடாதென வழக்குத் தொடர்ந்திருந்தார் ட்ரைண்ட் ரவீந்திரன். நீதிமன்றமானது, ‘சக்ரா’ வெளியீட்டுக்குத் தடை ஏதுமில்லை என்று பிப்ரவரி 18ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது. சக்ரா படமும் சொன்ன தேதியில் வெளியாகிவிட்டது. அதன்பிறகு, இந்த வழக்கு என்ன ஆனதென்று தெரியவில்லை. அதனால், தற்காலிகமாக நிம்மதியாக இருந்தார் விஷால்.

இந்நிலையில், விஷால் மீது லைகா நிறுவனம் ஒரு வழக்குத் தொடர்ந்தது. என்ன வழக்கு என்றால், கடந்த 2019-ஆம் ஆண்டு செப்டம்பர் 21ஆம் தேதி லைகாவுடன் நடிகர் விஷால் ஒரு ஒப்பந்தம் செய்திருக்கிறார். அன்புச் செழியனுக்காக லைகா செலுத்திய கடனுக்கான ஒப்பந்தம் தான் அது. அதில், லைகாவிடம் இவர் வாங்கிய ரூ.21.29 கோடிக்கு 30 சதவீத வட்டியுடன் தவணை முறையில் செலுத்த சம்மதம் தெரிவித்திருக்கிறார். அதன்படி, துப்பறிவாளன்-2 திரைப்படம் வெளியான பிறகு 2020-ம் ஆண்டு மார்ச் மாசத்தில் ரூ.7 கோடியும், மீதத்தொகையை 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் செலுத்துவதாக வாக்குறுதியும் கொடுத்திருக்கிறார்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக துப்பறிவாளன் 2 படத்தைத் திட்டமிட்டபடி ரிலீஸ் செய்யமுடியவில்லை. அதோடு, லைகாவுக்குப் பணத்தையும் விஷால் திரும்பிக் கொடுக்கவில்லை. அதனால், வட்டியும் முதலுமாக சேர்த்து ரூ.30 கோடியே 5 லட்சத்து 68 ஆயிரத்து 137 ரூபாயை வழங்குமாறு விஷாலுக்கு உத்தரவிட வேண்டுமென விஷாலுக்கு எதிராக லைகா வழக்குத் தொடர்ந்தது.

இந்நிலையில், சமீபத்தில் நீதிமன்றம் அதிரடியான தீர்ப்பு ஒன்றை வழங்கியது. துப்பறிவாளன் 2 படம் வெளியாகும் போது பணத்தைத் திருப்பித் தருவதாக விஷால் கூறியிருக்கிறார். அப்படியிருக்கையில், படம் வெளியாகாத நிலையில் எப்படி பணத்தைத் திருப்பிக் கேட்க முடியும். அதனால், லைகா நிறுவனத்தின் வழக்கை தள்ளுபடி செய்வதாக நீதிமன்றம் கூறியது. அதோடு, லைகாவுக்கு 5லட்சம் அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளது.

பொதுவாக, ஒரு படத்தின் ரிலீஸின் போது, அந்த தயாரிப்பாளர் ஏதும் கடன் வைத்திருந்தால் அதை கொடுத்துவிட்டு படத்தை ரிலீஸ் செய்ய நீதிமன்றத்தை நாடுவார்கள். படத்துக்கு தடை கோரியும் வழக்குத் தொடரப்படும். அப்படி, வழக்குத் தொடர்ந்தால் கடைசி நிமிடத்தில் வழக்குத் தொடருவதாக நீதிமன்றமும் கடிந்துகொள்ளும். அப்படி ஏதும் இல்லாமல், விஷாலின் மீது லைகா வழக்குத் தொடர்ந்துள்ளது. இப்போது, படமே வெளியாகவில்லை, அதற்குள் எப்படி பணத்தைக் கேட்கலாம் என லைகாவைக் கடிந்துள்ளது நீதிமன்றம்.

எதுஎப்படியோ, ட்ரைண்ட் நிறுவனத்தின் வழக்கை சக்ரா ரிலீஸின் போது டீல் செய்ததுபோலவே, லைகாவின் வழக்கையும் அசால்டாக டீல் செய்துவிட்டார் விஷால். எப்படியிருந்தாலும் விஷாலுக்கு இது தற்காலிக விடுதலை தான்.

-தீரன்

ஆன்டி இண்டியன் - விமர்சனம்!

12 நிமிட வாசிப்பு

ஆன்டி இண்டியன் - விமர்சனம்!

மாறனின் படத்தைப் புகழ்ந்து தள்ளிய இயக்குநர்கள்!

4 நிமிட வாசிப்பு

மாறனின் படத்தைப் புகழ்ந்து தள்ளிய இயக்குநர்கள்!

சொந்தப்பட புரொமோஷனுக்கு மட்டும் போலாமா?: கே.ராஜன்

13 நிமிட வாசிப்பு

சொந்தப்பட  புரொமோஷனுக்கு மட்டும் போலாமா?: கே.ராஜன்

வெள்ளி 20 ஆக 2021