மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 20 ஆக 2021

ஒரு திட்டத்தோடு பேசுகிற ‘திட்டம் இரண்டு’

ஒரு திட்டத்தோடு பேசுகிற ‘திட்டம் இரண்டு’

அ. குமரேசன்

செய்தியா விளம்பரமா என்று கேட்கவைப்பது போல் வருகிற திரைப்படத் தயாரிப்புகள் பற்றிய முன் தகவல்களைப் பரபரப்பாகப் படித்துத் தெரிந்துகொள்வதில் முன்போல ஆர்வமில்லை என்பதால், இப்படியொரு படம் வருவது பற்றி அறியாதவனாய் எந்தத் திட்டமும் இல்லாமல்தான் இந்தப் படத்தைத் தேர்வு செய்து தொலைக்காட்சி முன்பாக உட்கார்ந்தேன். சுவரொட்டிகளும் முன்காட்சிகளும் ஒரு மர்ம விசாரணைக் கதையாக இருக்கலாம் என்று நினைக்கவைத்ததாலும், பாதியில் படம் அமானுஷ்ய அபத்தங்களுக்குள் போனால் திரையை அணைத்துவிடும் உரிமை இருப்பதாலும் தொடர்ந்து பார்த்தேன்.

கல்லூரிக் காலத்தில் வகுப்பைக் கட்டடித்துவிட்டு சினிமாவுக்குப் போகிற கலாச்சாரத்தைக் கறாராகக் கடைப்பிடித்தவர்களான நண்பனும் நானும் ‘1942’ என்ற பெயரைக் கண்டு ஏதேனும் போர்க்களக் கதையாக இருக்கும் என்று நினைத்துக்கொண்டு அந்த ஆங்கிலப் படத்திற்குப் போனோம். கொஞ்சமும் எதிர்பாரா அனுபவமாக, அது முழுநீள நகைச்சுவைக் கதையாக வியக்கவும் சிரிக்கவும் வைத்தது.

அதற்கு நிகரானதொரு எதிர்பாரா அனுபவத்தைத் தந்தது இப்போது தமிழில் வந்துள்ள ‘திட்டம் இரண்டு’. வேறுபாடு என்னவென்றால் – இது நகைக்சுவை அல்ல, அறிவியல் கதை. அறிவியல் என்றால், ஏதேதோ விளக்குகளும் கணினிகளும் கருவிகளுமாய் செயற்கை மனிதர்கள் எந்திரக் குரலில் பேசி நடமாடுவதல்ல. மனித உடலின் இயற்கை வினைகள் பற்றிய அறிவியல். எனக்குக் கிடைத்த அந்த அனுபவத்தைப் பெறுகிற உரிமை உங்களுக்கும் இருப்பதால், என்ன கதை என்பதை மட்டுமல்லாமல், எதைப்பற்றிய கதை என்பதையும் சொல்கிற குற்றத்தைச் செய்யாமல் தவிர்க்கிறேன். விமர்சனம் என்ற பெயரில் பொறுப்பே இல்லாமல் படத்தின் மையமான பிரச்சினையைச் சொல்லிவிடுகிற வல்லுநர்கள் இருக்கவே செய்கிறார்கள். ஆகவே உங்களுக்கு வேறு வழியில் கதை தெரியவருமானால் எனது அனுதாபங்கள்.

குற்றப் புலனாய்வில், ஆதாரங்களையும் நிகழ்வுகளையும் இணைத்துப் புதிர்களை அவிழ்த்துக் குற்றவாளிகளைப் பிடிக்கிற சாகசத்தைச் செய்கிற காவல்துறை அதிகாரிகளாக ஆண்களை மட்டுமே நம் ஊர்ப்படங்கள் காட்டிவந்திருக்கின்றன. அவர்களின் திட்டப்படி செயல்படுகிற சக அதிகாரிகளில் ஒருவராகவே ஒரு பெண் வந்து போவார். இதுவோ, ஒரு கொலைக்குற்றம் தொடர்பாக தொழில்நுட்பங்களையும் நுண்ணறிவையும் சரியாகச் செலுத்துகிற ஒரு பெண் ஆய்வாளரைக் காட்டுகிறது. இதற்காகவே இயக்குநரைப் பாராட்டலாம் என்றால், அடுத்தடுத்த பாராட்டுகளுக்கு அவர் நகர்கிறார்.

அடுத்தடுத்த இரண்டு கொலைகளும், தலையில் ஹெல்மெட், கையில் கொலைக்கருவியோடு மழையில் ஒரு காலை இழுத்துக்கொண்டு செல்கிறவனைக் காட்டும் காட்சிகளும், வழக்கம்போல ஒரு சைக்கோ விவகாரமாக முடியுமோ என்று ஊகிக்க வைக்கின்றன. அடுத்தடுத்த திருப்பங்கள் குற்றங்களுக்குத் துணைபோகிற காவல்துறையினர் சிலரது சுயநலமாக முடியுமோ என்று ஊகிக்க வைக்கின்றன. அடுத்தடுத்த நிகழ்வுகள், நாயகிக்கு உதவுவது போல அறிமுகமாகி, குறும்பாகப் பேசி, நட்பாக நெருங்கி, காதலாக வளர்த்துக்கொள்கிற நாயகனின் கயமையாக முடியுமோ என்று ஊகிக்க வைக்கின்றன. தொடக்கத்திலிருந்தே தொடரும் திருப்பங்கள் அந்த ஊகங்களை உடனுக்குடன் தள்ளுபடி செய்கின்றன. உச்சமாக வரும் இறுதித் திருப்பம் படத்தை வேறொரு உயர்வான தளத்தில் நிறுத்துகிறது.

பொதுவாக இங்கே காவல்துறை நாயகனைக் கொண்ட கதைகளில், எதிரிகள் அவனுடைய சொந்த வாழ்க்கையைப் பாதிக்கிறவர்களாக (அம்மாவை, அப்பாவை அல்லது மனைவியைச் சாகடிக்கிறவர்களாக அல்லது சித்ரவதை செய்கிறவர்களாக) வருவார்கள். அதற்காகவே அவன் கண்கள் சிவக்கச் சீறிப்பாய்ந்து குற்றவாளிகளைப் போட்டுத்தள்ளுவான். இப்படி சொந்த இழப்புக்காக இல்லாமல் துறை சார்ந்த சட்டக் கடமையாகவும் சமூகப் பொறுப்புடனும் நடவடிக்கை எடுக்கிற கதாநாயகனை உருவாக்கக்கூடாதா என்று சலிப்போடு கேட்டிருக்கிறேன்.

இந்தப் படம் அப்படி உருவாக்கியிருப்பதாகச் சொல்ல வருகிறேன் என்று அவசரப்பட்டு நினைத்துவிடாதீர்கள். இதன் நாயகியும், சிறு வயதிலிருந்தே தன் வாழ்வோடு கலந்திருந்தவளான உற்ற தோழியை இழந்துவிட்ட துயரத்தோடுதான் வழக்கைக் கையாளுகிறாள். ஆனால், அந்தச் சலிப்புக்கே இடமில்லாமல், அவளுடைய சொந்தப் பிரச்சினையைப் பின்பற்ற முடிகிறது. இறுதியில் அது சமூகத்தில் ஊறிப்போன பாலினக் கண்ணோட்டப் பிரச்சினையாக முடிகிறது. சரியாகச் சொல்வதானால், படம் அங்கே முடியவில்லை, ஒரு சிந்தனை மாற்றத்திற்கான உரையாடலைத் தொடங்கிவைக்கிறது.

பொதுப்புத்தியில் உறைந்துபோயிருக்கும் ஒரு கருத்தைக் கரைப்பதற்கான கலை முயற்சியாக சுவையான, விறுவிறுப்பான திரைக்கதையாக்கியிருப்பதன் மூலம், தமிழ் சினிமாவின் மரியாதையை உயர்த்திக்கொண்டிருக்கும் இயக்குநர்களின் வரிசையில் இணைகிறார் விக்னேஷ் கார்த்திக். அவருக்கொரு ஓடிடி கைகுலுக்கல்.

பார்வை உள்ளிட்ட நுட்பமான உடல்மொழியோடு ஆதிராவாக அந்தக் கைகுலுக்கலில் நியாயமான பங்கைக் கோருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். கொஞ்சம் கொஞ்சமாக மிரளவைக்கும் சுபாஷ் செல்வம் கடைசியில் மொத்தமாக மனம் கரையவைக்கிறார். மணமகள் சூரியாவாக ஒரு வீட்டுக்குள் நுழையும் அனன்யா ராம்பிரசாத் முடிவுரையில் மறைந்துபோனாலும், அழுத்தமான ஒரு முன்னுரைக்கு வழிசெய்யும் வகையில் நடித்திருக்கிறார். மனைவியின் வெறுப்புக்குக் காரணத்தைக் கண்டறிந்து பதறுகிற, அதை அவளுக்கே புரியவைக்கிற கணவனின் பாத்திரத்தைக் கச்சிதமாகச் செய்திருக்கிறார் கோகுல் ஆனந்த். பழிவாங்க அலைபவனாக பாவெல் நவகீதன், ஆதிராவின் சக காவல்துறை அதிகாரிகளாக நடித்திருப்பவர்கள் எல்லோருமே நல்ல பங்களிப்பு.

கோகுல் பினாய் ஒளிப்பதிவு, சதீஷ் ரகுநாதன் பின்னணிஇசை, பிரேம் குமார் படத்தொகுப்பு எல்லாமே முதல் திட்டத்திலேயே சரியாகத் தீர்மானித்துக்கொண்டது போலச் சமவிகிதத்தில் கலந்திருக்கின்றன. சோனி லைவ் வெளியிட்டுள்ள இப்படத்தை சிக்ஸர் என்டர்டெயின்மென்ட், மினி ஸ்டூடியோ இணைந்து தயாரிக்கத் துணிந்ததும் குறிப்பிடத்தக்கது.

விசாரணை அதிகாரிகளிடம் வாக்குமூலம் அளிக்கிறவன், தான் கொலைநோக்கத்தோடு நுழைந்த வீட்டில் பார்த்தவனைப் பற்றிச் சொல்கிறபோது அவனைக் காட்டி அதிரவைக்கிறார் இயக்குநர். ஆனால், அது அடுத்த திருப்பங்களுக்கான ஒரு எதிர்பார்ப்பைத் தருகிறது என்றாலும் கூட, உடனிருக்கும் மற்ற கதாபாத்திரங்களின் மனதில் அந்த நேரத்தில் தோன்ற முடியாத ஒரு முகத்தை அந்தக் காட்சியில் வெளிப்படுத்துவது கலை எதார்த்தத்தை அடிபடச் செய்கிறது. விசாரணைக்காக இழுத்துவந்தவர்களைக் காவலர்கள் அடிக்கிற காட்சி இயல்பாகக் கடப்பது, அதை நியாயப்படுத்துவதாகவும் இருக்கிறது.

ஒருவர் என்ன முடிவெடுக்க வேண்டும் என்று யாரும் யாரையும் கட்டாயப்படுத்தக் கூடாது என்ற கருத்து ஒரு வசனமாக வருகிறது. இறுதியில் அது கதையாளரின் குரலாகவும் ஒலித்து, படத்திற்கு ஒரு சுவையான, கவித்துவமான முடிவைத் தருகிறது. பார்த்தேயாக வேண்டிய படம் என்று கட்டாயப்படுத்துவதற்கில்லை. ஆனால் பார்க்காமல் விட்டுவிடக்கூடாத படம்.

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

நிறத்தால் ஏற்பட்ட அவமானம் : மனம் திறந்த வினுஷா

3 நிமிட வாசிப்பு

நிறத்தால் ஏற்பட்ட அவமானம் : மனம் திறந்த வினுஷா

அடுத்தடுத்து 2 பாலிவுட் படங்களில் தனுஷ்

3 நிமிட வாசிப்பு

அடுத்தடுத்து 2 பாலிவுட் படங்களில் தனுஷ்

வெள்ளி 20 ஆக 2021