மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 19 ஆக 2021

சிறப்புக் கட்டுரை: சார்பட்டாப் பெண்கள்!

சிறப்புக் கட்டுரை: சார்பட்டாப் பெண்கள்!

மு இராமனாதன்

'சார்பட்டா பரம்பரை' ஒரு குத்துச் சண்டைப் படம். எழுபதுகளின் மத்தியில், வட சென்னையில் கதை நிகழ்கிறது. இந்தச் சண்டையில்ஆண்கள்தான் பாக்சர்கள். பரம்பரை என்று அழைக்கப்பட்ட பாக்சிங் குழுக்களில் ஆண்கள் மட்டும்தான் உறுப்பினர்கள். இந்த பாக்சர்கள் நிகழ்த்தும் குத்துச் சண்டைகளுக்கு வட சென்னை முழுக்க ரசிகர்கள் இருந்தார்கள். அவர்கள் கண்ணப்பர் திடலில் அமைக்கப்பட்ட காலரிகளை நிறைத்தார்கள்.

எல்லோரும் ஆண்கள். ஆண்கள் பார்க்க, ஆண்கள் பயிற்றுவிக்க, ஆண்கள் மோதிக்கொண்ட விளையாட்டு. அப்படியானால், பாக்சிங் முழுக்க முழுக்க ஆண்களின் உலகமாக இருந்ததா? அப்படிச் சொல்வதற்கில்லை. கோதாவிற்கும் அரங்கிற்கும் வெளியே படத்தில் குறிப்பிடத்தக்க பெண்கள் இடம் பெறுகிறார்கள். அவர்கள் அலங்கார நாயகிகளோ அழுவாச்சி அம்மாக்களோ அல்லர். பாக்சிங் கலாச்சாரத்திலும் வட சென்னை வாழ்வியலிலும் பெண்கள் வகித்த காத்திரமான பங்கை வெளிப்படுத்துகிறார்கள்.

பாக்கியம்

கபிலனின் (ஆர்யா) அம்மா பாக்கியம்(அனுபமா குமார்), மகன் பாக்சிங் பார்க்கப் போனாலே விளக்குமாற்றைக் கையில் எடுப்பவள். அவளது கணவன் பாக்சராக இருந்தவன்; ரவுடியிசத்தில் சிக்கி உயிரிழந்தவன். அதனால் மகன் பாக்சர் ஆவதைத் தடுப்பவள்.

எல்லோரும் 'டாடி' (ஜான் விஜய்) என்றழைக்கும் ஒரு ஆங்கிலோ இந்தியர் படத்தின் முக்கியப் பாத்திரம். அவரது வீட்டில் பாக்கியம் பணிப்பெண்ணாக வேலை பார்க்கிறாள். டாடியின் மனைவி மிஸ்ஸியம்மா(பிரியதர்ஷினி). அவள் ஆங்கிலம்தான் பேசுவாள். அதனால் பாக்கியமும் பேசுவாள். டாடியுடன் தன் மகனைக் குறித்து நடக்கும் ஒரு வாக்குவாதத்தில், 'ஏய் டாடி, I am a servant in your house, not your slave, ok, I know how to take care of my son. எனக்கு என் புள்ளைய எப்படி வளக்கணுன்னு தெரியும். இனிமே இப்படி பண்ணீன்னா ஒன் சோத்தில வெஷம் வெச்சிருவேன்' என்று வெடிப்பாள். அதே வேகத்தில் மறுபக்கம் திரும்பி, 'மிஸ்ஸியம்மா, dinner is ready' என்பாள்.

அவளது அடுத்தடுத்த வசனங்களில் நஞ்சும் உணவும் இடம்பெறும். இதில் உள்ள நகையும் முரணும் திரைக்கு உள்ளேயும் வெளியேயும் உள்ள அனைவருக்கும் புரியும், பாக்கியத்தைத் தவிர. அவள் அப்படித்தான். அவளது சரளமான ஆங்கிலம் ரசிகர்களாகிய நமக்குத்தான் வியப்பளிக்கும். அவளது அயல்வாசிகளுக்கு அந்த ஆங்கிலம் பழக்கமானதுதான்.

மாரியம்மா

இந்தப் படத்தில் வரும் ஆண்கள், பெரியவர்களை 'வாங்க போங்க' என்றோ சிறியவர்களை 'வாடா போடா' என்றோ அழைப்பதில்லை. அது கூவம் நதிக்கு தெற்கே உள்ள கலாச்சாரம். இவர்கள் எல்லோரையும் அழைப்பது 'இன்னாபா' என்றுதான். ஒரு பாத்திரம் மட்டும் 'வாடா போடா' என்றழைக்கும். அதுதான் மாரியம்மா (துஷாரா விஜயன்). அவள் பாக்கியத்தின் அண்ணன் மகள். கபிலனின் மனைவி. அவள் 'வாடா போடா' என்று அழைப்பது கபிலனை.

கூவத்திற்குத் தெற்கே கணவனின் பெயரை மட்டுமல்ல மாமானாரின் கொழுந்தனின் பெயர்களைக்கூட உச்சரிக்காத பெண்கள் வாழ்ந்த அதே காலத்தில்தான் கபிலனைக் காதல் பொங்க 'வாடா' என்று அழைப்பாள் மாரியம்மா.

தான் சார்ந்த சார்பட்டா பரம்பரை ஜெயிக்க வேண்டும், அது தன் மானப் பிரச்சனை என்பான் கபிலன். மாரியம்மா கபிலனிடம் கேட்பாள்: 'இன்னாடா எப்பப்பாரு பரம்பரைன்றீங்க மானன்றீங்க... பரம்பரையில இன்னாத்துக்குடா மானத்தை இட்டாந்து வைக்கிறீங்க?'

அவள் கபிலனிடம்தான் இந்தக் கேள்வியைக் கேட்பாள். ஆனால் அந்தக் காலகட்டத்தில் குத்துச் சண்டையைச் சுற்றித் தம் வாழ்வை அமைத்துக் கொண்ட எல்லா ஆண்களையும் பார்த்து அவள் கேட்கிற கேள்வியாகவும் இதை எடுத்துக் கொள்ளலாம்.

விளையாட்டைக் குறித்து அறிவாளர்கள் பலர் இப்படிச் சொல்வார்கள்: 'விளையாட்டில் ஒருவருக்கு வெற்றியும் மற்றவருக்குத் தோல்வியும் நேரும். அது விளையாட்டின் விதி. இரண்டையும் ஏற்கிற பக்குவம் வேண்டும். வெற்றி பெறுவதைவிட பங்கேற்பதுதான் முக்கியமானது'. இந்த அறிவுரையை எளிய மொழியிலும் உணர்ச்சி பொங்கவும் மாரியம்மாவால் சொல்லிவிட முடிகிறது. அதில் வாழ்வின் ஈரம் இருக்கிறது. அதனால்தான் சமூக வலைதளங்கள் இந்த வசனத்தைக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றன.

மாரியம்மா, பரம்பரை என்பது படத்தில் வரும் குத்துச் சண்டைக் குழுக்களைத்தான். ஆனால் சமூக ஊடகங்களில் அதன் பொருள் சமகாலத்தில் புழக்கத்தில் இருக்கும் ஆண்ட பரம்பரை என்பதாகவும் நீட்சி பெறுகிறது. அது மேலும் புதிய அர்த்தங்களை வழங்குகிறது.

மாரியம்மா துடியான பாத்திரம். அவள் மாமியாரைப் போல கபிலன் பாக்சிங்கில் கலந்துகொள்ளக் கூடாது என்று சொல்பவள் அல்ல. அதே வேளையில் சதா சர்வ காலமும் பாக்சிங்கில் மூழ்கிக் கிடக்கிறானே என்கிற ஆதங்கம் சினமாக மாறுகிற கட்டத்தில் அவள் பொங்கி விடுவாள்:

'டேய்! இன்னடா நெனச்சுக்கினு 'கீற நீ. நான் ஒங்கூடதானே வாழ்ந்துனுகிறேன். தெனத்துக்கும் வர்றது, தூங்குறது, பாக்சிங் போறது. வர்றது, தூங்குறது, பாக்சிங் போறது. நீ ஒன்னும் என்னெக் கொஞ்சிக் கிளிக்க வாணாம். எங்கூட மூஞ்சி கொடுத்துப் பேசு. இந்தப் பூ, நீ பாக்கணுன்னுதானே வச்சுக்கீறேன். நீ ஒன்னத்தையும் பாக்க மாட்டே. நானும் எம் மாமன்கூட வாழப்போறேன்னு ஆச ஆசையா வந்தேன். என்னை இன்னான்னு திரும்பிப் பாக்கிறியா நீ?'

பொங்கிப் பெருகிய மாரியம்மா அடுத்த சில நிமிடங்களில் சற்றே வடிவாள். 'பயப்படாதே. ஒண்ணும் பண்ண சொல்ல மாட்டேன். எனக்கும் தெரியும்...போ..போ..அந்தச் சோறை எடுத்து வந்து ஊட்டி விடு. எனக்குப் பசிக்குது' என்பாள். மாரியம்மாவின் பல முகங்களை அடுத்தடுத்துப் பார்த்த கபிலன் வாய் பிளந்து நிற்பான். அவள் குரலை மீண்டும் உயர்த்தி, 'இன்னா.... போடா..' என்பாள்.

பாக்கியத்திற்கும் மாரியம்மாவுக்கும் இடையிலான உறவும் நுட்பமாகச் சித்தரிக்கப்பட்டிருக்கும். அவர்களது இறை நம்பிக்கையும் அதில் ஒன்று. பாக்கியம் கிறிஸ்துவத்தைத் தழுவியிருப்பாள். ஏசய்யாவையும் மேரி மாதாவையும் பிரார்த்திப்பாள். மாரியம்மா இந்துப் பெண்ணாகத்தான் வளர்க்கப்பட்டிருப்பாள். பரிசம் போடுகிற காட்சியில் ஊர்ப்பெரியவர் எல்லாத் தெய்வங்களையும் சாட்சிக்கு அழைப்பார். மதுரை மீனாட்சி, காஞ்சி காமாட்சி வரிசையில் வேளாங்கண்ணி மாதாவும் வருவார்.

ஹாங்காங்கில் ஒருவரது மதம் அவரது பிறப்பினால் வருவதில்லை. ஒரு குடும்பத்தில் பெற்றோர் பராம்பரிய தாவோயிசத்தைப் பின்பற்றுபவர்களாக இருப்பார்கள். மகள் கிறிஸ்துவராக இருப்பாள். மகன் எந்த மதத்தையும் பின்பற்றாதவனாக இருப்பான். இது எனக்கு வியப்பாக இருந்தது. ஆனால் வடசென்னையில் இப்படியான மதச் சுதந்திரம் நிலவி வந்திருக்கிறது. அதைப் படம் சாதாரணமாகச் சொல்லிச் செல்கிறது. இறை நம்பிக்கை பாக்கியத்திற்கும் மாரியம்மாளுக்கும் இடையில் எந்த இடறலையும் உண்டாக்குவதில்லை. அவர்கள் மனங்கள் விசாலமானவை.

லெட்சுமி

படத்தின் இன்னொரு முக்கியமான பாத்திரம், லெட்சுமி (சஞ்சனா நடராஜன்). வாத்தியார் ரங்கனின் (பசுபதி) மருமகள், வெற்றிச் செல்வனின் (கலையரசன்) மனைவி. எதிராளி இடியாப்பப் பரம்பரையின் வேம்புலியோடு (ஜான் கோக்கென்) சார்பட்டா பரம்பரையின் சார்பாக மோதுவதற்குத் தன்னைத்தான் அப்பா தேர்ந்தெடுக்கப் போகிறார் என்று நம்புகிறான் வெற்றிச் செல்வன். சார்பட்டா பரம்பரைக் கூட்டத்தில் அதைப் பற்றிப் பேசப் போகிறார்கள். அந்தக் கூட்டத்திற்கு அப்பாவை இவன் அழைத்துச் செல்ல வேண்டும்.

அம்மா (கீதா கைலாசம்) அவசரப்படுத்துகிறாள். அப்போது மனைவியோடு பேசிக்கொண்டிருக்கிறான் வெற்றி. அவன் மனம் மிதந்து கொண்டிருக்கிறது. உரையாடலில் சிருங்காரம் சேருகிறது. மனைவியை முத்தமிடுகிறான். அம்மா மீண்டும் அவசரப்படுத்தியதும் வாசலுக்குச் செல்கிறான். அந்த முத்தம் அவன் அகன்றதும் முடிந்து போவதில்லை. அடுத்த சில நொடிகளுக்கு லெட்சுமி மட்டும் திரையில் இருப்பாள். அந்த முத்தம் அவளுக்குள் இறங்குகிறது. பிறகுதான் காட்சி மாறுகிறது. அப்போதுதான் அந்த முத்தம் முடிகிறது. இந்த நுணுக்கமான காட்சி கணவன் மனைவிக்குள் நிலவும் நேசத்தைச் சொல்கிறது.

அடுத்து நடக்கும் பரம்பரைக் கூட்டத்தில் வெற்றிச் செல்வனை வாத்தியார் தேர்ந்தெடுப்பதில்லை. ராமனைத் (சந்தோஷ் பிரதாப்) தேர்ந்தெடுக்கிறார். தொடர்ந்து நடக்கும் சம்பவங்களால் ராமனுக்கு மாற்றாகக் கபிலன் தேர்வாகிறான். இரண்டு வாய்ப்புகளை இழந்த வெற்றிச் செல்வன் குமைந்து போகிறான். அது கபிலனைத் தாக்குகிற அளவிற்குப் போகிறது. வாத்தியாரால் இந்த ஒழுக்கக் கேட்டைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. மகனைத் திட்டுகிறார், அடிக்கிறார். அப்பாவை எதிர்த்துப் பேசி மகனுக்குப் பழக்கமில்லை. லெட்சுமிதான் பேசுகிறாள். அவன் உள் மனதில் கனன்று கொண்டிருக்கும் ஆசையையும், அது நிறைவேறாமல் போகிறபோது அவனுக்கு ஏற்பட்ட வலிகளையும் எளிய சொற்களில் சொல்லிவிடுகிறாள். வாத்தியார் வீட்டின் நடு முற்றத்தில் நடக்கிற காட்சி இது. திரையில் பத்துப் பேராவது இருப்பார்கள். லெட்சுமியின் வாதத்திற்குப் பிறகு எல்லோரது கோபமும் தாபமும் வடிந்துவிடும். அதற்குப் பிறகு யாராலும் எதுவும் சொல்ல முடிவதில்லை.

லெட்சுமிக்கென்று சில அறங்கள் இருக்கின்றன. கணவனை அவள் நேசிக்கிறாள். அதே கணவன் பிற்பகுதியில் கள்ளச் சாராயத் தொழிலில் ஈடுபடுகிறான். பணம் சேர்க்கிறான். கார் வாங்குகிறான். லெட்சுமிக்கு நகையும் வாங்குகிறான். அது அவளுக்கு மகிழ்ச்சியைத் தரவில்லை. 'நீ எதற்கு ஆசைப்பட்டாய்? இப்போது எங்கே வந்து சேர்ந்திருக்கிறாய்?' என்று கேட்பாள்.

உயிர்ப்புள்ள பெண்கள்

தமிழ் சினிமாவில் பல பெண்கள் கேலி செய்வதற்காகவே படைக்கப்படுவார்கள். 1963இல் 'நடையா, இது நடையா...'(படம்: அன்னை இல்லம்) என்று நடைபோட்ட பெண் கேலி, அரை நூற்றாண்டுக்குப் பிறகும் குறையவில்லை. அது 'ஊதாக் கலரு ரிப்பன்...' (வருத்தப்படாத வாலிபர் சங்கம், 2013) வடிவில் கொடி கட்டிப் பறக்கிறது. 'பொண்ணாப் பிறந்தா ஆம்பிளைகிட்டே கழுத்து நீட்டிக்கணும்...' (உரிமைக் குரல், 1974) என்று ஆண்கள் போட்ட சட்டகத்திற்குள் பல தமிழ் சினிமா நாயகிகள் நின்று கொண்டார்கள்.

இப்படி ஆகி வந்த பிரதிமைகளை சார்பட்டாப் பெண்கள் உடைக்கிறார்கள். அவர்கள் நிஜ வாழ்க்கையிலிருந்து மேலெழுந்து வந்தவர்கள். உயிர்ப்புள்ளவர்கள். நேர்மையானவர்கள். உழைப்பாளிகள். ஊதியம் ஈட்டுபவர்கள், அதனால் சுதந்திரமானவர்கள். பெண்ணியம் என்றெல்லாம் பெயர் கொடுத்துப் பேச அவர்களுக்குத் தெரியாது. ஆனால் அவர்கள் பேசுவது அதுதான்.

'சார்பட்டா பரம்பரை' ஆண்களின் விளையாட்டாக இருந்த குத்துச் சண்டை பற்றிய படம்தான். ஆனால் அந்தக் கதையைக் கொண்டு செலுத்துவதில் இந்த ஜீவனுள்ள பெண்களுக்கு முக்கியப் பங்கிருக்கிறது.

சார்பட்டாப் பெண்கள் தமிழ் சினிமாவிற்குள் புதிய வெளிச்சத்தையும் காற்றையும் கொண்டு வருகிறார்கள். இவர்களுக்குக் கிடைக்கும் வரவேற்பு இன்னும் பல உயிர்ப்புள்ள பெண்களைத் தமிழ்த் திரைக்குக் கொண்டு வரும்.

(மு இராமனாதன், எழுத்தாளர், பொறியாளர். தொடர்புக்கு: [email protected])

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

4 நிமிட வாசிப்பு

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

3 நிமிட வாசிப்பு

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

‘எனிமி’க்கு எனிமியான அண்ணாத்த

10 நிமிட வாசிப்பு

‘எனிமி’க்கு எனிமியான அண்ணாத்த

வியாழன் 19 ஆக 2021