மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 17 ஆக 2021

2ஆவது டெஸ்ட்: 151 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி!

2ஆவது டெஸ்ட்: 151 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி!

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் இந்தியா 151 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றுள்ளது.

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. நாட்டிங்காமில் நடந்த முதலாவது டெஸ்ட் டிராவில் முடிந்தது. இந்த நிலையில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் கடந்த 12ஆம் தேதி தொடங்கியது.

டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்தார். இதையடுத்து, கே.எல்.ராகுலும் ரோகித் சர்மாவும் இந்தியாவின் இன்னிங்ஸைத் தொடங்கினர்.

வலுவான தொடக்கம் கொடுத்த ரோகித் - ராகுல் கூட்டணி 126 ரன்களை (43.4 ஓவர்) எட்டியபோது பிரிந்தது. ரோகித் சர்மா 83 ரன்களில் (145 பந்து, 11 பவுண்டரி, ஒரு சிக்சர்) ஜேம்ஸ் ஆண்டர்சன் வீசிய பந்தில் அவுட் ஆனார். அடுத்து வந்த புஜாரா (9 ரன், 23 பந்து) ஆண்டர்சனின் பந்து வீச்சில் ஸ்லிப்பில் நின்ற பேர்ஸ்டோவிடம் ஆட்டமிழந்தார்.

அடுத்த வந்த கேப்டன் விராட் கோலியுடன் ஜோடி சேர்ந்த கே.எல்.ராகுல் அபாரமாக ஆடி தனது ஆறாவது சதத்தை நிறைவு செய்தார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா மூன்று விக்கெட்டுகள் இழப்புக்கு 276 ரன்கள் குவித்திருந்தது. 127 ரன்கள் குவித்த கே.எல்.ராகுல் களத்தில் இருந்தார்.

இதைத் தொடர்ந்து இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களில் ராபின்சன் பந்துவீச்சில் கே.எல்.ராகுல் 129 ரன்கள் எடுத்திருந்த நிலையில் வெளியேறினார்.

பின்னர் வந்த வீரர்கள் இங்கிலாந்து பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து அவுட் ஆகி வெளியேறினர். கடைசி கட்டத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜடேஜா 40 ரன்களை குவித்தார். இறுதியில் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 364 ரன்கள் குவித்தது.

இங்கிலாந்து தரப்பில் அந்த அணியின் ஆண்டர்சன் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார். அந்த அணியின் ராபின்சன், மார்க் வுட் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர். மொயீன் அலி ஒரு விக்கெட் வீழ்த்தினார். இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸை தொடங்கி விளையாடியது.

இதில், தொடக்க ஆட்டக்காரர்களான ரோரி பர்ன்ஸ் (49), சிப்லி (11) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். ஹமீது ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினார்.

இதன்பின் விளையாடிய ரூட் (48) மற்றும் பேர்ஸ்டோ (6) ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவில் 45 ஓவரில் இங்கிலாந்து அணி மூன்று விக்கெட்டுகள் இழப்புக்கு 118 ரன்கள் சேர்த்திருந்தது.

மூன்றாவது நாள் ஆட்டத்தின்போது பேர்ஸ்டோ அரை சதம் கடந்து (57) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பட்லர் (23), மொயீன் அலி (27) ரன்களில் வெளியேறினர். கர்ரன் (0), ராபின்சன் (6), வுட் (5), ஆண்டர்சன் (0) ரன்களில் ஆட்டமிழந்தனர்.

மூன்றாவது நாளில் 128 ஓவர்களில் 391 ரன்கள் எடுத்திருந்த இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இங்கிலாந்து முதல் இன்னிங்ஸ் முடிவில் இந்தியாவை விட 27 ரன்கள் முன்னிலையில் இருந்தது.

இதைத் தொடர்ந்து நான்காவது நாள் ஆட்டம் நடைபெற்றது. இதில், இந்தியா தனது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களான கே.எல்.ராகுல் (5), ரோகித் (21) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.

அடுத்து விளையாடிய புஜாரா (45), கோலி (20) ரன்கள் எடுத்து வெளியேறினர். அரைசதம் விளாசிய ரஹானே 61 ரன்களில் வெளியேறினார். ஜடேஜா 3 ரன்னில் அவுட் ஆனார்.

இறுதியில், நான்காவது நாள் ஆட்டநேர முடிவில், இந்திய அணி 82 ஓவர்களுக்கு, 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்தது. இந்தியா 154 ரன்கள் முன்னிலையில் இருந்தது. ரிஷப் பண்ட் 14 ரன்னிலும், இஷாந்த் ஷர்மா 4 ரன்னிலும் களத்தில் இருந்தனர்.

இந்த நிலையில், லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியின் ஐந்தாவது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நேற்று (ஆகஸ்ட் 16) நடைபெற்றது. போட்டி தொடங்கிய சில நிமிடங்களில் ரிஷப் பண்ட் 22 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட் ஆகி வெளியேறினார். 16 ரன்கள் எடுத்திருந்த இஷாந்த் ஷர்மா இங்கிலாந்து வீரர் ராபின்சன் பந்து வீச்சில் வெளியேறினார்.

அடுத்து களமிறங்கிய முகமது ஷமி மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அதிரடியாக ஆடிய ஷமி அரைசதம் விளாசினார். இறுதியில் எட்டு விக்கெட்டுகள் இழப்புக்கு 298 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. இந்திய வீரர்கள் முகமது ஷமி 56 ரன்களுடனும், பும்ரா 34 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இதன் மூலம் இங்கிலாந்து அணியை விட 271 ரன்கள் முன்னிலையில் இந்தியா உள்ளது. இதைத் தொடர்ந்து 272 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கி விளையாடியது.

டெஸ்ட் போட்டியின் கடைசி நாளான நேற்று 60 ஓவர்கள் எஞ்சியுள்ள நிலையில் 272 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் இங்கிலாந்து அணி விளையாடியது.

இதில், கேப்டன் ரூட் (33), பட்லர் (25) மற்றும் மொயீன் அலி (13) தவிர மற்ற வீரர்கள் குறைந்த ரன்களில் ஆட்டமிழந்தனர். உட் (0) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இதனால், 51.5 ஓவரில் இங்கிலாந்து 120 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்தியா 151 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.

இந்த போட்டி டிராவில் முடிந்தால் போதும் என்று நினைத்திருந்த இந்திய ரசிகர்களுக்கு இந்திய அணி அசத்தல் வெற்றி பெற்றது ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் அளித்துள்ளது.

-ராஜ்

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

4 நிமிட வாசிப்பு

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

சிவகார்த்திகேயன் எதிர்பார்க்காத டாக்டர் வசூல்!

5 நிமிட வாசிப்பு

சிவகார்த்திகேயன் எதிர்பார்க்காத டாக்டர் வசூல்!

‘எனிமி’க்கு எனிமியான அண்ணாத்த

10 நிமிட வாசிப்பு

‘எனிமி’க்கு எனிமியான அண்ணாத்த

செவ்வாய் 17 ஆக 2021