மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 15 ஆக 2021

துருவ் விக்ரம் - மாரிசெல்வராஜ் : குறுக்கே வந்த உதயநிதி

துருவ் விக்ரம் - மாரிசெல்வராஜ் : குறுக்கே வந்த உதயநிதி

ஒருகதையில் இரண்டு முறை நடித்து தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் துருவ் விக்ரம். இப்படியான ஒரு அனுபவத்தை எந்த நடிகர்களும் எதிர்கொண்டதில்லை. ஆனால், துருவ்வுக்கு நடந்தது.

தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான ‘அர்ஜூன் ரெட்டி’ படத்தின் தமிழ் ரீமேக் வர்மா & ஆதித்ய வர்மா. இரண்டிலும் துருவ் நடித்தார். பாலா இயக்கத்தில் உருவான வர்மா படத்தின் மீது விக்ரமுக்கும், தயாரிப்பாளருக்கும் மாறுபட்ட கருத்து இருந்ததால் அந்தப் படத்தை அப்படியே தூக்கி ஓரம் வைத்துவிட்டு, வேறு இயக்குநரை வைத்து ‘ஆதித்ய வர்மா’ உருவாக்கி ரிலீஸ் செய்தனர்.

முதல் படத்திலேயே மகனுக்கு மிகப்பெரிய பிரேக் கொடுத்தாக வேண்டுமென விரும்பினார் விக்ரம். அவரின் விருப்பப்படியே, ஆதித்ய வர்மா ஓரளவுக்கு நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்தப் படத்தை முடித்தகையோடு, இன்னொரு வாய்ப்பு கார்த்திக் சுப்பராஜ் மூலமாகத் தேடிவந்தது. இந்த முறை, தந்தையுடன் இணைந்து நடிக்க முடிவெடுத்தார்.

விக்ரமும், துருவ் விக்ரமும் இணைந்து நடிக்க கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் வரும் ‘சியான் 60’. விஜய்யின் மாஸ்டரின் இணைத் தயாரிப்பாளர் லலித் தயாரிப்பில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்துவிட்டது. அதற்கான அறிவிப்பு கூட சமீபத்தில் வெளியானது.

இந்நிலையில், துருவ் விக்ரமின் அடுத்தப் படத்தை மாரி செல்வராஜ் இயக்க தயாராகிவந்தார். பரியேறும்பெருமாள், கர்ணன் என இரண்டு ஹிட்டுகளைக் கொடுத்த மாரிசெல்வராஜ் இயக்கத்தில் பா.ரஞ்சித்தின் நீலம் தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பில் நடிக்க இருந்தார் மாரிசெல்வராஜ். கால்பந்து விளையாட்டை மையமாகக் கொண்டக் கதைக்களம் என்று சொல்லப்பட்டது.

இந்தப் படத்தைத் துவங்குவதில் பெரிய மாற்றம் தற்பொழுது நிகழ்ந்திருக்கிறது. சமீபத்தில் மாரிசெல்வராஜை சந்தித்தார் உதயநிதி. கர்ணன் படத்தினைப் பார்த்து அசந்துவிட்ட உதயநிதிக்கு ஒரு படத்தை மாரிசெல்வராஜ் இயக்க வேண்டுமென விருப்பம் தெரிவிக்கப்பட்டது.

அதோடு, மகிழ் திருமேனி இயக்கத்தில் நடித்துவருகிறார் உதயநிதி. அதோடு, அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் ‘ஆர்ட்டிகிள் 15’ ரீமேக்கிலும் நடித்துவருகிறார். மூன்றாவதாக, மாரிசெல்வராஜ் படத்தில் நடிப்பதோடு சினிமாவிலிருந்து கொஞ்சம் விலகி இருக்க விரும்புகிறாராம் உதயநிதி. திமுக-வின் இளைஞரணியின் பொறுப்பும், எம்.எல்.ஏ.-வாக மக்கள் சேவையும் மேற்கொண்டுவருவதால் சினிமாவுக்கு லீவ் விட திட்டமிட்டிருக்கிறாராம்.

அதனால், உடனடியாக உதயநிதிக்கு ஒரு படத்தை முடித்துக் கொடுக்க இருக்கிறார் மாரிசெல்வராஜ். உதயநிதி நடிப்பில் மாரிசெல்வராஜ் இயக்கும் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க இருப்பதாகவும் தகவல்.

ஆக, மாரிசெல்வராஜ் - துருவ் விக்ரம் நடிக்க இருந்த படம் தள்ளிப் போகிறது. இருப்பினும், துருவ் விக்ரமுக்கு அடுத்தடுத்து புதிய வாய்ப்புகள் வந்துகொண்டிருப்பதால் அதில் ஒரு படத்தை தேர்ந்தெடுத்து நடிக்க இருக்காராம். அதற்குள், உதயநிதி படத்தை முடித்துவிட்டு மாரிசெல்வராஜ் வரவும் சரியாக இருக்கும் என இப்போதைக்கு திட்டம் வகுத்திருக்கிறார்கள்.

எல்லா நேரத்திலும் திட்டமிட்டவை நடக்காது. அதனால், சினிமாவில் இருப்பவர்கள் எதற்கும் தயாராக இருக்க வேண்டும். குறிப்பாக, ப்ளான் - பி ஒன்றை வைத்துக் கொள்ள வேண்டும்.

- தீரன்

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

நிறத்தால் ஏற்பட்ட அவமானம் : மனம் திறந்த வினுஷா

3 நிமிட வாசிப்பு

நிறத்தால் ஏற்பட்ட அவமானம் : மனம் திறந்த வினுஷா

அடுத்தடுத்து 2 பாலிவுட் படங்களில் தனுஷ்

3 நிமிட வாசிப்பு

அடுத்தடுத்து 2 பாலிவுட் படங்களில் தனுஷ்

ஞாயிறு 15 ஆக 2021