மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 13 ஆக 2021

தோனி - விஜய் சந்தித்தது எப்படி?

தோனி - விஜய் சந்தித்தது எப்படி?

சினிமாவும், கிரிக்கெட்டுக்கும் அடிமையானவர்கள் தங்களின் ஆதர்ஷ நாயகன் மீது வெறித்தனமான பற்றுடன் இருப்பார்கள்.

உச்சத்தில், சம பலத்தில் இருக்கும் நடிகர்கள் படப்பிடிப்பில், பொதுவெளியில் எதிர்பாராத சூழலில் சந்தித்துக்கொள்ள நேர்ந்தால் சினிமா துறை பரபரப்பாகிவிடும்.

தத்தமது துறைகளில் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்ட இருவர் சந்தித்தால் அவர்களின் ரசிகர்களிடம் என்ன மாதிரியான உற்சாகம் ஏற்படும் என்பதை நேற்றைய தினம் சமூக வலைதளங்களில் காணமுடிந்தது. இது ரசிகர்கள் மனநிலையைப் பிரதிபலித்தது.

ஊடகங்கள் வழக்கம்போல ரசிகர் மன்றப் பத்திரிகைகள் செய்தி வெளியிடுவதை போல தல - தளபதி சந்திப்பு எனத் தலைப்பு செய்திகளை வெளியிட்டு பெருமைப்பட்டுக்கொண்டது.

ஆம்... கிரிக்கெட் ரசிகர்களால் தல என்று அழைக்கப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தலைவர் மகேந்திர சிங் தோனியும், தமிழ் சினிமா ரசிகர்களிடம் அதிக ஆதரவு பெற்றவரும் அவரது ரசிகர்களால் தளபதி என்று அழைக்கப்படும் நடிகர் விஜய் இருவரும் நேற்று சந்தித்தனர்

ஒற்றை பந்தில் இரண்டு சிக்சர் அடித்தால் கிரிக்கெட் ரசிகன் எந்த உற்சாகத் துள்ளலுக்குப் போவானோ அந்த மனநிலையில் தோனி - விஜய் ரசிகர்கள், அதிகரித்து வரும் பெட்ரோல் விலையை மறக்கின்ற அளவு தோனி - விஜய் சந்தித்து கொண்டதைக் கொண்டாடியிருக்கின்றனர்

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'பீஸ்ட்' படத்தின் படப்பிடிப்பு கடந்த ஏப்ரல் மாதம் ஜார்ஜியாவில் தொடங்கியது.

கொரோனா ஊரடங்குக்குப் பின் சமீபத்தில் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. இதன் மூன்றாம்கட்டப் படப்பிடிப்பின் தொடர்ச்சி நேற்று முதல் சென்னையில் உள்ள கோகுலம் ஸ்டூடியோவில் தொடங்கியது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் முதல் நடக்கும் ஐபிஎல் போட்டிக்காக சென்னை சூப்பர் கிங்ஸுடன் செல்ல சென்னை வந்துள்ள தோனி நடிக்கும் விளம்பர படப்பிடிப்பும் கோகுலம் ஸ்டூடியோவில் நேற்று நடைபெற்றது தோனி - விஜய் சந்திப்பு எப்படி நிகழ்ந்தது என்று விஜய் வட்டாரத்தில் விசாரித்தபோது...

நேற்று காலை ஷூட்டிங்கில் கலந்துகொண்ட விஜய்க்கு தோனி முதல் தளத்தில் இருப்பது தெரியாது. அதேபோன்று விஜய் இருப்பது தோனிக்கும் தெரியாது. இருவரும் சந்திக்க காரணமாக இருந்தவர் தோனியின் மேனேஜர் சுவாமி. பீஸ்ட் படக்குழுவினரும் தோனியின் விளம்பரப் படப்பிடிப்பு நடக்கிறது என்று அறிந்தவுடன் தோனியின் மேனேஜருக்கு போன் செய்த படக்குழுவினர் விஜய் படப்பிடிப்பும் இங்குதான் நடக்கிறது இருவரும் சந்திக்க ஏற்பாடு செய்ய முடியுமா என்று கேட்டுள்ளனர்.

தோனியிடம் கேட்டு தகவல் கூறுகிறேன் என்ற மேனேஜர் சுவாமி, எப்போது வேண்டுமென்றாலும் விஜய்யைச் சந்திக்க தோனி ஆவலாய் இருக்கிறார் என்ற தகவலைக் கூறியிருக்கிறார்.

நேற்று காலை 11 மணிக்கு படப்பிடிப்பு இடைவேளையில் இருந்த விஜய்யிடம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படியா என்ற விஜய்யிடம் தோனி சந்திக்க ஆர்வமாய் இருப்பது குறித்து கூறியதும் உடனடியாக போகலாம் எனக் கூறியுள்ளார். விஜய் தரப்பில் உடனடியாக தோனி மேனேஜர் சுவாமிக்கு இப்போது அங்கு வரலாமா என கேட்டுள்ளனர்

சற்று பொறுங்கள் என கூறிவிட்டு, சில நிமிடங்களில் தோனியே அங்கு வருகிறார் எனத் தகவல் கூறியவுடன் பீஸ்ட் படக்குழுவினரிடம் உற்சாகத் துள்ளல் ஏற்பட்டது. தோனியே பீஸ்ட் படப்பிடிப்பு நடந்த மூன்றாவது தளத்தில் விஜய் இருந்த கேரவனுக்குச் சென்று சந்தித்து இருக்கிறார்.

சுமார் 10 நிமிடங்கள் மட்டுமே நடைபெற்ற இந்தச் சந்திப்பில் சுவாமி, நெல்சன் திலீப்குமார் உள்ளிட்டோர் இருந்துள்ளனர். சந்திப்பை முடித்துக்கொண்டு புறப்பட்ட தோனியை அவரது கேரவன் வரை உடன் சென்றுவிட்டிருக்கிறார். விஜய் அந்தப் புகைப்படங்கள்தான் விஜய் கேரவன் அருகே நிற்கும் புகைப்படங்கள். கூட்டம் கூட தொடங்கியதால் விஜய் உடனடியாக அவரது கேரவனுக்குத் திரும்பிவிட்டார்.

-இராமானுஜம்

ஆன்டி இண்டியன் - விமர்சனம்!

12 நிமிட வாசிப்பு

ஆன்டி இண்டியன் - விமர்சனம்!

தன் வாயால் சர்ச்சையில் சிக்கிய அஷ்வின்

7 நிமிட வாசிப்பு

தன் வாயால்  சர்ச்சையில் சிக்கிய அஷ்வின்

அதர்வா படத்தை ராஜ்கிரண் தவிர்க்கிறாரா?

2 நிமிட வாசிப்பு

அதர்வா படத்தை ராஜ்கிரண் தவிர்க்கிறாரா?

வெள்ளி 13 ஆக 2021