மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 12 ஆக 2021

பாலா இயக்கத்தில் படம் தயாரிக்கும் சூர்யா

பாலா இயக்கத்தில் படம் தயாரிக்கும் சூர்யா

பாலா இயக்குநராக அறிமுகமான சேது திரைப்படம்1999ஆம் ஆண்டு வெளியானது. அதன்பின் நந்தா (2001), பிதாமகன் (2003), நான் கடவுள் (2009) அவன் இவன் (2011), பரதேசி (2013), தாரை தப்பட்டை (2016), நாச்சியார் (2018) ஆகிய படங்களை இயக்கி இருக்கிறார் பாலா.

கடந்த 22 ஆண்டுகளில் பாலா இயக்கியது எட்டு படங்கள் மட்டுமே. இருந்தபோதிலும் இவரது படங்கள் ஏற்படுத்திய தாக்கம் காரணமாக இந்திய சினிமாவில் குறிப்பிடத்தக்க இயக்குநர்கள் பட்டியலில் பிதாமகன் படத்துக்குப்பின் இடம்பெற்று வருகிறார்.

பாலா இயக்குநராக அறிமுகமான சேது படம் மட்டுமே வணிகரீதியாக வெற்றி பெற்று எல்லோருக்கும் லாபம் பெற்று தந்த படம். அந்தப் படம் இன்றுவரை தமிழ் சினிமாவில் முதல் படத்தை இயக்கும் இயக்குநர்களுக்கு நம்பிக்கையளிக்கும் திரைப்படமாக இருந்து வருகிறது. சேதுவுக்கு பின் பாலா இயக்கும் படத்தில் நடிப்பதையும், தயாரிப்பதையும் கெளரவமாக கருதும் போக்கு அதிகரித்தது. அதன் காரணமாக நந்தா படத்தை அமெரிக்க வாழ் தமிழர் தயாரித்தார். அதைத் தொடர்ந்து தயாரிப்பு நிர்வாகியாக, பட்ஜெட் படங்களைத் தயாரித்து லாபகரமான தயாரிப்பாளராக இருந்த துரை, பிதாமகன் படத்தை தயாரித்து மீள முடியாத கடனாளியானார்.

நான் கடவுள் படம் பல கட்ட பஞ்சாயத்துகளைக் கடந்து சிவஸ்ரீ பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியானது. இந்தப் படத்தின் மூலமும் தயாரிப்பாளர், விநியோகஸ்தர்களுக்கு லாபம் கிடைக்கவில்லை. ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், அவன் இவன் வெளியானதில் நஷ்டம் இன்றி தப்பித்தது, அதர்வா நடித்த பரதேசி படத்தை 2013இல் பாலா சொந்தமாக இயக்கி தயாரித்தார்.

அதனால் அந்தப் படம் லாபகரமான படமாக அமைந்தது. அதற்கு காரணம், நடிகர்களுக்கு குறைவான சம்பளம் என்பதுடன் படப்பிடிப்பை சிக்கனமாக குறிப்பிட்ட நாட்களில் முடித்ததும் ஒரு காரணம். அதைத் தொடர்ந்து தனது உதவியாளராக இருந்து இயக்குநர், நடிகராக தமிழ் சினிமாவில் வளர்ந்த சசிகுமார் தயாரித்து நாயகனாக நடித்த தாரை தப்பட்டை படத்தை இயக்கினார் பாலா.

தனது திரையுலக பயணத்தில் சசிகுமார் சம்பாதித்த மொத்த வருமானத்தையும் இந்தப் படம் ஏற்படுத்திய நஷ்டத்தினால் இழந்தார். பாலா இயக்கத்தில் படங்களைத் தயாரிக்க தயாரிப்பாளர்கள் ஆர்வம் காட்டவில்லை என்பதுடன் வணிக உத்தரவாதமுள்ள கதாநாயகர்கள் இவரது இயக்கத்தில் நடிக்க தயக்கம் காட்டினார்கள். காரணம், இவரது இயக்கத்தில் நடிக்கும்போது வேறு படங்களில் நடிக்க தேதி கொடுக்க முடியாது, கெட்டப் மாற்ற கூடாது என்கிற நெருக்கடிதான் காரணம். தனது மகன் நாயகனாக அறிமுகமாகும் 'வர்மா' படத்தை நடிகர் விக்ரம் பாலாவை வலிய தேடி சென்று வழங்கினார்.

ஆனால், அந்தப் படம் தாங்கள் எதிர்பார்த்தபடி இல்லை என்கிற காரணத்தைக் கூறி படத்தை திரையரங்குகளில் வெளியிடுவதை கைவிட்டு மீண்டும் அதே கதையை வேறு இயக்குநரை வைத்து படத்தை இயக்கி வெளியிட்டனர். பாலா இயக்கிய வர்மா படம் கடைசியாக ஓடிடியில் வெளியானது.

இந்தப் படத்தின் விமர்சனமும் வழக்கம்போல பாலாவை கடுமையாகத் தாக்குவதைப் போலவே இருந்தது. அதன்பின்பு இதோ துவக்குகிறார்.. அதோ துவக்குகிறார் என்றெல்லாம் சொல்லி வந்த நிலையில் தற்போதுதான் ஒரு முதல்கட்ட முன்னெடுப்புகள் நடந்து வருகிறதாம்.

பாலா இயக்கப் போகும் இந்தப் படத்தின் நாயகனாக அதர்வா நடிக்க, தயாரிக்கப் போவது நடிகர் சூர்யா என்கிறார்கள். இந்தப் படத்தின் படப்பிடிப்புக்கான லொக்கேஷன் பார்ப்பதற்காக இயக்குநர் பாலா கடந்த வாரம் கன்னியாகுமரி, முட்டம் ஆகிய பகுதிகளுக்குச் சென்று வந்திருக்கிறார்.

இது சம்பந்தமாக சூர்யா வட்டாரத்தில் விசாரித்தபோது, சூர்யா என்கிற நடிகரை உருவாக்கியவர் இயக்குநர் பாலா. அவரது இயக்கத்தில் படங்களை தயாரிக்க தயாரிப்பாளர்கள் விருப்பம் காட்டவில்லை என்பது உண்மைதான் என்றாலும் பாலா என்கிற இயக்குநரை எப்படி கையாண்டால் சிக்கனமாகவும், திட்டமிட்ட அடிப்படையில் படப்பிடிப்பை முடிக்க முடியும் என்பதால் படத்தைத் தயாரிக்க உள்ளோம். பாலாவின் படத்துக்கு ஓடிடி பிளாட்பாரத்தில் தேவை இருப்பதால் எதிர்பார்க்கும் விலை கிடைக்கும் என்றனர்.

-இராமானுஜம்

விருதுகளை அள்ளிய அசுரன்!

2 நிமிட வாசிப்பு

விருதுகளை அள்ளிய அசுரன்!

கார்த்தி முடிவால் வட்டியில் சிக்கிய தயாரிப்பாளர்!

4 நிமிட வாசிப்பு

கார்த்தி முடிவால் வட்டியில் சிக்கிய தயாரிப்பாளர்!

ஐபிஎல்: மும்பையை வீழ்த்திய சென்னை சூப்பர் கிங்ஸ்!

6 நிமிட வாசிப்பு

ஐபிஎல்: மும்பையை வீழ்த்திய சென்னை சூப்பர் கிங்ஸ்!

வியாழன் 12 ஆக 2021