மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 12 ஆக 2021

தியேட்டரில் ரிலீஸாகும் சார்பட்டா பரம்பரை !

தியேட்டரில் ரிலீஸாகும் சார்பட்டா பரம்பரை !

ஒரு திரைப்படத்தின் வெற்றியென்பது திரையரங்கில் வெளியாகி, மக்கள் கவனத்தை ஈர்ப்பதைப் பொறுத்தது. ஆனால், திரையரங்கில் வெளியாகாமல் நேரடியாக ஓடிடியில் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் வரவேற்பைப் பெற்றுவிட்டது சார்பட்டா பரம்பரை.

பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் குத்துச்சண்டையை மையமாக் கொண்டு கடந்த ஜூலை 22ஆம் தேதி பிரைம் ஓடிடியில் இப்படம் வெளியானது. வடசென்னையில் நடந்த சில உண்மை நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாகியிருக்கிறது. எமர்ஜென்ஸி காலக்கட்டம், அதற்குள் திமுக - அதிமுக அரசியல் , சாதிய அரசியல், தலித் பிரச்னை என பல விஷயங்களை ஸ்போர்ட்ஸ் டிராமாக்குள் பேசி அசத்தியிருக்கிறார் பா.ரஞ்சித்.

ரங்கன் வாத்தியாராக பசுபதி, கபிலனாக ஆர்யா, வேம்புலியாக ஜான் கொக்கன், கெவின் டேடியாக ஜான்விஜய், மாரியம்மாவாக துஷாரா எனபடத்தில் இடம் பெற்ற ஒவ்வொரு கேரக்டருமே மக்கள் மத்தியில் பிரபலமானது. டான்ஸிங் ரோஸ், பீடி வாத்தியார், டைகர் கார்டன், மீரான் என சொல்லிக் கொண்டே போகலாம்.

சார்பட்டா பரம்பரை படமானது தியேட்டர் மெட்டீரியல் படம். முழுக்க முழுக்க திரையரங்க அனுபவத்தைக் கொடுக்கக் கூடிய படம். பா.ரஞ்சித்தும் தியேட்டர் அனுபவத்தை மனதில் கொண்டே படத்தை உருவாக்கியிருக்கிறார். பிரம்மாண்டமான குத்துச்சண்டைக் களம், நூறுக்கும் மேல் ஜூனியர் ஆர்ட்டிஸ்டுகள் என படம் திரையரங்கில் பார்க்க பிரம்மாண்டமாக இருந்திருக்கும். இந்தப் படம் ஓடிடியில் வெளியாகும் போது, அனைவரின் வருத்தமுமாக இதுதான் இருந்தது. திரையரங்க ரிலீசை மிஸ் செய்துவிட்டோமே என ரசிகர்களின் கவலையானது, தயாரிப்புத் தரப்பின் காதுகளில் விழுந்திருக்கிறது.

நற்செய்தி என்னவென்றால், விரைவில் சார்பட்டா பரம்பரை படமானது தியேட்டரில் வெளியாக இருக்கிறதாம். இந்தப் படத்தை தமிழகமெங்கும் உதயநிதியின் ரெட்ஜெயிண்ட் நிறுவனம் வெளியிட இருக்கிறது. சார்பட்டா பரம்பரை படத்தை முழுமையாக டிஜிட்டலில் விற்றுவிட்டதால், திரையரங்கில் வெளியிட முதல்கட்டப் பேச்சுவார்த்தையில் இறங்கியிருக்கிறார்கள்.

ஓடிடியில் வெளியாகிவிட்ட படத்துக்கு திரையரங்கில் ஆதரவு இருக்குமா எனும் கேள்வி எழலாம். நிச்சயமாக இருக்கும் என்கிறார்கள் டிரேடிங் வட்டாரத்தினர். திரையரங்க அனுபவத்துக்காக நிச்சயம் கூட்டம் வரும். சார்பட்டா பரம்பரை படத்தை ஓடிடியிலேயே ரிப்பீட்டாக மீண்டும் மீண்டும் ரசிகர்கள் பார்க்கிறார்களாம். அது, நிச்சயம் தியேட்டர் ரிலீஸின் போது கைகொடுக்கும் என்கிறார்கள். அதோடு, ஓடிடி நிறுவனம் விட்டுத் தருமா எனும் கேள்வியும் எழலாம். அதற்கும் பதில் இருக்கிறது.

ஒரு படத்தை நேரடியாக ஓடிடியில் வெளியிட எந்த ஓடிடி நிறுவனமும் விரும்புவதில்லை. 15 நாட்களென்றாலும் தியேட்டரில் வெளியானப் பிறகு, ஓடிடிக்கு வரும்போது கூடுதல் கவனம் கிடைக்கும். தியேட்டரில் வெளியாகும் போது மக்கள் மத்தியில் மாஸ் பப்ளிசிட்டி பெற்றுவிடும் படத்துக்கு, ஓடிடியில் பெருவாரியான வரவேற்பு கிடைக்கும். அதனால், ஓடிடி நிறுவனம் ஒப்புக்கொள்ளும் என்கிறார்கள்.

அதோடு, ஓடிடி ஆடியன்ஸைத் தாண்டி, தியேட்டர் ஆடியன்ஸ் எக்கச்சக்கப் பேர் இருக்கிறார்கள். ஓடிடியை அணுகாத எக்கச்சக்க மக்கள் தமிழகத்தில் இருக்கிறார்கள். அவர்களை சார்பட்டா சென்று சேரும். அதோடு, திரையரங்கில் வெளியாகும் நாட்களில் ஓடிடியில் இப்படத்தின் ஒளிபரப்பு இருக்காது என்கிறார்கள். அதோடு, மீண்டும் ஓடிடிக்கு வரும்போது இன்னும் எக்கச்சக்க பார்வையாளர்கள் படத்தைப் பார்ப்பார்கள் என்றும் கணிக்கப்படுகிறது. நமக்குக்கிடைத்த தகவல்படி, வருகிற செப்டம்பர் 10ஆம்தேதி விநாயகர் சதுர்த்திக்கு வெளியாகலாம் என்கிறார்கள். ஆக, அதற்குள் திரையரங்குகள் திறக்கப்படும் என்றும் சொல்லப்படுகிறது.

- தீரன்

சிவகார்த்திகேயன் எதிர்பார்க்காத டாக்டர் வசூல்!

5 நிமிட வாசிப்பு

சிவகார்த்திகேயன் எதிர்பார்க்காத டாக்டர் வசூல்!

ஜெய் பீம் கதைக்களம்!

2 நிமிட வாசிப்பு

ஜெய் பீம்  கதைக்களம்!

10 ஆண்டுகளுக்குப் பின் நடிக்கும் வாணி விஸ்வநாத்

2 நிமிட வாசிப்பு

10 ஆண்டுகளுக்குப் பின் நடிக்கும் வாணி விஸ்வநாத்

வியாழன் 12 ஆக 2021