மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 10 ஆக 2021

விட்ட இடத்தைப் பிடிக்க போராடும் மூத்த இயக்குநர்கள் !

விட்ட இடத்தைப் பிடிக்க போராடும் மூத்த இயக்குநர்கள் !

ஒரு காலத்தில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட பல இயக்குநர்கள் காலத்தின் கட்டாயத்தால் திரைத்துறையின் வெளிச்சத்திலிருந்து விலகியிருப்பார்கள். அதில், சில பெரிய இயக்குநர்கள் நடிகர்களாக தங்களை தகவமைத்துக் கொண்டனர். ஒரு சில வெற்றி இயக்குநர்கள் விட்ட இடத்தைப் பிடிக்க போராடி வருகிறார்கள். அப்படியான, மூன்று இயக்குநர்களின் அடுத்தப் பாய்ச்சல் குறித்துப் பார்க்கலாம்.

ஆனந்தம், ரன், சண்டக் கோழி, பையா, வேட்டை என கமர்ஷியல் ஹிட் கொடுத்த இயக்குநர் லிங்குசாமி. இவரின் வீழ்ச்சியை இரண்டு படங்கள் நிர்ணயித்தது. இவர் இயக்கிய அஞ்சான் மற்றும் இவர் தயாரித்த உத்தமவில்லன். இவ்விரு படங்களால் மிகப்பெரிய வீழ்ச்சியைச் சந்தித்தார் லிங்குசாமி. அதன்பிறகு, புதிய வாய்ப்புகளும் வரவில்லை.

இவர் இயக்கத்துக்கும் தயாராகவில்லை. இறுதியாக, வெளியான சண்டைக் கோழி 2வும் பெரிதளவில் கைகொடுக்கவில்லை. தமிழ் சினிமா கைகொடுக்காததால் தெலுங்கு சினிமா பக்கம் சென்றுவிட்டார் லிங்குசாமி. தெலுங்கு நடிகர் ராம் பொத்தனேனி நடிப்பில் லிங்குசாமி இயக்கும் படம் துவங்கிவிட்டது. தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் இப்படம் உருவாகி வருகிறது. இந்தப் படமே லிங்குவின் அடுத்தப் பாய்ச்சலுக்கு நங்கூரம் போடப் போகும் படம். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, இப்படம் ஓடிடிக்கு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

லிங்குசாமிக்கும் சீனியர், தமிழின் மற்றுமொரு மூத்த இயக்குநர் வசந்த். கேளடி கண்மனி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். அஜித் நடிக்க ஆசை, விஜய், சூர்யா நடித்த நேருக்கு நேர், பூவெல்லாம் கேட்டுப்பார், அப்பு, ரிதம் என இவர் இயக்கிய எல்லா படமுமே க்ளாசிக் ஹிட். இறுதியாக இவர் இயக்கத்தில் 2013-ல் ‘மூன்று பேர் மூன்று காதல்’ படம் வெளியானது. அதன்பிறகு, தற்பொழுது நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகியிருக்கும் நவரசாவில் ‘பாயாசம்’ எனும் குறும்படத்தை இயக்கியுள்ளார். டெல்லி கணேஷ், ரோகினி, அதிதிபாலன் நடித்திருக்கும் இந்தக் கதைக்குப் பெரியளவில் வரவேற்பு கிடைத்திருக்கிறது. சொல்லப் போனால், நவரசாவில் இடம் பெற்ற ஒன்பது கதைகளில் ஆல் பாஸ் வாங்கியது இந்தப் படம் தான். பாயாசம் மூலமாக மீண்டும் ரீ எண்ட்ரிக்கான கதவைத் திறந்திருக்கிறார் வசந்த். இவரின் அடுத்தப் பாய்ச்சலுக்கு பெரிதும் நம்பும் படம் ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’. இந்தப் படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகிறது. மேக்ஸிமம் சோனி லிவ் ஓடிடியில் வருகிற செப்டம்பரில் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.

வடிவேலு நடிக்க ‘இம்சை அரசன் 23ஆம்புலிகேசி’, அரை எண் 305ல் கடவுள், இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம், ஒரு கன்னியும் மூன்று களவானிகளும், புலி என ஃபேண்டசி படங்களுக்குப் பெயர் போனவர் சிம்புதேவன். இவர் இயக்கிய எல்லாப் படங்களுமே டாப் ஹிட். ஆனால், வடிவேலு நடிக்க ஷங்கர் தயாரிக்க உருவாக இருந்த ‘இம்சை அரசன் 24ஆம் புலிகேசி’ படத்தில் ஏற்பட்ட சிக்கலால் அடுத்தடுத்து படவாய்ப்புகள் இல்லாமல் போனது. அதோடு, விஜய் நடித்த புலி படமும் இவருக்கு மிகப்பெரிய பின்னடைவைத் தந்தது. தற்பொழுது, அதிலிருந்து மீண்டுவர ஆந்தாலஜி படமொன்றைக் கையில் எடுத்திருக்கிறார் சிம்புதேவன். வெங்கட்பிரபு தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கத்தில் உருவாகிவரும் ஆந்தாலஜி ‘கசடதபற’. ஆறு கதைகள் கொண்டப் படமாக இது உருவாகியிருக்கிறது. இதில், இயக்குநர் வெங்கட் பிரபு, பிரேம்ஜி, சாந்தனு, சந்தீப் கிஷன், ஹரிஷ் கல்யாண், ரெஜினா, விஜயலட்சுமி, ப்ரியா பவானி சங்கர் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நிறைந்திருக்கிறது. ஒவ்வொரு கதைக்கும் வேறு வேறு ஒளிப்பதிவாளர்கள், இசையமைப்பாளர்கள், எடிட்டர்கள் பணியாற்றியிருக்கிறார்கள். 2019லேயே முடிந்துவிட்ட இப்படம், லாக்டவுனால் தள்ளிப் போனது. தற்பொழுது, சோனி லிவ் ஓடிடியில் வெளியாக இருக்கிறது. இந்தப் படமே சிம்புதேவனின் ரீ எண்ட்ரிக்கு பெரிது கைகொடுக்கும் என நம்பப்படுகிறது.

- ஆதினி

அஜித்குமார் கேட்ட ஆலோசனை!

2 நிமிட வாசிப்பு

அஜித்குமார் கேட்ட ஆலோசனை!

வெற்றியை பதிவு செய்த கோடியில் ஒருவன்!

4 நிமிட வாசிப்பு

வெற்றியை பதிவு செய்த கோடியில் ஒருவன்!

பிக்பாஸ் ஒளிபரப்பு தேதிகள் அறிவிப்பு!

5 நிமிட வாசிப்பு

பிக்பாஸ்  ஒளிபரப்பு தேதிகள் அறிவிப்பு!

செவ்வாய் 10 ஆக 2021