மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 9 ஆக 2021

ஒலிம்பிக் நிறைவு: ஏழு பதக்கங்களுடன் இந்தியா!

ஒலிம்பிக் நிறைவு:  ஏழு பதக்கங்களுடன் இந்தியா!

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை, உலக நாடுகள் பங்கேற்கும் சர்வதேச விளையாட்டுத் திருவிழாவான ஒலிம்பிக் போட்டிகள், நேற்று இரவு (ஆகஸ்ட் 8) இனிதே நிறைவடைந்தது.

32ஆவது ஒலிம்பிக் திருவிழா ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த மாதம் 23ஆம் தேதி தொடங்கி நடைபெற்றது. 206 நாடுகளில் இருந்து 11,000-க்கும் மேற்பட்ட வீரர்கள் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று திறமையை வெளிப்படுத்தினர். விறுவிறுப்பாக நடைபெற்ற ஒலிம்பிக் போட்டி நேற்றுடன் நிறைவடைந்தது.

விழாவில் வண்ண லேசர் காட்சிகள், வாண வேடிக்கைகள் மற்றும் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. அத்துடன் நிறைவு விழா அணிவகுப்பும் நடைபெற்றது. இதில், இந்திய அணிக்கு மல்யுத்த போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற பஜ்ரங் பூனியா தலைமை தாங்கி தேசியக் கொடியை ஏந்தி சென்றார்.

நிறைவு விழாவில் பங்கேற்க இந்திய வீரர்களுக்கு எந்த கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை. விரும்பும் அனைவரும் பங்கேற்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அதிகாரிகள் தரப்பில் 10 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டனர்.

இந்த ஒலிம்பிக்கில் அமெரிக்கா 39 தங்கப் பதக்கம் உட்பட மொத்தமாக 113 பதக்கங்களை வென்று முதலிடம் பிடித்துள்ளது. இறுதி நாளில் மூன்று தங்கப் பதக்கங்கள் வென்று சீனாவைப் பின்னுக்கு தள்ளி அமெரிக்கா முதலிடம் பிடித்தது. சீனா, ஜப்பான், பிரிட்டன் மாதிரியான நாடுகள் அடுத்தடுத்த இடத்தை பிடித்துள்ளன.

இந்தியா இந்த ஒலிம்பிக்கில் ஒரு தங்கம், இரண்டு வெள்ளி, நான்கு வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது. இந்தியா இந்தப் பட்டியலில் 48ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. இந்தியாவின் சார்பில் 53 பெண்கள் 68 ஆண்கள் என 121 பேர் கலந்து கொண்ட இந்த ஒலிம்பிக்கில் வரலாற்றில் முதன்முறையாக ஒரு தங்கம், இரு வெள்ளி, நான்கு வெண்கலம் என மொத்தம் ஏழு பதக்கங்களை வென்று புதிய சாதனை படைத்திருக்கிறது

இந்தியா கடந்த 100 ஆண்டுகளாக தடகளத்தில் ஒரு பதக்கத்தைக் கூட வெல்லவில்லை. அந்த கனவு தாகத்தை தன் நிராகரிக்க முடியாத வெற்றி மூலம் தணித்திருக்கிறார் நீரஜ் சோப்ரா.

87.58 மீட்டர் தூரம் வீசி இந்தியாவின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தார் 24 வயது இளைஞர் நீரஜ் சோப்ரா. நீரஜ் வெள்ளி அல்லது வெண்கலம் வெல்லவே அதிக வாய்ப்பு இருக்கிறது என எதிர்பார்க்கப்பட்டது. தங்கம் வென்றதில் ஒட்டுமொத்த இந்தியாவும் மகிழ்ச்சியில் திளைத்தது.

இப்போது தூவப்பட்டிருக்கும் விதைகள், அடுத்த ஒலிம்பிக்கில் விருட்சங்களாகும் என்கிற நம்பிக்கையில் இந்தியா விடைபெற்றுள்ளது.

விழாவின் முடிவில், அடுத்த ஒலிம்பிக் போட்டியை (2024ஆம் ஆண்டு) நடத்தும் நாடான பிரான்சிடம் ஒலிம்பிக் தீபம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டது.

-ராஜ்

.

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

4 நிமிட வாசிப்பு

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

3 நிமிட வாசிப்பு

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

‘எனிமி’க்கு எனிமியான அண்ணாத்த

10 நிமிட வாசிப்பு

‘எனிமி’க்கு எனிமியான அண்ணாத்த

திங்கள் 9 ஆக 2021