சிம்பு படத்தின் தலைப்பு மாற்றம் ஏன்?

entertainment

சிம்புவின் நடிப்பில் இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கும், புதிய படத்தின் தலைப்பு ‘வெந்து தணிந்தது காடு’ என்ற அறிவிப்பு நேற்று முன்தினம் வெளியானது.

இந்தத் தலைப்பு நேற்று முன்தினம்தான் அறிவிக்கப்பட்டது என்றாலும் இது அந்தப் படத்தின் முதல் தலைப்பு அல்ல. இரண்டாவது தலைப்பு. இந்தப் படத்துக்கு முதலில் ‘நதிகளிலே நீராடும் சூரியன்’ என்றுதான் தலைப்பு வைக்கப்பட்டிருந்தது.

இந்தத் தலைப்பு கெளதம் மேனனுக்கு சரி. ஆனால், சிம்புவின் ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியாமல் இருந்தது. சிம்புவின் தற்போதைய ரசிகர்கள் லோ கிளாஸ் மக்கள் என்பதால் இது சட்டென அவர்களுக்குப் பிடிபடவில்லை.

என்னதான் இணையத்தில் எழுதினாலும், பேசினாலும்.. சட்டென்று வாயில் வராத பெயராகவும், கவனத்தை ஈர்க்கும் பெயராகவும் இல்லாமல் கவிதைத்தனமாக இருப்பதை சிம்புவுக்கு அவரது ரசிகர்கள் பலவிதங்களில் சொல்லிக் காட்டினார்கள்.

பொதுவாகவே கெளதம் மேனனின் படங்களின் தலைப்புகளெல்லாம் வித்தியாசமாகத்தான் இருக்கும்.

அவரது முதல் படமான ‘மின்னலே’ தொடங்கி, ‘காக்க காக்க’, ‘வேட்டையாடு விளையாடு’, ‘பச்சைக்கிளி முத்துச்சரம்’, ‘வாரணம் ஆயிரம்’, ‘விண்ணைத் தாண்டி வருவாயா’, ‘நடுநிசி நாய்கள்’, ‘நீதானே என் பொன் வசந்தம்’, ‘என்னை அறிந்தால்’, ‘அச்சம் என்பது மடமையடா’, ‘எனை நோக்கி பாயும் தோட்டா’, ‘துருவ நட்சத்திரம்’ என்று கடைசி படம் வரையிலும் தலைப்பிலேயே ஒரு வித்தியாசத்தைக் காட்டியிருந்தார் கெளதம் மேனன்.

இருந்தாலும் இந்த ‘நதிகளிலே நீராடும் சூரியன்’ என்ற தலைப்பு தரை கிளாஸ் ரசிகர்களிடமிருந்து சிம்புவைப் பிரிக்கிறது என்பதை கெளதம் மேனனிடம் சொல்லியிருக்கிறார்கள் தயாரிப்பாளர் ஐசரி கணேஷும், நாயகன் சிலம்பரசனும்.

இதனால் தலைப்பை மாற்ற ஒப்புக்கொண்ட கெளதம் மேனன் கடைசியில் கதையையே மாற்றிவிட்டார். இதற்கு காரணம் சிலம்பரசனின் இன்னொரு பிடிவாதம்.

தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன், கர்ணன் படம் போல தானும் ஒரு படம் நடிக்க வேண்டும். “கிராமத்துக் கதையாகவும் இருக்க வேண்டும். அனைவருக்கும் பிடித்தது போலவும் இருக்க வேண்டும்” என்ற சிலம்பரசன் விருப்பத்துக்காகத் தான் தயாராக வைத்திருந்த கதையைத் தள்ளி வைத்துவிட்டு சிம்புவுக்காக கதை தேட ஆரம்பித்தார் கெளதம் மேனன்.

எழுத்தாளர் ஜெயமோகனின் கதையான ‘அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்’ என்ற சிறுகதை ‘அசுரன்’ பாணியில் உருவாகியிருக்கும் கதையாகத் தென்பட அதையே படமாக்க முடிவு செய்திருக்கிறார் கெளதம் மேனன். ஜெயமோகனையே இந்தப் படத்துக்கு திரைக்கதை, வசனம் எழுதவும் சொல்லியிருக்கிறார் கெளதம் மேனன்.

இதனாலேயே மகாகவி பாரதியார் எழுதிய ‘அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்’ என்ற பாடலில் இருந்த ‘வெந்து தணிந்தது காடு’ என்ற வரிகளைத் தேடிப் பிடித்துத் தலைப்பாக்கியிருக்கிறார் கெளதம் மேனன். திருச்செந்தூரில் இந்தப் படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கிவிட்டார்கள்.

**-இராமானுஜம்**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *