மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 8 ஆக 2021

ஆயிரத்தில் ஒருவன் 2 டிராப்.. காரணம் இதுதான் !

ஆயிரத்தில் ஒருவன் 2 டிராப்.. காரணம் இதுதான் !

தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ‘ஜெகமே தந்திரம்’, மாரி செல்வராஜ் இயக்கத்தில் ‘கர்ணன்’ படங்கள் வெளியாகிவிட்டது. இதைத்தொடர்ந்து, அக்‌ஷய்குமாருடன் நடித்திருக்கும் பாலிவுட் படமான ‘அட்ராங்கி ரே’ இந்த வருடத்தின் மூன்றாவது ரிலீஸ்.

தனுஷ் கைவசம் ஹாலிவுட் படமான ருஸ்ஸோ பிரதர்ஸ் இயக்கத்தில் ‘க்ரே மேன்’, கார்த்திக் நரேன் இயக்கத்தில் ‘மாறன்’, மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் சன்பிக்சர்ஸ் தயாரிக்கும் ‘தனுஷ் 43’, தெலுங்கு இயக்குநர் சேகர்கம்முலா இயக்கும் படம், இதற்கு நடுவே, சகோதரர் செல்வராகவன் இயக்கத்தில் ‘நானே வருவேன்’ படங்கள் தயாராகிவருகிறது.

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்தின் முதல்கட்டப் பணியான போட்டோ ஷூட் சமீபத்தில் நடந்தது. அதோடு, கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு வருகிற ஆகஸ்ட் 20ஆம் தேதி துவங்குகிறது.

இந்த வருடத்தின் துவக்கத்தில் தனுஷ் தரப்பிலிருந்து சர்ப்ரைஸ் ஒன்று வெளியானது. அதுதான், செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்க இருக்கும் ஆயிரத்தில் ஒருவன் படத்தின் அறிவிப்பு. இந்தப் படத்துக்கான டைட்டில் லுக் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி படு வைரலானது. போஸ்டரில் 2024 ரிலீஸ் என்பது போல குறிப்பிடப்பட்டிருந்தது.

2024 ரிலீஸாக வேண்டுமென்றால் 2022ல் படத்தின் படப்பிடிப்பு துவங்கியாக வேண்டும். அதற்குள், தனுஷ் மேற்கொண்டிருக்கும் கமிட்மெண்டுகளை முடித்துக் கொடுக்க வேண்டும். இவையெல்லாம் சாத்தியமா என்று யோசித்துக் கொண்டிருக்கையில் மற்றுமொரு தகவல் செல்வராகவன் தரப்பிலிருந்து கிடைத்தது.

ஆயிரத்தில் ஒருவன் 2 படம் டிராப் என்று சொல்லப்படுகிறது. இந்தப் படத்துக்கான அனைத்துப் பணிகளையும் நிறுத்திவிட்டதாகவும், மேற்கொண்டு தொடர மாட்டார்கள் என்றும் சொல்லப்படுகிறது. அதற்கு ஒரு காரணமும் சொல்கிறார்கள். ஆயிரத்தில் ஒருவன் படமானது மிகப்பெரிய பட்ஜெட்டில் மட்டுமே சாத்தியம்.

இந்தப் படத்துக்கான முதல் கட்ட ஸ்கிரிப்ட், ஆராய்ச்சிக்காக மட்டுமே பெரும் செலவு பிடிக்குமாம்.அதன்பிறகு, இந்த கொரோனா காலக்கட்டத்தில் பெரும் முதலீட்டில் படத்தை தயாரிக்க யாரும் முன்வரவில்லை என்றும் சொல்லப்படுகிறது. அதனால், ஆயிரத்தில் ஒருவன் 2 என்பது செல்வராகவனுக்கு கனவாகவே முடிந்துவிடும் என்று கருதப்படுகிறது.

செல்வராகவனும் நடிகராக ‘சாணிக் காயிதம்’ படத்தை முடித்துவிட்டார். விஜய்யுடன் நெல்சன் இயக்கும் ‘பீஸ்ட்’ படத்தில் வில்லத்தனம் காட்ட இருக்கிறார். அதனால், செல்வராகவனுக்கு ‘கான்’, ‘மன்னவன் வந்தானடி’ வரிசையில் ஆயிரத்தில் ஒருவனின் ஸ்கிரிப்டும் அவரின் லைப்ரரியில் பாதுகாப்பாக இருக்கும்.

- ஆதினி

ஷாருக்கான் மகனால் பாதிக்கப்பட்ட கலைஞர்கள்!

3 நிமிட வாசிப்பு

ஷாருக்கான் மகனால் பாதிக்கப்பட்ட கலைஞர்கள்!

ஐபிஎல் 2021: நான்காவது முறையாகக் கோப்பையை வென்ற சென்னை அணி!

5 நிமிட வாசிப்பு

ஐபிஎல் 2021: நான்காவது முறையாகக் கோப்பையை வென்ற சென்னை அணி!

அண்ணாத்த டீசர் முழுவதும் ரஜினி

5 நிமிட வாசிப்பு

அண்ணாத்த டீசர் முழுவதும் ரஜினி

ஞாயிறு 8 ஆக 2021