மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 5 ஆக 2021

48 மணிநேரத்தில் 30.30 லட்சம்.. தனுஷூக்கு கெடு விதித்த நீதிமன்றம் !

48 மணிநேரத்தில் 30.30 லட்சம்.. தனுஷூக்கு கெடு விதித்த நீதிமன்றம் !

பெரும் பணம் படைத்தவர்கள் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யும் சொகுசு கார்களுக்கு சைலண்டாக வரிவிலக்குக் கோரி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்கிறார்கள். வருடத்துக்கு கோடிகளில் வருமானம் ஈட்டுபவர்களுக்கு செலுத்த வேண்டிய வரித் தொகையானது சொற்பமாக இருந்தாலும் நீதிமன்றத்தை நாடுவது வாடிக்கையாகிவிட்டது.

சமீபத்தில் சொகுசு காருக்கான வரிவிலக்கு கோரி நடிகர் விஜய்யின் வழக்கிற்கு நீதிபதியின் காட்டமான பதில்கள் பரபரப்பாகப் பேசப்பட்டது. இந்நிலையில், விஜய்யைத் தொடர்ந்து தனுஷூக்கும் சரமாரியான கேள்விகளை எழுப்பியுள்ளது நீதிமன்றம்.

கடந்த 2015ஆம் ஆண்டு வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட வாகனத்துக்கு நுழைவு வரி வசூலிக்கத் தடை விதிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் தனுஷ். அதன்படி, அவரின் வாகனத்துக்கு 60 லட்சத்து 66 ஆயிரம் ரூபாயை நுழைவு வரியாக செலுத்த வணிகவரித் துறை உத்தரவிட்டதை எதிர்த்து இந்த வழக்கு தொடரப்பட்டிருந்தது.

விஜய் வழக்கினை விசாரித்த நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் இந்த வழக்கையும் விசாரித்தார். இன்று, காலையில் வழக்கானது விசாரணைக்கு வந்தது. தனுஷ் தரப்பிலிருந்து தனுஷின் வழக்கறிஞர் ஆஜரானார்.

“தாக்கல் செய்த மனுவில் தனுஷ் என்ன வேலை செய்கிறார் என்பது குறிப்பிடவில்லையே? அது குறிப்பிட வேண்டியது கட்டாயம் தானே? சட்டத்தின் முன்பு அனைவரும் சமம். பெட்ரோல் விலை ஏற்றம் காரணமாக வெறும் 50ரூபாய்க்கு பெட்ரோல் போடும் சாமானியர் கூட வரி செலுத்தி வருகிறார்கள். அவர்கள் ஏதும் வழக்குத் தொடரவில்லையே. அதுபோல, ஒரு சோப்பு வாங்கும் சாமானியர்கள் கூட முறையாக வரி செலுத்துகிறார். பால்காரர் ஜிஎஸ்டி கட்ட முடியாதென நீதிமன்றத்தை நாடுகிறாரா? மக்கள் வரிப்பணத்தில் போடப்படும் சாலையைப் பயன்படுத்தும்போது, அதற்கான வரியை செலுத்த வேண்டியது அவசியம் தானே? ” என நீதிபதி சரமாரியான கேள்விகளை எழுப்பினார்.

அதோடு, தனுஷ் செலுத்த வேண்டிய மொத்த வரித் தொகை எவ்வளவு என்பதை வணிக வரித்துறையானது கணக்கீடு செய்து, நண்பகல் 2.15 மணிக்குள் கூற வேண்டுமெனவும் உத்தரவிட்டார்.

தனுஷ் தரப்பானது வரியை செலுத்த தயாராக இருந்தது. ஆனால், வருகிற திங்கட்கிழமை வரை அனுமதி கேட்டிருந்தது. இந்நிலையில், நண்பகல் மீண்டும் விசாரணையானது தொடங்கியது. தனுஷ் காருக்கான மொத்த நுழைவு வரியானது 60.66 லட்சம் ரூபாய் என்பதை வணிக வரி கணக்கீட்டாளர் தெரிவித்தார்.

விசாரணையின் முடிவில், 50 சதவிகித வரியை அடுத்த 48 மணிநேரத்துக்குள் செலுத்துமாறு உத்தரவிட்டார் நீதிபதி. அதன்படி, நிலுவை வரியான 30.33 லட்சத்தை செலுத்தி போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்துகொள்ளலாம் என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

கூடுதலாக, மீதித் தொகை செலுத்துவதா அல்லது விலக்கு கிடைக்குமா என்பது குறித்து பின்னர் தீர்மானிக்கலாம் என்றும் நீதிபதி கூறியுள்ளார்.

- ஆதினி

பொன்னியின் செல்வன் ‘வந்தியதேவன்’ புறப்பட்டார்!

2 நிமிட வாசிப்பு

பொன்னியின் செல்வன் ‘வந்தியதேவன்’ புறப்பட்டார்!

மிஷ்கின் இயக்கத்தில் நடித்தது ஏன்?: விஜய்சேதுபதி

3 நிமிட வாசிப்பு

மிஷ்கின் இயக்கத்தில் நடித்தது ஏன்?: விஜய்சேதுபதி

வெங்கட்பிரபுவுடன் ஜோடி சேர்ந்த சினேகா

2 நிமிட வாசிப்பு

வெங்கட்பிரபுவுடன் ஜோடி சேர்ந்த சினேகா

வியாழன் 5 ஆக 2021