மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 4 ஆக 2021

சிம்பு பட சிக்கல்: தோல்வியில் முடிந்த பேச்சுவார்த்தை!

சிம்பு பட சிக்கல்: தோல்வியில் முடிந்த பேச்சுவார்த்தை!

கெளதம் மேனன் இயக்கத்தில் சிலம்பரசன் நடிக்கவிருக்கும் 'நதிகளிலே நீராடும் சூரியன்' படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 6ஆம் தேதி தொடங்குவதாக இருந்தது. ஆனால், படப்பிடிப்பு தொடங்குவதில் சிக்கல் நீடிக்கிறது.

தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன், 'சிம்புவால் இருபது கோடி ரூபாய் நஷ்டம். அதற்கு அவர் பதில் சொல்ல வேண்டும்' என்று தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் கொடுத்திருக்கிறார்.

'இந்தப் புகார் குறித்து விசாரிக்க வேண்டும், அதுதொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்தி சுமுக முடிவு காணும்வரை சிம்பு படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்க வேண்டாம்' என தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத்திடம் சொல்ல அவர்களும் அதை ஏற்றுக்கொண்டனர்.

இந்தச் சிக்கல் தொடர்பான பேச்சுவார்த்தைக்குத் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் சிலம்பரசனுக்கு அழைப்பு விடுத்திருந்தது. ஆகஸ்ட் 2, காலை 11.30 மணிக்கு பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இந்தப் பேச்சுவார்த்தையில்,தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகளும் திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளன தலைவர் ஆர்.கே.செல்வமணி மற்றும் சிம்பு சார்பாக அவருடைய அம்மா உஷா ராஜேந்தர் ஆகியோர் கலந்துகொண்டிருக்கிறார்கள்.

அப்போது, பாதிக்கப்பட்ட தயாரிப்பாளர்களின் சிக்கல்கள் குறித்து உஷா ராஜேந்தரிடம் எடுத்துச் சொல்லப்பட்டதாம். எல்லாவற்றையும் கேட்டுக்கொண்ட உஷா ராஜேந்தர், 'வீட்டுக்குப் போய் சிலம்பரசனிடம் பேசிவிட்டு சொல்கிறேன்' என்று சொல்லிவிட்டுப் போயிருக்கிறார்.

அவர்களிடம் இருந்து முறையான பதில் கிடைக்கும்வரை சிம்பு படப்பிடிப்புக்கு ஒத்துழைப்பு தருவதில்லை என்கிற முடிவும் தொடர்கிறதாம். இது சம்பந்தமாக மூத்த தயாரிப்பாளர்கள் சிலரிடம் பேசியபோது, '2017இல் வெளியான படம் அன்பானவன் அசராதவன் அடங்காதவன்.

இந்தப் படத்தில் ஏற்பட்ட நஷ்டம் சம்பந்தமாக கடந்த நான்கு வருடக் காலமாக பல்வேறு நிலைகளில் எல்லோரும் பேச்சுவார்த்தை நடத்தி விட்டனர். ஆனால், ஒவ்வொரு முறையும் வீட்டுக்குப் போய் சிலம்பரசனிடம் பேசிவிட்டு பதில் சொல்கிறேன் என வேதாளம் முருங்கை மரம் ஏறிய கதையாக உஷா ராஜேந்தர் கூறிவிட்டு போவது வாடிக்கையாக உள்ளது.

பாதிக்கப்பட்டவன் செயல் இழக்கும்வரை போராட விட்டு இயல்பாகவே அவனை செயல் இழக்க செய்வது உஷா ராஜேந்தர் சினிமாவில் கையாளும் யுக்தியாக உள்ளது. சிலம்பரசன் கொடுக்க விரும்பினாலும் உஷா ராஜேந்தர் அதைத் தடுத்துவிடுவார். அவரை பொறுத்தவரை வாங்க மட்டுமே தெரியும் திரும்பி கொடுக்க விரும்ப மாட்டார்கள்' என்கின்றனர்.

நடைபெற்ற பேச்சுவார்த்தை சம்பந்தமாக சங்க நிர்வாகிகளிடம் பேசியபோது, 'தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் தோல்வி அடைந்ததால் தொழில்ரீதியாக தன் மகனுக்குப் பாதுகாப்பு வேண்டும் என்று தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் என ஒன்றை டி.ராஜேந்தர் தொடங்கினார். அவ்வப்போது ஏதாவது ஒரு அறிவிப்பை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துவது அவரது பழக்கம்.

தன் குடும்ப உறுப்பினர்கள் பதவி வேண்டும் என்பதற்காக மேலும் சிலர் அவரது சங்கத்தில் உறுப்பினர்களாக தொடக்கத்தில் இணைந்தனர். அவர்களும் ஒவ்வொருவராக வெளியேறி விட்டனர். இந்த முறை பிரச்சினைக்கு முடிவு ஏற்படாதவரை சிலம்பரசன் சம்பந்தப்பட்ட எந்தவொரு படப்பிடிப்பையும் நடத்த இயலாது.

தனிநபர் சங்கத்தை விரோதித்துக்கொண்டு, கட்டுப்பட்டு நடக்காமல் தொழிலில் நீடிக்க முடியாது. எனவே சிலம்பரசன் தனது தவற்றை உணர்ந்து சங்க முடிவுக்குக் கட்டுப்பட்டு நடப்பார் என எதிர்பார்க்கிறோம்' என்றனர்.

-இராமானுஜம்

ஆன்டி இண்டியன் - விமர்சனம்!

12 நிமிட வாசிப்பு

ஆன்டி இண்டியன் - விமர்சனம்!

அர்ஜுன் மீது 'மீ டூ 'புகார்: விரைவில் விசாரணை அறிக்கை!

2 நிமிட வாசிப்பு

அர்ஜுன் மீது 'மீ டூ 'புகார்:  விரைவில் விசாரணை அறிக்கை!

அஜித்துக்கு கைதட்டல் வாங்கிக்கொடுத்த சிவசங்கர்: கே.எஸ்.ரவிகுமார் ...

3 நிமிட வாசிப்பு

அஜித்துக்கு கைதட்டல் வாங்கிக்கொடுத்த சிவசங்கர்: கே.எஸ்.ரவிகுமார்

புதன் 4 ஆக 2021