மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 4 ஆக 2021

விஜய்யைத் தொடர்ந்து தனுஷ் வழக்கில் நாளை விசாரணை!

விஜய்யைத் தொடர்ந்து தனுஷ் வழக்கில் நாளை விசாரணை!

இறக்குமதி செய்யப்பட்ட காருக்கு நுழைவு வரியை ரத்து செய்யக் கோரிய நடிகர் விஜய்யின் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் நுழைவு வரி தொடர்பாக நடிகர் தனுஷ் தொடர்ந்த வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது.

1999இல் வில்லியம் ஃபர்ணன்டஸ் என்பவர் கேரள உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், ‘வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு இறக்குமதி வரி செலுத்தும்போது அந்த பொருள்களுக்கு நுழைவு வரி பொருந்தாது’ என்று தீர்ப்பு வழங்கியது.

இந்தத் தீர்ப்பின் அடிப்படையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஏராளமான வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. அதுபோன்று தான் நடிகர் விஜய்யும் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு, நுழைவு வரி செலுத்தத் தடை விதிக்க வேண்டுமென்று 2012இல் மனு தாக்கல் செய்து இருந்தார்.

இந்த வழக்கில் கடந்த ஜூலை 13ஆம் தேதி உத்தரவிட்ட நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், விஜய்க்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்ததுடன், நடிகர்கள் ரியல் ஹீரோக்கள் ஆக இருக்கவேண்டும், ரீல் ஹீரோக்களாக இருக்கக்கூடாது என்று அறிவுறுத்தினார்.

இந்த தீர்ப்பை எதிர்த்து நடிகர் விஜய் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இதனை விசாரித்த நீதிமன்றம் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்ததுடன், விஜய் ஏற்கனவே செலுத்திய நுழைவு வரி 20 விழுக்காடு போக எஞ்சியுள்ள 80 விழுக்காடு நுழைவு வரியைச் செலுத்த உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது.

விஜய் போன்று நடிகர் தனுஷும் 2015ஆம் ஆண்டு வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட வாகனத்துக்கு நுழைவு வரி வசூலிக்கத் தடை விதிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வாகனத்துக்கு 60 லட்சத்து 66 ஆயிரம் ரூபாயை நுழைவு வரியாக செலுத்த வணிகவரித் துறை உத்தரவிட்டதை எதிர்த்து வழக்கு தொடர்ந்திருந்தார்.

இவ்வழக்கில் 50 சதவிகித வரியைச் செலுத்தும் பட்சத்தில் காரை பதிவு செய்ய வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் இவ்வழக்கு நீதிபதி சுப்பிரமணியம் முன் விசாரணைக்கு வந்தபோது தனுஷ் தரப்பில் வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராகாததால் விசாரணையை ஆகஸ்ட் 5ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். அதன்படி வழக்கில் நாளை விசாரணை நடைபெற்று உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

-பிரியா

என்னை கைது செய்ய வந்தால்...: கங்கனா

2 நிமிட வாசிப்பு

என்னை கைது செய்ய வந்தால்...: கங்கனா

ஐந்து உணர்வுகள்: ஞான ராஜசேகரன் ஆதங்கம்!

2 நிமிட வாசிப்பு

ஐந்து உணர்வுகள்: ஞான ராஜசேகரன் ஆதங்கம்!

மாநாடு ரிலீஸ் ஆனது எப்படி?

10 நிமிட வாசிப்பு

மாநாடு ரிலீஸ் ஆனது எப்படி?

புதன் 4 ஆக 2021