மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 2 ஆக 2021

இந்த ஆகஸ்டில் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!

இந்த ஆகஸ்டில் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!

திரையரங்கில் என்னென்ன படங்கள் வெளியாகிறது என்று பட்டியலிடும் காலம் மீண்டும் எப்போது வருமென எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். அதுவரை, நவீன மாற்றத்தை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

திரையரங்குகள் இல்லாத இடத்தை ஓடிடி தளங்கள் நிரப்பிக்கொண்டிருக்கின்றன. திரையரங்குகள் கொடுக்கும் அனுபவத்தை, கொண்டாட்டத்தைத் தர முடியாவிட்டாலும், ஓடிடியும் தனக்கான தனித்துவத்துடன் இயங்கிக்கொண்டிருக்கிறது.

திரையரங்கில் வெளியாகியிருந்தால் மக்கள் மத்தியில் மிகப்பெரிய இடத்தைத் தொட்டிருக்கும் ‘சார்பட்டா பரம்பரை’ படத்தை, மிகச்சிறிய திரையில் பார்க்க வேண்டிய சூழல் நிலவுகிறது. சரி, இந்த ஆகஸ்ட் மாதத்தில் ஓடிடியில் உறுதியாகியிருக்கும் படங்கள் எவை, எந்தப் படங்களெல்லாம் வெளியாக அதிக வாய்ப்பிருக்கிறது என்கிற முழுமையான பட்டியலைப் பார்த்துவிடலாம்.

இந்த மாதத்திற்கான முதல் ரிலீஸ் நவரசா. மணிரத்னத்தின் முயற்சியாக ஒன்பது இயக்குநர்கள் இயக்க, ஒன்பது கதையுடன் உருவாகியிருக்கும் ஆந்தாலஜி. ஓடிடிக்கென திட்டமிட்டு உருவாகியிருக்கிறது. ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு ரசங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகியிருக்கிறது. சூர்யா, விஜய்சேதுபதி, சித்தார்த், பார்வதி, அதர்வா, பாபி சிம்ஹா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இதன் டீஸர் வீடியோ வெளியாகி பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. நவரசா வெப் ஆந்தலாஜியானது வருகிற ஆகஸ்ட் 6ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகிறது.

அடுத்தது நெற்றிக்கண். அம்மனாக நயன்தாரா நடித்து வெளியான ‘மூக்குத்தி அம்மன்’ படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகி செம ஹிட். பொதுவாக, ஒரு படம் வெளியாகி பெறும் வசூலை அடிப்படையாகக்கொண்டு அடுத்த படத்தின் வியாபாரம் இருக்கும். அப்படி, ஓடிடியில் வெளியான முந்தைய படத்தின் வெற்றியே, அடுத்த படத்தையும் ஓடிடிக்கு கொண்டுவந்து சேர்த்திருக்கிறது. ‘நெற்றிக்கண்’ படத்தை நயன்தாராவுக்காக விக்னேஷ் சிவன் தயாரித்திருக்கிறார். சித்தார்த் நடித்த அவள் படத்தை இயக்கிய மிலிந்த் ராவ் இயக்கியிருக்கிறார். க்ரைம் த்ரில்லராக இந்தப் படம் உருவாகியிருக்கிறது. படத்தில் பார்வை சவால்கொண்ட கேரக்டரில் நயன்தாரா நடித்திருக்கிறார். திரையரங்க ரிலீஸுக்காகத் திட்டமிட்ட இந்தப் படம், டிஸ்னி ஹாட் ஸ்டார் ஓடிடியில் வருகிற ஆகஸ்ட் 13ஆம் தேதி வெளியாகிறது.

நயன்தாராவைப் போலவே, நாயகி முக்கியத்துவம் கொண்ட படங்களில் நடித்து கவனிக்க வைக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். முந்தைய படமான ‘கணவர் பெயர் ரணசிங்கம்’ படம் ஓடிடிக்கு வந்து செம ஹிட். சமீபத்தில், சோனி லிவ் ஓடிடியில் இவரின் ‘திட்டம் இரண்டு’ வெளியாகியுள்ளது. இந்த நிலையில், ஐஸ்வர்யா ராஜேஷின் அடுத்த படம் ‘பூமிகா’. இந்தப் படம் ஆகஸ்ட் 22ஆம் தேதி விஜய் டிவியில் நேரடியாக ஒளிபரப்பாக இருக்கிறது.

ஈட்டி படத்தை இயக்கிய ரவி அரசு இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘ஐங்கரன்’. லேட் ரிலீஸான இந்தப் படத்தை சோனி லிவ் நிறுவனம் கைப்பற்றியிருக்கிறது. இரண்டு வாரத்துக்கு ஒரு படமென ப்ரீமியர் செய்து வருகிறது சோனிலிவ். அதன்படி, ஆகஸ்ட் 13ஆம் தேதிக்கான படமாக ஐங்கரன் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

இந்தப் படங்கள் தவிர, சோனி லிவ் லிஸ்டில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் அரவிந்த்சாமி நடித்திருக்கும் நரகாசூரன் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் மணிகண்டன் இயக்கியிருக்கும் கடைசி விவசாயி படங்களும் இருக்கிறது.

அதோடு, மூத்த இயக்குநர்களான சிம்புதேவனின் ‘கசட தபற’ எனும் ஆந்தாலஜியும், இயக்குநர் வசந்த்தின் ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ படமும் ஓடிடி ரிலீஸுக்காகக் காத்திருக்கிறது.

- ஆதினி

திறந்தவெளியில் ஜெய்பீம் படத்தைக் கண்டுகளித்த மக்கள்!

3 நிமிட வாசிப்பு

திறந்தவெளியில் ஜெய்பீம் படத்தைக் கண்டுகளித்த மக்கள்!

பிரமாண்டமாக நடக்கும் கத்ரினா கைப் திருமணம்!

2 நிமிட வாசிப்பு

பிரமாண்டமாக நடக்கும் கத்ரினா கைப் திருமணம்!

கபில் தேவ் உரிமையைப் பெற்ற பிரித்வி ராஜ்

2 நிமிட வாசிப்பு

கபில் தேவ் உரிமையைப் பெற்ற பிரித்வி ராஜ்

திங்கள் 2 ஆக 2021