மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 2 ஆக 2021

எனக்காக வெண்கலம் வெல்ல வேண்டும்: பி.வி.சிந்து தந்தை நெகிழ்ச்சி!

எனக்காக வெண்கலம் வெல்ல வேண்டும்: பி.வி.சிந்து தந்தை நெகிழ்ச்சி!

“என் மகள் இந்தியாவுக்காக ஒலிம்பிக் பதக்கம் வென்றதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி, எனக்காக வெண்கலம் வெல்ல வேண்டும் என சிந்துவிடம் கோரினேன். அது நிறைவேறியுள்ளது” என்று பி.வி.சிந்துவின் தந்தை நெகிழ்ந்து பேசியுள்ளார்.

டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியின் பேட்மின்டன் பிரிவில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். இதன்மூலம், ஒலிம்பிக் தனிநபர் பிரிவில் இரண்டு பதக்கங்கள் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

ஒலிம்பிக் போட்டியின் பேட்மின்டன் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து சிறப்பான ஆட்டத்தைப் பதிவு செய்து அரையிறுதி வரை முன்னேறினார். ஆனால், அரையிறுதியில் சீன தைபேய் வீராங்கனை தை சூ-யிங்கிடம் அதிர்ச்சிகரமாகத் தோல்வியடைந்தார்.

இதையடுத்து மற்றொரு அரையிறுதியில் தோல்வி அடைந்த சீன வீராங்கனை ஹி பிங் ஜியாவோவை வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் நேற்று (ஆகஸ்ட் 1) இரவு எதிர்கொண்டார் சிந்து. தொடக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்திய பி.வி.சிந்து, முதல் செட்டை 21-13 என வசமாக்கினார். அடுத்த செட்டில் சீன வீராங்கனை சற்று நெருக்கடி அளித்தார். எனினும், சுதாரித்து ஆடிய சிந்து, அந்த செட்டை 21-15 எனக் கைப்பற்றினார்.

இதனால் 21-13, 21-15 என்ற நேர் செட்களில் பி.வி.சிந்து வெற்றி பெற்று வெண்கலப் பதக்கத்தை தனதாக்கினார். இதன்மூலம், டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை இரண்டு ஆக உயர்ந்தது.

இந்த வெற்றியின்மூலம் அடுத்தடுத்து இரண்டு ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார் சிந்து. ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்கள் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றுள்ளார். இதற்கு முன்பு, 2016இல் பிரேசில் நாட்டில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிந்துவின் வெற்றி குறித்து நெகிழ்ச்சியுடன் பேசியிருக்கும் அவரின் தந்தை ரமணா, “என் மகள் இந்தியாவுக்காக ஒலிம்பிக் பதக்கம் வென்றதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி, அடுத்தடுத்த ஒலிம்பிக் போட்டிகளில் தொடர்ந்து பதக்கம் வென்ற முதல் இந்திய பெண் என்ற பெருமை அவருக்குக் கிடைத்திருப்பதில் எனக்கு மகிழ்ச்சி.

இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கும், அரசு மற்றும் ஸ்பான்சர்களுக்கும் முக்கியமாக சிந்துவின் பயிற்சியாளர் பார்க்குக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். சிந்துவின் பயிற்சியாளர் கடினமாகச் செயல்பட்டார்.

சிந்துவுடன் நேற்று தொலைபேசியில் பேசினேன். அரையிறுதியில் தோல்விடைந்ததால் கண்ணீருடன் பேசினார். இருப்பினும் எனக்காக வெண்கலம் வெல்ல வேண்டும் என சிந்துவிடம் கோரினேன். அது நிறைவேறியுள்ளது. மேலும் சீன வீராங்கனையின் ஆட்ட வீடியோக்களையும் அவருக்கு அனுப்பி வைத்தேன்” என்று பேசியுள்ளவர், “சிந்துவால் அடுத்த ஒலிம்பிக்கிலும் பங்கேற்க முடியும்” என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஒலிம்பிக்கில் சாதனை படைத்த பி.வி.சிந்துவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள் பியூஷ் கோயல், மன்சுக் மாண்டவியா, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, தமிழக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் மற்றும் பல்வேறு தலைவர்கள், விளையாட்டு பிரபலங்கள் என அனைத்து தரப்பினரும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தனது ட்விட்டரில், “தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் பேட்மின்டனில் வெண்கலம் வென்றுள்ள சிந்துவுக்கு வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள். எதிர்காலத்தில் அவர் மேலும் பல பதக்கங்களை நாட்டுக்காகப் பெற வாழ்த்துகிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.

ரசிகர்கள் பி.வி.சிந்துவின் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். பி.வி.சிந்து இந்தியாவின் பெருமை எனப் பாராட்டுகின்றனர்.

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

4 நிமிட வாசிப்பு

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

சிவகார்த்திகேயன் எதிர்பார்க்காத டாக்டர் வசூல்!

5 நிமிட வாசிப்பு

சிவகார்த்திகேயன் எதிர்பார்க்காத டாக்டர் வசூல்!

‘எனிமி’க்கு எனிமியான அண்ணாத்த

10 நிமிட வாசிப்பு

‘எனிமி’க்கு எனிமியான அண்ணாத்த

திங்கள் 2 ஆக 2021