மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 2 ஆக 2021

நட்புக்காகத் தரும் வாக்குறுதிக்குள் மறைந்திருக்கும் சிக்கல்!

நட்புக்காகத் தரும் வாக்குறுதிக்குள் மறைந்திருக்கும் சிக்கல்!

ஹீரோவாக மட்டுமே மாஸ் காட்டுவேன் என்றில்லாமல், வில்லன், குணச்சித்திர கதாபாத்திரம், கெஸ்ட் ரோல் என எதற்கும் துணிகிறார் சேதுபதி. அதில், பாராட்டையும் பெற்றுவிடுகிறார்.

சமீபத்தில் விஜய்க்கு வில்லனாக ‘மாஸ்டர்’ படத்தில் பவானி ரோலில் அசத்தியிருந்தார். குறிப்பாக, விஜய்யைவிட விஜய் சேதுபதிக்கு அதிக பாராட்டுகள் குவிந்தன. அடுத்த கட்டமாக, கமல்ஹாசனுக்கு வில்லனாக ‘விக்ரம்’ படத்தில் நடிக்கிறார்.

தமிழில் எக்கச்சக்கப் படங்கள் கைவசம் வைத்திருக்கும் விஜய் சேதுபதி தெலுங்கு, இந்தி சினிமாவிலும் நடித்து வருகிறார். அதோடு, சன் டிவியில் மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்குகிறார். சொல்லப் போனால், தமிழ் நடிகர்களில் அதிக படங்களை கைவசம் வைத்திருக்கும் நடிகரும் இவர்தான்.

விஜய் சேதுபதி நடித்துமுடித்து ரிலீஸுக்குத் தயாராக ‘துக்ளக் தர்பார்’, ‘கடைசி விவசாயி’, ‘லாபம்’, ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’, ‘மாமனிதன்’ ஆகிய படங்கள் உள்ளன. அதோடு, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘காத்துவாக்கு ரெண்டு காதல்’, வெற்றி மாறனின் ‘விடுதலை’ படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இதுதவிர, அனபெல் சுப்பிரமணியம், முகில், இந்தியில் மும்பைகர், காந்தி டாக்ஸ், இடம் பொருள் ஏவல் ஆகிய படங்களும் லைன்அப்பில் இருக்கின்றன. இந்த லிஸ்டில் இன்னும் எந்தெந்தப் படங்கள் இருக்கிறதென்று அவருக்குக்கூட தெரியாது. அவரின் மேனேஜருக்கு மட்டும்தான் தெரியும் என்றே சொல்லலாம்.

பொதுவாக, விஜய் சேதுபதி படம் கமிட்டாவதென்பது இரண்டு விதமாக நடக்கிறது. ஒன்று, இயக்குநர்களிடம் கதைக் கேட்டுப் பிடித்துவிட்டால் நடிக்க சம்மதம் தெரிவிப்பது. மற்றொன்று, நட்புக்காக இயக்குநர்களுக்கு வாக்குக் கொடுப்பது. உதாரணமாக, ‘இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தை இயக்கிய கோகுலுக்கு ‘கொரோனா குமார்’ நடிக்க சம்மதம் தெரிவித்தார். ஆனால், எக்கச்சக்கப் படங்கள் கைவசம் இருப்பதால் அந்தப் படத்தில் நடிக்க வாய்ப்பில்லை என்றே சொல்கிறார்கள். சேதுபதி படம் இயக்கிய அருண் குமாருக்காக ‘சேதுபதி 2’ நடிக்க இருக்கிறார்.

தற்போது, இன்னொரு இயக்குநர் நண்பரின் படத்திலும் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார். விஜய் சேதுபதி நடித்து வெளியான ’புரியாத புதிர்’ படத்தை இயக்கியவர் ரஞ்சித் ஜெயக்கொடி. நீண்ட கால நண்பரான இவருக்காக, மல்டி ஹீரோ கதையில் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார் சேதுபதி. இவருடன், சந்தீப் கிஷன் இன்னொரு ஹீரோவாக நடிக்கிறார். அதோடு, ஆதி முக்கிய ரோலில் நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது. ராணுவப் பின்புலம் கொண்ட படமாக இது உருவாக இருக்கிறதாம். அதோடு, பான் இந்தியா ரிலீஸ் செய்யவும் திட்டமாம்.

பொதுவாக, யார் பட வாய்ப்புக் கேட்டாலும் உடனே ஓகே சொல்லிவிடுகிறார் விஜய் சேதுபதி. ஆனால், அவரின் தேதிகள் கிடைப்பது பெரிய சிக்கலாக இருக்கிறது. அதனால், நீண்ட காலம் இயக்குநர்கள் காத்திருக்க வேண்டியிருக்கிறது. அதில் சோர்ந்துவிடும் இயக்குநர்கள், வேறு நடிகரைத் தேடிச் சென்றுவிடுவதும் நடக்கிறது. அப்படி ஏதும் இல்லாமல், ரஞ்சித் ஜெயக்கொடி படம் முன்னேறுமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.

ஹிட் அடித்த பாலகிருஷ்ணா, தோல்வியில் மோகன்லால்

3 நிமிட வாசிப்பு

ஹிட் அடித்த பாலகிருஷ்ணா, தோல்வியில் மோகன்லால்

ஆன்டி இண்டியன் - விமர்சனம்!

12 நிமிட வாசிப்பு

ஆன்டி இண்டியன் - விமர்சனம்!

மோகன்லால் விரும்பி கேட்ட பிரபு

3 நிமிட வாசிப்பு

மோகன்லால் விரும்பி கேட்ட பிரபு

திங்கள் 2 ஆக 2021