மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 30 ஜூலை 2021

நட்புக்காக விஷால் எடுத்த முடிவு.. விபரீத முயற்சியா?

நட்புக்காக விஷால் எடுத்த முடிவு.. விபரீத முயற்சியா?

நடிகர் விஷாலுக்கு கடைசியாக வெளியான எந்தப் படமுமே பெரிதாகப் போகவில்லை. சண்டைக்கோழி 2 , அயோக்யா, ஆக்‌ஷன் & சக்ரா ஆகிய படங்கள் கமர்ஷியலாக வசூலில் பெரிதான அதிர்வை ஏற்படுத்தவில்லை. இறுதியாக, விஷாலுக்கு இரும்புத்திரை மட்டுமே கைகொடுத்தது.

அடுத்தடுத்து உருவாகும் படங்களில் இரண்டு படங்களின் மீது பெரும் நம்பிக்கை வைத்திருக்கிறார் விஷால். ஒன்று, ஆர்யாவுடன் நடித்திருக்கும் ஆனந்த் ஷங்கர் இயக்கும் ‘எனிமி’ மற்றொன்று, தொ.ப.சரவணன் இயக்கத்தில் விஷால் நடித்துவரும் படம்.

எனிமி படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்துவிட்டது. படத்துக்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கூட சமீபத்தில் வெளியாகி வைரலானது. விரைவிலேயே எனிமியைத் திரையில் காணலாம். தற்பொழுது, தொ.ப.சரவணன் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்துவருகிறது. இப்படத்தில் கவனம் செலுத்திவருகிறார் விஷால்.

நடிகர் மட்டுமின்றி தயாரிப்பு நிறுவனம் மூலமாக படங்களையும் தயாரித்துவருகிறர் விஷால். இவரின் தயாரிப்பு நிறுவனத்தின் முக்கிய முடிவுகளை எடுக்கும் பொறுப்புகளை நெருங்கிய நண்பர்களான நந்தா & ரமணா மேற்கொள்கிறார்கள்.

நடிகர்களான நந்தா மற்றும் ரமணாவுக்கு திரையுலகில் பெரிதாக பட வாய்ப்புகள் இல்லை. நண்பர்களை மீண்டும் திரைத்துறையில் நடிகர்களாக பிஸியாக்கிவிட விரும்புகிறாராம் விஷால்.

நட்புக்காக ரமணா மற்றும் நந்தாவுடன் இணைந்து படமொன்றில் நடிக்க இருக்கிறார் விஷால். இந்தப் படத்தில் விஷால் லீட் ரோலில் நடிப்பார் என்றும், மற்ற இருவரும் முக்கிய ரோல்களில் வருவார்கள் என்றும் சொல்லப்படுகிறது.

புதுமுக இயக்குநர் வினோத் குமார் என்பவர் இந்தப் படத்தை இயக்க இருக்கிறார். நந்தா & ரமணாவுடன் ஒரு படம் பண்ண வேண்டுமெனும் ஐடியா நீண்ட நாளாகவே விஷாலுக்கு இருந்திருக்கிறது. அதே ஐடியாவுடன் ஒரு இயக்குநர் அணுகியதால் விஷாலின் விருப்பம் சாத்தியமாக இருக்கிறது.

தொ.ப.சரவணன் இயக்கும் படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு அடுத்த வாரம் சென்னை திரும்புகிறார் விஷால். எப்படியும், ஆகஸ்ட்டில் இந்தப் படம் துவங்கும் என்று சொல்லப்படுகிறது.

இந்தப் படத்தை முடித்துவிட்ட பின்னரே, துப்பறிவாளன் 2 படத்தை கையில் எடுப்பார் என்றே தெரிகிறது. மிஷ்கின் இயக்கத்தில் பெரிய ஹிட்டானது துப்பறிவாளன். அதன் தொடர்ச்சியாக, இரண்டாம் பாகம் லண்டனில் துவங்கியது. ஆனால், மிஷ்கினுக்கும் விஷாலுக்கும் ஏற்பட்ட கருத்து மோதலால் படத்திலிருந்து வெளியேறினார் மிஷ்கின். அதனால், துப்பறிவாளன் 2 படத்தினை இயக்கும் பொறுப்பினை கையில் எடுத்திருக்கிறார் விஷால். படத்தின் கதையில் கொஞ்சம் பணியாற்ற இருப்பதால், கால தாமதமானாலும் பொறுமையாக படத்தை உருவாக்கிக் கொள்ளலாம் எனும் திட்டத்தில் இருக்கிறாராம் இயக்குநர் விஷால். அதுவரை நடிகர் விஷால் அடுத்தடுத்துப் படங்களில் நடித்துக் கொண்டிருப்பார்.

சொல்லப் போனால், துப்பறிவாளன் 2 சிக்கல் வந்ததற்கு ரமணா & நந்தா இருவருமே காரணம் என்று சொல்லப்பட்டது. அதோடு, விஷால் தயாரிக்கும் படங்களில் அவ்வப்போது ஏற்படும் சிக்கலுக்கும் விஷாலின் நண்பர்கள் யாரோ ஒருவர் காரணமாக இருப்பார்கள். நட்புக்காக விஷால் நடிக்கும் படம் தலையீடுகளின்றி விபரீத முயற்சியாகாமல் இருந்தால் சரிதான்.

- ஆதினி

என்னை கைது செய்ய வந்தால்...: கங்கனா

2 நிமிட வாசிப்பு

என்னை கைது செய்ய வந்தால்...: கங்கனா

ஐந்து உணர்வுகள்: ஞான ராஜசேகரன் ஆதங்கம்!

2 நிமிட வாசிப்பு

ஐந்து உணர்வுகள்: ஞான ராஜசேகரன் ஆதங்கம்!

மாநாடு ரிலீஸ் ஆனது எப்படி?

10 நிமிட வாசிப்பு

மாநாடு ரிலீஸ் ஆனது எப்படி?

வெள்ளி 30 ஜூலை 2021