மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 25 ஜூலை 2021

மகேந்திரன் என்கிற படைப்பாளியும் தமிழ் சினிமாவும்!

மகேந்திரன் என்கிற படைப்பாளியும் தமிழ் சினிமாவும்!

மனித வாழ்வில் மறைந்தவர்கள் தங்கள் அடையாளமாக ஏதோ ஒன்றை விட்டு செல்வார்கள் அது நல்லதாகவும் இருக்கும் கெட்டதாகவும் இருக்கும் அது மனித சமூகத்திற்கு பாடமே.

தமிழ் சினிமாவில் ஆயிரக்கணக்கான திரைப்பட இயக்குநர்கள் படங்களை இயக்கி சென்று இருக்கிறார்கள். சினிமா மொழியில் சொல்வது என்றால் புரட்சி நடிகர், நடிகர்திலகம், சூப்பர்ஸ்டார், உலகநாயகன், இளையதளபதி, அல்டிமேட் ஸ்டார், இவர்களை வைத்து கோடிகளை கொட்டி கதாநாயக பிம்பத்தில் கரை ஏறியவர்களும், மூழ்கி போனவர்களும் நிறைய உண்டு.

இவர்களில் காலம் கடந்து தமிழ் சினிமாவில் கலங்கரைவிளக்காக இருப்பவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். இன்றுவரை கதை, திரைக்கதை, வசனம், நடிகர்கள் தேர்வு, காட்சிப்படுத்தல் என எல்லாவற்றுக்கும் கலங்கரை விளக்கமாக, பெஞ்ச்மார்க்காக இருப்பது மறைந்த இயக்குநர் மகேந்திரன் இயக்கிய படங்கள். 1978ல்

'முள்ளும் மலரும்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான மகேந்திரன் 2006 வரை இயக்கிய மொத்த படங்கள் 12 மட்டுமே. அவரது பிறந்தநாள் இன்று (ஜூலை 25).

அவரது திரையுலக பயணம் பற்றிய தகவல்கள் அடங்கிய தொகுப்பு மின்னம்பலம் வாசகர்களுக்காக

சினிமா என்பது காட்சி மொழி, என்பதை உணரவே நமக்கு வெகுகாலம் தேவைப்பட்டிருக்கிறது. ஆரம்ப காலத்தில் மேடை நாடகங்களின் திரை வடிவமாக மட்டுமே பல சினிமாக்கள் உருவாக்கப்பட்டது. அப்படியொரு நிலையில் சினிமாவின் முழு பலத்தை அதன் எல்லையற்ற சாத்தியங்களை உணர்ந்து காட்சி மொழியில் கதை சொன்னவர் மகேந்திரன். இவர் இயக்குநராக அறிமுகமான படம் 'முள்ளும் மலரும்' தமிழ் சினிமாவில் அதுவரை இருந்த நாடகத்தனம், கதாநாயக பிம்பம் உடைத்து நொறுக்கப்பட்டு தமிழ் சினிமாவை யதார்த்தம் நோக்கி பயணிக்க வைத்த சமரசமில்லா படைப்பாளி மகேந்திரன்.

நாம் மூவர், சபாஷ் தம்பி, நிறைகுடம், கங்கா, திருடி தங்கப்பதக்கம் உள்ளிட்ட பல படங்களுக்கு கதை, வசனமும் எழுதியுள்ளார். முள்ளும் மலரும் படத்தை தொடர்ந்து உதிரிப்பூக்கள், ஜானி, நெஞ்சத்தைக் கிள்ளாதே, கை கொடுக்கும் கை என பல வெற்றிப் படங்களைக் கொடுத்துள்ளார். 2006-ல் வெளியான ‘சாசனம்’ அவர் இயக்கிய கடைசிப் படம். தெறி, நிமிர், மிஸ்டர் சந்திரமௌலி, சீதக்காதி போன்ற படங்களில் நடித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் இளையான்குடியைச் சேர்ந்த மகேந்திரன் பெயர் அலெக்ஸாண்டர். கல்லூரியில் படித்தபோது விளையாட்டில் திறமையாக இருந்த தனது சீனியர் மீதான அன்பினால் தனது பெயரை மகேந்திரன் என்று மாற்றிக்கொண்டார். இளையான்குடியில் பள்ளிக் கல்வியையும் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் 'இண்டர்மீடியட்' கல்வியையும் காரைக்குடி அழகப்பா கல்லூரியில் பி.ஏ பொருளாதாரமும் படித்தார்.குறை மாதத்தில் பிறந்ததால் பலரும் மகேந்திரனின் தாயிடம், மற்ற பிள்ளைகள் போல இவனால் ஓடியாட முடியாது என்று ஆறுதல் சொல்லியிருக்கிறார்கள். இதனால் ஓய்வு நேரங்கள் அனைத்தையும் நூலகங்களில் புத்தகங்களை படிப்பதில் செலவிட்டுள்ளார்.

மறைந்த தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். நடித்த நாடோடி மன்னன் படத்தின் 100-வது நாள் விழா, காரைக்குடி அழகப்பா கல்லூரியில் நடைபெற்றது. இந்த விழாவில் பேசும் வாய்ப்பை பெற்ற அந்தக் கல்லூரி மாணவரான மகேந்திரன், எம்.ஜி.ஆர். முன்னிலையிலேயே தமிழ் சினிமாவை விமர்சித்துப் பேசினார். முக்கியமாக தமிழ் சினிமாவில் இடம்பெறும் பாடல்கள் குறித்த தனது விமர்சனத்தைத் தைரியமாகக் கூறினார். இந்தப் பேச்சு எம்.ஜி.ஆர் அவர்களை மிகவும் கவர்ந்தது. இந்த நிகழ்வே மகேந்திரன் திரைத்துறைக்கு செல்ல காரணமாக அமைந்தது எனலாம்.

பிறகு சென்னையில் துக்ளக்பத்திரிகையில் பணியாற்றியபோது எம்.ஜி.ஆரை மீண்டும் சந்தித்தார் மகேந்திரன். சினிமாவை விமர்சனம் செய்த மகேந்திரனை சினிமாவிலேயே பணியாற்ற வைத்தார் எம்.ஜி.ஆர். கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலுக்கு திரைக்கதை எழுதும் பணியை மகேந்திரனிடம் வழங்கினார். அதுதான் திரைக்கதையாசிரியராக அவரது முதல் பணியாக அமைந்தது, எம்.ஜி.ஆர். சொல்லி பலர் பொன்னியின் செல்வன் நாவலுக்குத் திரைக்கதை எழுதி கொடுத்தார்கள். ஆனால் எம்.ஜி.ஆர்க்கு பிடித்தது மகேந்திரனின் பொன்னியின் செல்வன் திரைக்கதைதான்.

மகேந்திரன் எழுதிய திரைக்கதையைப் படமாக்கவும் முடிவு செய்தார். ஆனால், கடைசிவரை எம்.ஜி.ஆரால் தன்னுடைய கனவுப் படமான பொன்னியின் செல்வனை நடித்து தயாரிக்க முடியாமல் போனது. .

எம்.ஜி.ஆர். நடித்த காஞ்சித் தலைவன் படத்தில் அசோசியேட் இயக்குநராகப் பணியாற்றியுள்ளார் மகேந்திரன். 1960களில் நாடகங்களுக்கு வசனம் எழுதிய மகேந்திரன், 1966-ல் ஜெய்சங்கர் நடித்த நாம் மூவர் படத்துக்கு வசனம் எழுதியதன் மூலமாகத் தமிழ்த் திரையுலகில் காலடி எடுத்துவைத்தார். தங்கப்பதக்கம் படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதினார் மகேந்திரன். அந்தப் படத்தில் மனைவி இறந்தபிறகு சிவாஜிக்கு வசனம் இருக்காது. இது, தமிழ்த் திரையுலகில் புதிய உத்தியாகப் பாராட்டப்பட்டது. குறைவான வசனங்களில் நடிப்பது புதிதாக இருக்கிறது என சிவாஜி, மகேந்திரனைப் பாராட்டியுள்ளார். சினிமா எனக்குக் கட்டாயக் கல்யாணம் போல. ’கட்றா தாலியை’ என்றார் எம்.ஜி.ஆர். கட்டிவிட்டேன் எனப் பேட்டியளித்தார் மகேந்திரன்.

கதை, வசனம் எழுத ஆரம்பித்து 12 வருடங்கள் கழித்து தான் மகேந்திரனால் இயக்குநர் ஆக முடிந்தது. அப்போது பாரதிராஜா, கே. பாலசந்தர், பாலு மகேந்திரா போன்றோர் பிரபல இயக்குநர்களாக இருந்தார்கள். எனினும் 1978-ல் வெளியான முள்ளும் மலரும் மகேந்திரனுக்குத் தனி அடையாளத்தை அளித்தது. உமா சந்திரன் எழுதிய நாவலைக் கொண்டு கதை அமைத்தார். உன்னை சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியதற்கு மகிழ்கிறேன் என முள்ளும் மலரும் பார்த்துவிட்டு ரஜினியைப் பாராட்டினார் கே.பாலசந்தர். எனக்கே இன்னொரு ரஜினியைக் காண்பித்தார் மகேந்திரன் என அப்படத்தைப் பற்றி எப்போது பேசினாலும் வியந்து பாராட்டுவார் ரஜினி.

முள்ளும் மலரும் படத்துக்கு கமல் ஹாசன் உதவியது குறித்து ஒரு விழாவில் இயக்குநர் மகேந்திரன், “முள்ளும் மலரும் படத்துக்கு முன்னாடியே வசனகர்த்தாவா தமிழ் சினிமால அறிமுகமானேன். நிறைய படங்கள் பண்ணினேன். ஒருகட்டத்துல சில காரணங்களினாலே சினிமாவே வேண்டாம்னு முடிவுபண்ணினேன். அப்போதெல்லாம் ஆழ்வார்பேட்டையில இருக்கிற கமல் வீட்டுக்கு அடிக்கடி போய் சினிமா பத்தி நிறைய பேசிட்டிருப்போம். அந்த மாதிரி ஒரு சமயத்துல அவர் நடிச்ச மலையாளப் படத்தோட தமிழ் டப்பிங்குக்கு வசனம் எழுதச் சொன்னார். அப்புறம் அவரே தயாரிப்பாளர் ஆனந்தி பிலிம்ஸ் வேணு செட்டியார்கிட்ட என்னை அனுப்பினார். அவர் தயாரிக்க நான் என்னோட முதல் படத்தை இயக்குவதா முடிவாச்சு. அதுதான் முள்ளும் மலரும். கமல் அதுல நடிக்கிறதா பிளான் பண்ணினோம். ஆனா அது நடக்கல.படத்தில் எனது ரசனைக்கேற்றவாறு ஒளிப்பதிவாளர் இல்லையே என்று கமலிடம் புலம்பினேன். அடுத்தநாளே அவர் எனக்கு பாலு மகேந்திராவை அறிமுகப்படுத்தி வைத்தார். ஒரு வழியாகப் படப்பிடிப்பு முடிந்தது. படத்துல ஒரு முக்கியமான காட்சியை எடுக்காம இருந்தோம்.

கடைசியா பேட்ச் அப் ஒர்க் பண்ணனும் என நினைத்திருந்தேன். அதுதான் செந்தாழம்பூவே பாட்டோட லீட் சீன். ஆனா தயாரிப்பாளர் வேணு செட்டியார் இதுக்கு மேல செலவு பண்ணமாட்டேன் எனக் கண்டிப்பா சொல்லிட்டார். அதை எடுக்காம இருந்தா பாட்டைப் படத்துல பயன்படுத்த முடியாது. ஆனா அந்தப் பாட்டைப் பத்தி எனக்குக் கவலை கிடையாது என வேணு செட்டியார் உறுதியா மறுத்துட்டார். இந்த விஷயங்களை எல்லாம் கமலிடம் சொன்னேன். உடனே அவர் வேணு செட்டியாரிடம் பேசினார். ஆனால் அவர் எவ்வளவு சொல்லியும் வேணு செட்டியார் கேட்கவில்லை. உடனே கமல், ‘பரவாயில்லை செட்டியார், அந்த ஒரு சீனுக்கு என்ன செலவாகுமோ அதை நான் ஏத்துக்கறேன்னு உடனே சொல்லிட்டார்.

மறுநாளே சத்யா ஸ்டுடீயோவில் அந்தக் காட்சி படமாக்கப்பட்டது. நான் விரும்பிய விதத்தில் படம் வந்தது. என்னைப் பொறுத்தவரை கமல் ஒரு மகா கலைஞன், மகா மனிதன் என்றார். எனினும் மகேந்திரன் இயக்கத்தில் கமலின் நடிப்பைக் காணும் வாய்ப்பு கடைசிவரை ரசிகர்களுக்குக் கிடைக்கவில்லை. மகேந்திரனின் உதிரிப்பூக்கள் படத்தின் தரத்துக்கு அருகில் செல்லக்கூடிய ஒரு படத்தை நான் இயக்கிவிட்டால் மகிழ்ச்சியடைவேன் என்று இயக்குநர் மணி ரத்னம் ஒருமுறை பேட்டியளித்தார்.

அந்தளவுக்கு எல்லாத் தமிழ் இயக்குநர்களின் பெஞ்ச்மார்க் - உதிரிப்பூக்கள் தான்.ரஜினியை வைத்து வெற்றிப் படம் கொடுத்தாலும் கமல் நெருங்கிய நண்பராக இருந்தாலும் அதைப் பயன்படுத்தி அடுத்தப் படங்களை அவர் எடுக்கவில்லை. புதுமுகங்களை வைத்து உதிரிப்பூக்கள் போன்ற ஒரு படத்தை எடுத்து உலகத்துக்குத் தன் திறமையை மீண்டும் நிரூபித்துக் காண்பித்தார். கன்னட நடிகை அஸ்வினியைத் தமிழுக்கு அறிமுகம் செய்தார். புதுமைப்பித்தனின் சிற்றன்னை என்ற நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட படம் உதிரிப்பூக்கள். புதியவர்களை வைத்து எடுக்கும் படத்தை மக்கள் ஏற்றுக்கொள்வார்களா என நான் நினைக்கவில்லை. பட தயாரிப்பாளர்களை நிராகரித்தேன். என்னிடம் உதவி கேட்டு வந்த தயாரிப்பாளரை, உதிரிப்பூக்கள் படத்தின் தயாரிப்பாளர் ஆக்கினேன் என்றார்.

மகேந்திரன் இப்படத்தில் வித்தியாசமான வில்லனாக நடித்த விஜயன் கதாபாத்திரத்தை சிலாகித்து பேசாத திரைப்பட இயக்குநர்களே இருக்கமுடியாது. தமிழ் சினிமா வில்லன்களை உதிரிப்பூக்களுக்கு முன்பு, உதிரிப்பூக்களுக்குப் பின்பு எனப் பிரிக்கலாம். உதிரிப்பூக்கள் வெளியான பிறகு டெல்லிக்குச் சென்றிருந்த எம்.ஜி.ஆர்., மகேந்திரனும் டெல்லியில் இருப்பதை அறிந்து, நேரில் சென்று பட்டு சால்வை போர்த்தி, உன் திறமையை 1958-லேயே எனக்குத் தெரியும் என்று பாராட்டியுள்ளார். சுஹாசினி, சரத்பாபு, மோகன், பிரதாப் போத்தன் நடித்த நெஞ்சத்தைக் கிள்ளாதே படம் 1981-ல் சிறந்த தமிழ்ப் படத்துக்கான தேசிய விருது பெற்றது.

ஒரு பெண் ஜாகிங் செய்வதை ஹோட்டல் ஜன்னலில் இருந்து பார்த்துள்ளார் மகேந்திரன். அந்தப் பெண்ணின் கவனம் எல்லாம் உடற்பயிற்சியில் தான் இருந்திருக்கிறது. இதே கவனம் திருமணத்துக்குப் பிறகும் இருக்குமா என்கிற கேள்வியில் பிறந்த படம் தான் அது. நெஞ்சத்தைக் கிள்ளாதே படத்தில் கதாநாயகியாக நடிக்க மகேந்திரன் முதலில் தேர்வு செய்தது, ஓவியர் ஜெயராஜின் மகள் ஹில்டா. ஆனால் அவர் நடிக்க விருப்பமில்லை என்று கூறிவிட்டார். பிறகு படப்பிடிப்புக்கு வந்த ஜெயராஜ், அசோக்குமாரிடம் உதவி ஒளிப்பதிவாளராகப் பணியாற்றி வந்த சுஹாசினியைப் பார்த்து, இவரையே கதாநாயகியாக நடிக்க வைக்கலாமே என்று யோசனை சொல்ல, அதை ஏற்றுக்கொண்டார்

மகேந்திரன்.விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் அழைப்பை ஏற்று, 2006-ல் கிளிநொச்சியில் தமிழ் இளைஞர்களுக்கு மூன்று மாதங்கள் திரைப்படப் பயிற்சி அளித்தார். பிறகு பிரபாகரனை நேரில் சந்தித்துள்ளார். அப்போது, முள்ளும் மலரும் இறுதிக்காட்சி தன்னைப் பாதித்ததாக மகேந்திரனிடம் கூறியுள்ளார் பிரபாகரன். அதனை 'சில்லிடும் நேரம்' என சிலாகித்து கூறியுள்ள மகேந்திரன், பிரபாகரன் நினைவுப்பரிசாக சிறிய தங்கப்பதக்கம் ஒன்றை தனக்கு வழங்கியதை தன் வாழ்வில் சிறந்த தருணம் என பத்திரிகையாளர்களிடம் பேசுகிறபோது தவறாமல் குறிப்பிடுவதை தன் இறுதிக்காலம் வரை செய்துவந்தார்.

இயக்குநர் மகேந்திரன் நடிகராக அறிமுகமான படம் கலைப்புலிதாணு தயாரிப்பில்அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த தெறி. இந்தப் படத்தில் நடிப்புக்காகப் பாராட்டுகளைப் பெற்ற மகேந்திரன், படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பேசியதாவது,

தாணு சார் அலுவலகத்துல இருந்து அழைத்திருந்தார்கள். சார், ஒரு ஆப்ளிகேஷன். வீட்டுக்கு வரலாமா என்றார் தாணு. அவரிடம்தான் மற்றவர்கள் ஏதாவது கேட்டுப் போவார்கள். அதனால் திகைத்துப் போய்விட்டேன். அதனால் அவர் எதைக் கேட்டாலும் செய்யவேண்டும் என எண்ணியிருந்தேன். என்னைச் சந்தித்து, இந்தப் படத்துல நீங்கள் நடிக்கணும்னு சொல்லி அதற்கு ஒரு கவித்துவமான காரணத்தைச் சொன்னார். இதைச் சொல்ல எனக்குக் கூச்சமாக உள்ளது.

அவர் என்ன சொன்னார் என்றால், உங்கள் படங்களில் உலகத்தைக் காட்டினீர்கள். நாங்கள், உலகத்துக்கு உங்களைக் காண்பிக்க ஆசைப்படுகிறோம் என்றார். நான் கேட்டேன், இது மிஸ்டர் விஜய்க்குத் தெரியுமா என்று. அவர் சம்மதித்துதான் உங்களைத் தொடர்பு கொள்கிறோம் என்றார். நான் மிகமிக மதிக்கும் கலைஞன், விஜய். அவருடைய பண்பு, அவர் பழகும் விதம் கேள்விப்பட்டு அவர் மீது எனக்கு அன்பு உண்டு. பிறகு என்னால் மறுக்க முடியவில்லை.எனக்கு நடிக்கக்கூடிய சக்தி உள்ளதா, திறமை உள்ளதா எனத் தெரியவில்லை. ஒப்புக்கொண்டேன். விஜய் தன்னிடமுள்ள உயரத்தை செட்டில் காண்பித்துக்கொள்ள மாட்டார். அற்புதமான மனிதர். நல்ல மனிதாக இருந்தால் மட்டுமே இந்த உயரத்தை அடைய முடியும்” என்று பேசினார்.

இவரது படைப்புகள் எல்லாம் அன்பையும், மனித வாழ்வியலின் நுட்பமான உணர்வுகளையும் முன்னிலைப்படுத்தி இருக்கும். முள்ளும் மலரும் திரைப்படத்திற்கு பிறகு ரஜினி காந்தின் உடல் மொழியே மாறிப் போனது என்று அந்தப்படம் வெளியான பின்பு கூறப்பட்டது.

உதிரிப்பூக்கள் திரைப்படம் புதுமைப்பித்தன் எழுதிய சிற்றன்னை என்ற கதையை தழுவி எடுக்கப்பட்டது. இந்த படத்தின் வசனத்தை மொத்தமாக நான்கு பக்க காதிதத்தில் எழுதி விடலாம். ஆனால் அந்த படம் பார்க்கும் அனைவரது மனதிலும் சுமக்க முடியாத ஏதோ ஒன்றை சுமத்தி இருந்தார் மகேந்திரன்.

ஜானி திரைப்படத்தில் ஸ்ரீதேவிக்கும் ரஜினிக்கும் இடையில் இருக்கும் காதல் அத்தனை அழகாக இருக்கும்., ஸ்ரீதேவியும் ரஜினியும் இணைந்து எத்தனையோ படங்கள் நடித்திருந்தாலும் ஜானி நிகழ்த்திய மாயம் என்பது வேறு தான். நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் ரஜினிகாந்தை, இயக்குநர் பாலசந்தர் கேள்விகள் கேட்டு பேட்டி எடுத்துக் கொண்டிருந்தார். அப்பொழுது உங்களுக்கு பிடித்த இயக்குநர் யார் என்ற கேள்வியை அவர் எழுப்பினார். பலரும் நினைத்தது தன் குருநாதர் ‘பாலச்சந்தர்’ பெயரைத்தான் ரஜினி சொல்லப் போகிறார் என்று ஆனால், அன்று ரஜினி சொன்ன பெயர் ’மகேந்திரன்’. மகேந்திரன் இயக்கிய எல்லாப் படங்களுமே அதிக பட்சம் 40 நாட்களில் எடுக்கப்பட்டவைதான். 'உதிரிப்பூக்கள்’ 35MM படச்சுருளில், 30 நாட்களில் படமாக்கப்பட்டது!.நெஞ்சத்தைக் கிள்ளாதே’ படம் மூன்று தேசிய விருதுகளை வென்றது. விருது வாங்கப் போன மகேந்திரன், அங்கே வந்திருந்த எம்.ஜி.ஆரிடம் விருதுகளைச் சமர்ப்பித்து, 'எல்லாம் உங்களால் வந்தது’ என்றார்.

-இராமானுஜம்

ஆன்டி இண்டியன் - விமர்சனம்!

12 நிமிட வாசிப்பு

ஆன்டி இண்டியன் - விமர்சனம்!

மாறனின் படத்தைப் புகழ்ந்து தள்ளிய இயக்குநர்கள்!

4 நிமிட வாசிப்பு

மாறனின் படத்தைப் புகழ்ந்து தள்ளிய இயக்குநர்கள்!

சொந்தப்பட புரொமோஷனுக்கு மட்டும் போலாமா?: கே.ராஜன்

13 நிமிட வாசிப்பு

சொந்தப்பட  புரொமோஷனுக்கு மட்டும் போலாமா?: கே.ராஜன்

ஞாயிறு 25 ஜூலை 2021