மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 25 ஜூலை 2021

பயங்கர கார் விபத்து : யாஷிகா படுகாயம், தோழி மரணம்!

பயங்கர கார் விபத்து : யாஷிகா படுகாயம், தோழி மரணம்!

மாமல்லபுரம் அருகே நடிகை யாஷிகா ஆனந்த்தின் கார் சாலை தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில் அவர் படுகாயமடைந்தார். அவரது தோழி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தமிழ் திரையுலகில் பிரபலமான இளம் நடிகைகளுள் ஒருவராகத் திகழ்பவர் நடிகை யாஷிகா ஆனந்த். விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான தெலுங்கு படமான நோட்டா மூலம் சினிமாவில் அறிமுகமானார். தமிழில் ‘கவலை வேண்டாம்’, ’துருவங்கள் பதினாறு’, ’இருட்டு அறையில் முரட்டு குத்து’ ஆகிய படங்கள் மூலம் பிரபலமான யாஷிகா ஆனந்த் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

இந்நிகழ்ச்சி அவரை பட்டி தொட்டி எங்கும் கொண்டு சேர்த்தது. இதைத்தொடர்ந்து பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சியில் ஜட்ஜாக இருந்தார். சோஷியல் மீடியாவில் படுபிஸியாக இருக்கும் யாஷிகா ஆனந்த் மாடலிங் துறையிலும் வலம் வந்தார்.

இந்நிலையில் யாஷிகா ஆனந்த் மாமல்லபுரத்தில் உள்ள ஜிஆர்டி ஹோட்டலில் தங்கிவிட்டு தோழிகளுடன் நேற்று இரவு (ஜூலை 24) சென்னை திரும்பினார்.

மாமல்லபுரம் அருகே சூளகிரிகாடு பகுதியில் இரவு 11.45 மணி அளவில் சென்று கொண்டிருந்த யாஷிகா ஆனந்தின் கார் நிலை தடுமாறி சென்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளானது.

இவ்விபத்தில் கார் சுக்குநூறாக நொறுங்கியதில் யாஷிகா ஆனந்த் படுகாயமடைந்தார். அவருடன் சென்ற யாஷிகாவின் தோழி வள்ளிசெட்டி பவானி படுகாயங்களுடன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

விபத்தைக் கண்ட அப்பகுதியிலிருந்தவர்கள் இருவரையும் மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில் யாஷிகாவின் தோழி உயிரிழந்தது தெரியவந்ததை அடுத்து அவரது உடல் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது.

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் யாஷிகா ஆனந்த் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை கிரிட்டிக்கலாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மகளின் விபத்து குறித்து தகவல் அறிந்து டெல்லியிலிருந்து யாஷிகாவின் தந்தை இன்று காலை மருத்துவமனைக்கு வந்தார்.

இந்நிலையில், அதிவேகமாகக் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதாக யாஷிகா ஆனந்த் மீது மாமல்லபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சட்டப்பிரிவு 279, 337, 304 ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

விபத்தில் உயிரிழந்த யாஷிகாவின் தோழி வள்ளிசெட்டி பவானி ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் என்றும் அமெரிக்காவில் உள்ள மென்பொருள் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மதுபோதையில் காரை ஓட்டியிருக்கலாம் என கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்த உறுதியான தகவல் வெளியாகவில்லை.

-பிரியா

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

3 நிமிட வாசிப்பு

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

பிக்பாஸ் அக்‌ஷரா ரெட்டியின் மறுமுகம்!

6 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் அக்‌ஷரா ரெட்டியின் மறுமுகம்!

முதல்வர் வீட்டின் முன் உண்ணாவிரதம் இருப்பேன்: டி.ராஜேந்தர்

8 நிமிட வாசிப்பு

முதல்வர் வீட்டின் முன் உண்ணாவிரதம் இருப்பேன்: டி.ராஜேந்தர்

ஞாயிறு 25 ஜூலை 2021