மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 22 ஜூலை 2021

ரோசமான ‘சார்பட்டா பரம்பரை’ ஜெயித்ததா?: பட விமர்சனம்!

ரோசமான ‘சார்பட்டா பரம்பரை’ ஜெயித்ததா?: பட விமர்சனம்!

புகழின் உச்சியில் கொடிகட்டிப் பறந்த இரண்டு குத்துச்சண்டைக் குழுக்களான சார்பட்டா பரம்பரை மற்றும் இடியாப்ப பரம்பரை இடையேயான ரிங்கின் உள் நடக்கும் ரோசமான குத்துச்சண்டையும், வெளியே நடக்கும் சாதிய அரசியலையும் பேசியிருக்கும் படம் ‘சார்பட்டா பரம்பரை’. அட்டக்கத்தி, மெட்ராஸ், காலா மற்றும் கபாலி என தொடர்ச்சியாக அரசியல் சார்ந்தப் படங்களைக் கொடுத்த இயக்குநர் பா.ரஞ்சித்தின் ஐந்தாவது படைப்பு ‘சார்பட்டா பரம்பரை’. திரையரங்கிற்காகத் திட்டமிட்டு, நேரடியாக அமேசான் பிரைம் ஓடிடியில் தற்பொழுது வெளியாகியிருக்கிறது.

இந்தியாவில் எமர்ஜென்ஸி காலக்கட்டத்தில் நடக்கும் கதைக்களம். சென்னையில் குத்துச்சண்டைப் போட்டியானது புகழின் உச்சியில் இருந்த நேரமது. பரம்பரை பரம்பரையாக மோதிக்கொள்ளும் சார்பட்டா பரம்பரைக்கும் இடியாப்ப பரம்பரைக்கும் இடையிலான மோதலே கதைக்கரு. தொடர்ச்சியாக கை ஓங்கியிருக்கும் இடியாப்பப் பரம்பரையை வீழ்த்த இறுதி வாய்ப்பில் நிற்கும் சார்பட்டா பரம்பரை ஜெயித்ததா, பாக்ஸிங் தெரியாத கபிலன் எப்படி ரிங்கிற்குள் வந்தார், அதற்குள் நிகழும் தலித் அரசியல் என படத்தின் திரைக்கதை நீள்கிறது.

மிகப்பெரிய பாக்ஸரான கபிலனின் தந்தை க்ளவுஸை, விட்டுவிட்டு கத்தியை எடுத்ததால் இறந்துபோக, ஆர்யாவை பாக்ஸிங் பக்கமே போகவிடாமல் தடுத்துக் கொண்டிருப்பார் கபிலனின் தாய். ஆனால், ரங்கன் வாத்தியாரின் (பசுபதி) சண்டைகளைப் பார்த்து வளர்வதால் கபிலனுக்கு (ஆர்யா) உள்ளுக்குள் பாக்ஸிங் வெறி ஓடிக்கொண்டே இருக்கும். தொடர்ச்சியாக இடியாப்பப் பரம்பரை வேம்புலியிடம் (ஜான் கொக்கன்) அடிவாங்கி நாக் அவுட் ஆகிக் கொண்டிருக்கும் சார்பட்டா பரம்பரை. கடைசியாக ஒரு போட்டி, ஜெயிக்காவிட்டால் பாக்ஸிங்கை விட்டுவிடுவதாக சவால் விடுகிறார் சார்பட்டா பரம்பரை வாத்தியார் ரங்கன். வாத்தியாரின் வாக்குறுதியைக் காப்பாற்ற, பரம்பரையின் கெளரவத்தைக் காப்பாற்ற முன்பின் பாக்ஸிங் விளையாடாத கபிலன் ரிங்கிற்குள் வருகிறார். சார்பட்டா பரம்பரைக்குள்ளேயே கபிலனுக்கு எதிராக சாதியால் சதி வேலைகள் நடக்கிறது. அவற்றையெல்லாம் முறியடித்து இடியாப்ப பரம்பரையை தோற்கடிக்க கபிலன் எடுக்கும் முயற்சிகளே படம்.

படம் முழுக்க பாக்ஸிங் நிறைந்திருக்கிறது. 70-80களில் நடந்த அரசியல் சூழலுக்கு நடுவே நடந்த பாக்ஸிங் போட்டிகளானது பாக்ஸர்களின் வாழ்க்கையை எப்படியெல்லாம் மாற்றியது என்பதை தெளிவாக படம் பேசுகிறது. முதல் பாதியில் இரண்டு பரம்பரைகளுக்கு நடுவிலான பாக்ஸிங் போட்டிகளே நிறைந்திருக்கிறது. படத்தின் ஒவ்வொரு காட்சியும் படுவேகமாக சீறிப் பாய்கிறது. அப்படியே, இரண்டாம் பாகம் கொஞ்சம் படத்தின் கதையிலிருந்து விலகிச்சென்று க்ளைமேக்ஸில் மட்டும் கதைக்குள் வந்து சேர்கிறது.

கபிலனாக ஆர்யா உடல் மொழிக்கென நிறையவே உழைத்திருக்கிறார். பாக்ஸிங்கிற்கு முன்பாக ஹார்பரில் வேலைக்குச் செல்லும் சாதாரண கபிலன், குடிக்கு அடிமையாகி உடல் பருத்த கபிலன், மீண்டும் உடற்கட்டுடன் ஃபிட் கபிலன் என மூன்று வித உடலமைப்புடன் படத்தில் வருகிறார். அதற்கான வித்தியாசங்களும், அதன்பின்னான உழைப்பும் படத்தில் தெரிகிறது. கூடவே, பாக்ஸிங் விளையாட்டின் போதும், நடிப்பிலும் அசத்துகிறார் ஆர்யா.

ரங்கன் வாத்தியாரான பசுபதியின் கதாபாத்திரம் நேர்த்தியான ரோல். நேர்மையுடன் கோவப்படுவது, எதற்கும் அஞ்சாமல் பேசுவது பேசுவதென தனித்துத் தெரிகிறார். டேடி ரோலில் பட்லர் இங்கிலீஷ் பேசும் ஜான்விஜய், நடனமாடிக்கொண்டே சண்டைப்போடும் டான்சிங் ரோஸ் என ஒவ்வொரு கதாபாத்திரமும் தனித்துவமாக மனதில் பதிகிறது.

கபிலனின் மனைவியாக மாரியம்மா (துஷாரா) துணிச்சலான பெண். காலம்காலமாக பெண்களுக்கென இருக்கும் சில கட்டுப்பாடுகளுக்கு வெளியே இருக்கிறார். ‘ நீ போ, ஜெயிச்சிட்டுவா’ எனும் வழக்கமான ஹீரோயினாக இல்லாமல் ஆர்யாவுடன் சண்டைப்போடுவது, கைகொடுப்பதென எதார்த்தமான பெண்ணாக மனதில் பதிகிறார்.

குத்துச்சண்டை நுணுக்கங்களைப் பற்றிப் பேசுவது, ரிங்கிற்குள் நடக்கும் சண்டைக் காட்சிகள், டேன்சிங் ரோஸூடனான கபிலனின் 2 சுற்று நாக் அவுட், பீடி வாத்தியார், வேம்புலியை அடித்து வீழ்த்துமிடமென படத்தில் எக்கச்சக்க சர்ப்ரைஸூகள் இருக்கிறது. மொபைல் திரையில் இல்லாமல், தியேட்டரில் பார்த்திருந்தால் கூடுதல் அனுபவம் கிடைத்திருக்கும்.

நேரடியாக திமுக, அதிமுக என அரசியல் களத்தை முதன்முறையாக திரையில் பேசியிருக்கும் படம் இது. எமர்ஜென்ஸி நேரத்தில் திமுக ஆட்சி கவிழ்க்கப்படுவது, எமர்ஜென்ஸியினால் திமுக-வைச் சேர்ந்த ரங்கன் வாத்தியார் சிறைக்கு செல்வதென படம் லைவாக இருக்கிறது.

முதல் பாதியில் படம் கொடுத்த வேகம் இரண்டாம் பாதியில் இல்லை. கள்ளச்சாராயம், கொஞ்சம் கொஞ்சமாக ரவுடிசத்தை கையிலெடுக்கும் கபிலன், கலையரசன் நல்லவனா கெட்டவனா, போதைக்கு அடிமையாகும் இடங்கள் என நிறைய காட்சிகள் தெளிவு இல்லாமல் இருக்கிறது.

வாய்ப்பு ஒருமுறை மட்டும் தான்கிடைக்கும். அந்த தருணத்திலேயே நாக் அவுட்டில் ஜெயித்துவிட வேண்டுமென்பதை ஒவ்வொரு முறையும் கபிலன் உணர்த்திக் கொண்டே இருக்கிறார். முதல் பாதியில் வேம்புலியுடனான கபிலன் போடும் சண்டையோடு முழு படமே முடிந்துவிட்ட உணர்வு ஏற்படுகிறது. இரண்டாம் பாதியில் நீள்வதெல்லாம் தேவையில்லாத காட்சியாகவே படுகிறது.

பின்னணி இசையிலும், படத்தில் இடம்பெறும் இரண்டு பாடல்களிலும் வழக்கம் போல சந்தோஷ் நாராயணன் அசத்தியிருக்கிறார். சென்னையை லைவ்வாக கொண்டுவந்ததில் முரளியின் ஒளிப்பதிவுக்கும், ராமலிங்கத்தின் கலை இயக்கத்துக்கும் முக்கிய பங்கு இருக்கிறது.

தலித் அரசியலைப் பேசுவதற்காக வசனங்கள், குறியீடுகள் வலிந்து எதுவும் படத்தில் திணிக்கப்படவில்லை. ஸ்போர்ட்ஸ் டிராமாவுக்கான கமர்ஷியல் அம்சங்களுடன் படம் பக்காவாக இருக்கிறது. இறுதிச்சுற்று, ஆடுகளம் படங்கள் பார்த்துவிட்ட ரசிகர்களுக்கு இந்தப் படத்தின் கதையில் புதுமையென எதுவும் இருக்காது. ஆனால், திரைக்கதையாக படத்தில் சில மேஜிக்குகள் நடந்திருக்கிறது. அந்த மேஜிக் நிச்சயம் சார்பட்டா பரம்பரையை கொண்டாடவைக்கும்.

-ஆதினி

ஆன்டி இண்டியன் - விமர்சனம்!

12 நிமிட வாசிப்பு

ஆன்டி இண்டியன் - விமர்சனம்!

அர்ஜுன் மீது 'மீ டூ 'புகார்: விரைவில் விசாரணை அறிக்கை!

2 நிமிட வாசிப்பு

அர்ஜுன் மீது 'மீ டூ 'புகார்:  விரைவில் விசாரணை அறிக்கை!

அஜித்துக்கு கைதட்டல் வாங்கிக்கொடுத்த சிவசங்கர்: கே.எஸ்.ரவிகுமார் ...

3 நிமிட வாசிப்பு

அஜித்துக்கு கைதட்டல் வாங்கிக்கொடுத்த சிவசங்கர்: கே.எஸ்.ரவிகுமார்

வியாழன் 22 ஜூலை 2021