மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 20 ஜூலை 2021

கடன் நெருக்கடியில் விமல்: முடங்கிய படப்பிடிப்புகள்!

கடன் நெருக்கடியில் விமல்: முடங்கிய படப்பிடிப்புகள்!

கிராமத்து பாணியிலான வசன உச்சரிப்பு, எளிமையான தோற்றம் ஆகியவற்றால் ரசிகர்களை ஈர்த்து பசங்க பட வெற்றிக்கு பின் ஜூனியர் ராமராஜன் என்று அழைக்கப்பட்டவர் நடிகர் விமல்.

முன்னணி நாயகர்களை நெருங்க முடியாத புதிய தயாரிப்பாளர்கள், அறிமுக இயக்குநர்களின் விருப்ப தேர்வாக இருந்தவர் நடிகர் விமல். இவர் நடிப்பில் வெளிவந்த களவாணி, கலகலப்பு, கேடி பில்லா கில்லாடி ரங்கா, மஞ்சப்பை, தேசிங்கு ராஜா ஆகிய படங்களின் தொடர் வெற்றி விமலை வியாபார முக்கியத்துவம் உள்ள நாயகனாக அடையாளப்படுத்தியது.

இதன் காரணமாக விமலுக்கு படவாய்ப்புகள் குவிய தொடங்கியது. தன் படங்களின் வியாபாரம், வசூல் நிலவரங்களை கடந்து கோடிகளில் தனது சம்பளத்தை நிர்ணயித்தார். வியாபாரமும், வசூலும் அதற்கேற்ப இல்லாததால், இவர் நடித்த படங்கள் நஷ்டத்தை ஏற்படுத்தியது. கதைகளை தேர்ந்தெடுப்பதில் கோட்டை விட்ட காரணத்தால் மார்க்கெட் சரிவை சந்திக்க நேர்ந்தது.

சரிந்துபோன மார்க்கெட்டை தூக்கி நிறுத்த சொந்த படம் எடுத்த வகையிலும், ஆடம்பர செலவுகளாலும் ஃபைனான்சியர்களிடம் கடன் வாங்க நேர்ந்தது. அப்படி கடன் வாங்கி எடுத்த சொந்த படமும் தோல்வியை தழுவியது.

கடனை உரிய நேரத்தில் கொடுக்க வருமானம் இல்லாமல் தவித்தவர். புதுப்படங்களில் ஒப்பந்தமாகி அந்த படத்தின் மூலம் கிடைக்கும் ஊதியத்திலிருந்து கடனை அடைப்பதாக இவர் கொடுத்த உத்தரவாதத்தை நம்பிய ஃபைனான்சியர்களுக்கு , சொன்னபடி படத்தின் மூலம் கிடைத்த ஊதியத்தை தராமல் ரியல் எஸ்டேட் தொழிலில் முதலீடு செய்தார்.

குறித்த காலத்திற்குள் பணம் திரும்ப கிடைக்காததால் கடன் கொடுத்த ஃபைனான்சியர்கள் நீதிமன்றத்தில் விமல் மீது காசோலை மோசடி வழக்கு தொடுத்து வருகின்றனர். விநியோகஸ்தர்கள் சங்கங்களிலும் பணத்தை வசூல் செய்து தருமாறு விமல் மீது புகார் கொடுத்துள்ளனர்.

இதனால் விமல் நடித்த படங்களை வாங்குவதற்கும், விநியோக உரிமை பெறவும் விநியோகஸ்தர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர்.

இயக்குநர் சற்குணம் இயக்கத்தில் தயாராகியுள்ள ‘எங்க பாட்டன் சொத்து’, மாதேஷ் இயக்கத்தில் உருவான ‘சண்டக்காரி’ போன்ற படங்கள் தயாராக இருந்தாலும் வியாபாரம் நடைபெறவில்லை.

இதன் எதிரொலியாக விமல் நடித்து வரும் மற்ற படங்களுக்கு ஃபைனான்ஸ் செய்தவர்கள் கடன் கொடுப்பதை பாதியிலேயே நிறுத்திவிட்டார்கள்.

இசையமைப்பாளர் ஜான் பீட்டர் தயாரிப்பில் உருவாகி வரும் " படவா " படத்திற்கு ஈரோடு அம்மன் டெக்ஸ் உரிமையாளர், 1 கோடியும், திருச்சி பரதன் பிலிம்ஸ் 1 கோடியும், பன்னீர் செல்வம் என்பவர் 25 லட்சமும் நிதியுதவி செய்துள்ளனர்.

படத்தை முடிக்க மேற்கொண்டு, இரண்டு கோடி தேவைப்படுவதாலும், பட வெளியீட்டின் போது விமலின் கடன் பிரச்சனைகள் பெரும் சுமையாக தலைதூக்கும் என்பதாலும், திருச்சி பரதன் பிலிம்ஸ் பைனான்ஸ் ஒப்பந்தத்திலிருந்து பின் வாங்கிவிட்டது.

தமிழன் படத்தை இயக்கியமஜித் தயாரிப்பில் உருவாகி வரும் "மசாலா கபே" பெஞ்சமின் இயக்கத்தில் உருவாகி வரும் " லக்கி " போன்ற படங்களும் ஃ பைனான்ஸ் கிடைக்காமல் படப்பிடிப்பை தொடர முடியாமல் முடங்கியுள்ளது.

இன்றைய நிலவரப்படி விமல் நடிப்பில் தயாரான படத்தை வெளியிட முயற்சிக்கும் தயாரிப்பாளர்கள் விமல் மீது இருக்கும் பன்னிரண்டு கோடி ரூபாய் கடன் பாக்கியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும், இதன் காரணமாக புதிய திரைப்படங்களில் நடிக்க விமலை தயாரிப்பாளர்கள் ஒப்பந்தம் செய்வதை ஓரங்கட்டிவிட்டனர்.

இதன் காரணமாக வலைத்தள தொடர்களில் நடிக்க தொடங்கியுள்ளார் விமல். இதன்காரணமாக வலைத்தள தொடர்களை தயாரிப்பவர்களிடம் விமல் கொடுக்க வேண்டிய கடன்களை வசூலிக்க சட்ட ரீதியான நடவடிக்கைகளை தொடர தயாரிப்பாளர்கள்

சங்கத்தை அணுகியுள்ளனர் பைனான்சியர்களும், விநியோகஸ்தர்களும்.

-இராமானுஜம்

விருதுகளை அள்ளிய அசுரன்!

2 நிமிட வாசிப்பு

விருதுகளை அள்ளிய அசுரன்!

கார்த்தி முடிவால் வட்டியில் சிக்கிய தயாரிப்பாளர்!

4 நிமிட வாசிப்பு

கார்த்தி முடிவால் வட்டியில் சிக்கிய தயாரிப்பாளர்!

ஐபிஎல்: மும்பையை வீழ்த்திய சென்னை சூப்பர் கிங்ஸ்!

6 நிமிட வாசிப்பு

ஐபிஎல்: மும்பையை வீழ்த்திய சென்னை சூப்பர் கிங்ஸ்!

செவ்வாய் 20 ஜூலை 2021