மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 16 ஜூலை 2021

வலிமை ரிலீஸ் : மீண்டும் ரஜினியுடன் மோதுகிறாரா அஜித் ?

வலிமை ரிலீஸ் : மீண்டும் ரஜினியுடன் மோதுகிறாரா அஜித் ?

அஜித் நடிக்க ஹெச்.வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரிப்பில் உருவாகிவரும் படம் வலிமை. யுவன் இசையில் உருவாகிவரும் இப்படத்தின் படப்பிடிப்பு 95% முடிவடைந்துவிட்டது. இன்னும், வெளிநாடு ஷூட்டிங் மட்டுமே மீதமிருக்கிறது. இந்த ஷூட்டிங்கிற்காக அஜித் உட்பட படக்குழுவினர் கிழக்கு ஐரோப்பா நாடுகளுக்குச் செல்ல இருக்கிறார்கள். இந்நிலையில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக், மோஷன் போஸ்டரெல்லாம் வெளியாகி வைரலானது. அடுத்தக் கட்டமாக படத்தில் இடம்பெறும் சிங்கிள் பாடலை வெளியிடும் திட்டத்தில் இருக்கிறது படக்குழு.

வலிமை படத்தை இந்த வருடம் வெளியிடுவது என்பதில் படக்குழு உறுதியாக இருக்கிறது. ஆனால், எதோ ஒரு வியாழக்கிழமை தினத்தில் வலிமை படத்தை வெளியிட முடியாது. பண்டிகை தினத்தில் வெளியானால் மட்டுமே, படத்தின் கலெக்‌ஷனைப் பார்க்க முடியும். ஆனால், பெரிய பண்டிகை திருநாளாக ஆயுத பூஜையும், தீபாவளியும் மட்டுமே இருக்கிறது. முதலில், ஆயுதபூஜைக்கு வெளியிட திட்டமிட்டிருந்தனர். அதற்குள் திரையரங்கு திறக்க வேண்டும். 100% இருக்கை அனுமதி எனும் இயல்பு நிலை திரும்ப வேண்டும். இவையெல்லாம் நடக்குமா என்பதும் தெரியவில்லை. அதோடு, படமும் முழுமையாக தயாராக வேண்டும், அவசரத்தில் வேலையை முடிக்க வேண்டாம் உள்ளிட்ட பல காரணங்களால் தீபாவளிக்கு படத்தை வெளியிட போனிகபூர் தீவிர ஆலோசனையில் இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

ஏற்கெனவே, ரஜினியின் அண்ணாத்த தீபாவளிக்கு வெளியாவது உறுதியாகிவிட்டது. அஜித்துக்கு வீரம், விவேகம், வேதாளம், விஸ்வாசம் என நான்கு ஹிட் கொடுத்த சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்க சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் அண்ணாத்த உருவாகிவருகிறது. இந்தப் படத்துக்குமான படப்பிடிப்பு 95%க்கும் மேல் முடிந்துவிட்டது. இறுதி ஷெட்யூலுக்காக கொல்கத்தா செல்கிறது படக்குழு. இரண்டு படங்களின் இறுதிக்கட்டப் பணிகளும் ஒரே நேரத்தில்முடியும் என்று கணிக்கப்படுகிறது.

அண்ணாத்த வருகிற நவம்பர் 4ஆம் தேதி தீபாவளிக்கு வெளியாகும் என்பதை தயாரிப்புத் தரப்பு முன்கூட்டியே அறிவித்துவிட்டது. இந்நிலையில், அஜித்தின் வலிமையும் தீபாவளி வெளியீடாக வாய்ப்பிருப்பதாகவே கூறுகிறார்கள். ஏற்கெனவே, 2019ல் அஜித்தின் விஸ்வாசம் மற்றும் ரஜினியின் பேட்ட படங்கள் பொங்கல் பண்டிகைக்கு வெளியானது. இரண்டு படங்களுமே பாக்ஸ் ஆஃபீஸில் பெரியளவில் கலெக்‌ஷன்களை அள்ளியது.

இரண்டு படங்களுக்குமே திரையரங்கில் கூட்டம் நிறைந்தது. ஆனால், விஸ்வாசம், பேட்ட வெளியாகும் போது கொரோனா இல்லை. இப்போது நிலையே வேறு. மீண்டும் அந்த மேஜிக் நடக்குமா? இரண்டு பெரிய நட்சத்திரங்களின் படங்கள் ஒரே நாளில் வெளியாகி, இரண்டுமே வெற்றிவாகை சூடுமா என்பது டிரேடிங் வட்டாரத்துக்கே புரியாத புதிராக இருக்கிறதாம்.

- தீரன்

ஹிட் அடித்த பாலகிருஷ்ணா, தோல்வியில் மோகன்லால்

3 நிமிட வாசிப்பு

ஹிட் அடித்த பாலகிருஷ்ணா, தோல்வியில் மோகன்லால்

ஆன்டி இண்டியன் - விமர்சனம்!

12 நிமிட வாசிப்பு

ஆன்டி இண்டியன் - விமர்சனம்!

மோகன்லால் விரும்பி கேட்ட பிரபு

3 நிமிட வாசிப்பு

மோகன்லால் விரும்பி கேட்ட பிரபு

வெள்ளி 16 ஜூலை 2021