மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 12 ஜூலை 2021

வெள்ளி விழா ஆண்டில் காதல் கோட்டை!

வெள்ளி விழா ஆண்டில் காதல் கோட்டை!

தமிழ் சினிமாவும் காதலும் என்றென்றும் பிரிக்க முடியாதவை. பார்த்தவுடன் காதல். பழகியவுடன் காதல். மோதலுக்குப் பின் காதல், இந்த வரிசையில் 'பார்க்காமலே காதல்' என்னும் புதுமையான சிந்தனையை முன்வைத்த படம்தான் 'காதல் கோட்டை'. 25 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் (1996 ஜூலை 12) வெளியான 'காதல் கோட்டை' அந்தக் காலத்தில் அனைத்துத் தரப்பு மக்களையும் ரசிக்க வைத்த படம்.

புகைப்படம், திரைப்படம் இவை எல்லாம் கடந்த காலங்களை பதிவு செய்து சேமித்து வைக்கும் பாதுகாப்பு பெட்டகங்கள். இதில் திரைப்படங்கள் தனித்துவமானவை, இன்றளவும் தலைமுறை கடந்து ரசிக்ககூடிய, வரலாற்று ஆவணமாக இன்றைய தலைமுறைகளும் பார்க்ககூடிய படங்கள் ஏராளம்.

சில திரைப்படங்கள் எந்தக் காலகட்டத்துக்கும் பொருத்தமானவை. சில திரைப்படங்கள் குறிப்பிட்ட காலகட்டத்துக்கு மட்டுமே பொருத்தமானவை. அந்தத் திரைப்படம் உருவான காலகட்டத்தில் நிலவிய சூழலை பிரதிபலிக்ககூடியவை.

எக்காலகட்டத்துக்கும் பொருத்தமான கதை என்பது ஒரு சிறப்பு என்றால் குறிப்பிட்ட காலகட்டத்துக்கு மட்டுமே பொருத்தமானது என்பது இன்னொரு வகையான சிறப்பு. கடந்த காலத்துக்குத் திரும்பிச் சென்று பார்க்க முடியாது. ஆனால் அந்தக் காலத்திற்கு, இதுபோன்ற திரைப்படங்களை பார்ப்பதன் மூலம் பார்வையாளன் சென்று வர முடியும்.

அதன் மூலம் அக்காலகட்டம் எப்படி இருந்தது என்பதை அப்போது வாழ்ந்தவர்கள் நினைத்துப் பார்த்து அசைபோடவும் , அதற்குப் பிறகு வாழ்கிறவர்கள் அது எப்படி இருந்தது என்று தெரிந்துகொள்ளவும் உதவுவது இதுபோன்ற திரைப்படங்களின் தனிச் சிறப்பு.

இது சினிமா என்னும் காட்சி ஊடகத்தின் சிறப்பு, அந்த வகையில் செல்போன்கள் நடைமுறைக்கு வராத காலகட்டம் தொலைபேசிகள் பணக்காரர்களுக்கு மட்டுமே எட்டும் தூரத்தில் இருந்த சூழல்.

தபால்காரர் துணையுடன் பரிமாறிக் கொள்ளப்படும் கடிதங்கள், எப்போதாவது பயன்படுத்தப்படும் ஒரு ரூபாய் கட்டணத்தில் பேசும்பொதுத் தொலைபேசிகள், ஆகியவற்றின் மூலமாக காதல் வளர்ந்த 1990களின் காலகட்டத்தின் பதிவு 'காதல் கோட்டை'.

அகத்தியன் இயக்கத்தில் அஜீத்குமார், தேவயானி, ஹீரா, கரண், பாண்டு, மணிவண்ணன், ராஜீவ், தலைவாசல் விஜய் ஆகியோர் நடித்த இப்படத்திற்கு தங்கர்பச்சன் ஒளிப்பதிவு செய்ய தேவா இசையமைத்திருந்தார்.

திரைப்பட தயாரிப்பில் தொடக்கநிலையில் இருந்த சிவசக்தி பாண்டியன் தயாரித்த படம் காதல் கோட்டை. இப்படம் வெளியாகி 25 ஆண்டுகள் நிறைவுபெறுவதையொட்டி தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன் விழா ஒன்றை நேற்று நடத்தினார். இந்த கொண்டாட்டத்தில் படத்தின் இயக்குநர் அகத்தியன், நாயகி தேவயானி, தலைவாசல் விஜய், ஒளிப்பதிவாளர் தங்கர்பச்சன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

வழக்கம்போல் கதாநாயகன் அஜீத்குமார் விழாவில் பங்கேற்கவில்லை. அவரது திரையுலக வாழ்வில் முழுமையான வியாபார முக்கியத்துவமிக்க கதாநாயகனாக அடையாளப்படுத்திய படம் காதல் கோட்டை என்பது குறிப்பிடத்தக்கது.

1996ம் ஆண்டுக்கான சிறந்த பிராந்தியமொழி திரைப்படம், சிறந்த இயக்குநர், சிறந்த திரைக்கதை அமைப்பு என மூன்று பிரிவுகளில் தேசிய விருதை பெற்று தமிழ்சினிமாவுக்கு பெருமை சேர்த்த படம் காதல் கோட்டை.

புதுடெல்லியில் நடைபெற்ற விருது பெறும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சென்னை திரும்பிய இயக்குநர் அகத்தியனை தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்கம் விமான நிலையத்தில் வரவேற்று ஊர்வலமாக கோடம்பாக்கம் அழைத்து வந்து நடைபெற்ற பாராட்டு விழாவில் தென்னிந்திய திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் சார்பில் தங்கத்தில் செய்யப்பட்ட உறுப்பினர் கார்டும் வழங்கப்பட்டு அகத்தியன் கௌரவிக்கப்பட்டார்.

வசூல் ரீதியாக தயாரிப்பாளர், விநியோகஸ்தர், திரையரங்கு என முத்தரப்புக்கும் இருமடங்கு லாபத்தை பெற்று தந்த படம் காதல் கோட்டை என்பது குறிப்பிடத் தக்கது.

இராமானுஜம்

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

4 நிமிட வாசிப்பு

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

3 நிமிட வாசிப்பு

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

‘எனிமி’க்கு எனிமியான அண்ணாத்த

10 நிமிட வாசிப்பு

‘எனிமி’க்கு எனிமியான அண்ணாத்த

திங்கள் 12 ஜூலை 2021