மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 9 ஜூலை 2021

மணிரத்னத்தின் நவரசங்கள் : ரிலீஸான வித்தியாசமான டீஸர்!

மணிரத்னத்தின் நவரசங்கள் : ரிலீஸான வித்தியாசமான டீஸர்!

முதல் லாக்டவுன் நேரத்தில் திரையரங்குகள் மீண்டும் திறப்பது எப்போது எனும் பெரும் அச்சம் நிலவிய சூழலில் தமிழின் உச்ச இயக்குநர்களும், நடிகர்களும் ஓடிடி பக்கம் வந்தனர். அப்படி, நான்கு ஆந்தாலஜி திரைப்படங்களின் அறிவிப்பு வெளியானது.

ஒன்று, பிரைம் வீடியோவில் வெளியான புத்தம் புதுக்காலை. சுஹாசினி மணிரத்னம், கெளதம் வாசுதேவ் மேனன், சுதா கொங்கரா, ராஜீவ் மேனன் மற்றும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஐந்து தனிக்கதைகளாக புத்தம் புது காலை வெளியானது. மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகி ஒன்றுமில்லாமல் போனது.

இரண்டாவது, நெட்ஃப்ளிக்ஸ் ரிலீஸ் செய்த ‘பாவக்கதைகள்’. இந்த ஆந்தாலஜியை வெற்றிமாறன், கவுதம் மேனன், சுதா கொங்கரா, விக்னேஷ் சிவன் ஆகிய 4 இயக்குநர்கள் இயக்கியிருந்தார்கள். மொத்தமாக நான்கு கதைகளுடன் சமூகத்தில் நிகழ்வும் வலிமிகுந்த பகுதிகளை படத்தில் காட்சிப்படுத்தியிருப்பார்கள். பாவக்கதைகள் ஓரளவுக்கு ரசிகர்களை ஈர்த்தது.

மூன்றாவது , காதலும் காதல் நிமித்தமுமாக குட்டி ஸ்டோரி ஆந்தாலஜி வெளியானது. இந்த ஆந்தாலஜியை கௌதம் மேனன், ஏ.எல்.விஜய், வெங்கட் பிரபு, நலன் குமாரசாமி ஆகியோர் முறையே 'எதிர்பாரா முத்தம்', 'அவனும் நானும்', 'லோகம்', 'ஆடல்-பாடல்' என நான்கு கதைகளை இயக்கியிருந்தனர். இந்த நான்கு கதைகளில் நலன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்திருந்த கதை மட்டுமே பரபரப்பாக பேசப்பட்டது. மற்றதெல்லாம், வேண்டாத ஆணியாகிப் போனது.

நான்காவது, நவரசா. மணிரத்னத்தின் முன்னெடுப்பாக ஒன்பது இயக்குநர்களுடன், ஒன்பது கதைகளாக உருவாகியிருக்கும் வெப் சீரிஸ் ‘நவரசா’. மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வரும் இந்த ஆந்தாலஜி விரைவில் வெளியாக இருக்கிறது. தற்பொழுது, யார் இயக்கத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்பது குறித்த முழு விவரம் தெரியவந்துள்ளது. இந்த ஆந்தாலஜியின் ஸ்பெஷலே, நவரசங்களான ஒன்பது உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாக ஒவ்வொரு கதையும் அமைந்திருக்கும்.

ஸ்ருங்காரம் (காதல்)

காதலும் காதல் நிமித்தமுமான கதையாக உருவாகியிருக்கும் கதை ‘கிட்டார் கம்பி மேலே நின்று’. காதல் கதைகளில் ஸ்பெஷலிஸ்டான கெளதம் மேனன் இயக்கத்தில் சூர்யா & ப்ரயாகா நடித்துள்ளனர்.

கருணை

பிஜாய் நம்பியார் இயக்கத்தில் விஜய்சேதுபதி, பிரகாஷ்ராஜ், ரேவதி, அசோக் செல்வன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஹாஸ்யம் (ஹூமர்)

இயக்குநர் பிரியதர்ஷன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் காமெடியான இக்கதைக்கு‘சம்மர் ஆஃப் 92’ என பெயரிட்டுள்ளனர். இதில் யோகிபாபு, ரம்யா நம்பீசன், நெடுமுடி வேணு ஆகியோர் நடித்துள்ளனர்.

அமைதி

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் அமைதியை மையமாக் கொண்டு உருவாகியிருக்கும் கதை ‘பீஸ்’. இதில் கெளதம் மேனன், பாபி சிம்ஹா, சனந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஆச்சரியம்

கார்த்திக் நரேன் இக்கதையை இயக்கியுள்ளார். இந்தக் கதைக்கு ‘ப்ராஜெக்ட் அக்னி’ என பெயரிட்டுள்ளனர். இதில், அரவிந்த்சுவாமி, பிரசன்னா, பூர்ணா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ரெளத்ரம்

கோவத்தை மையமாக் கொண்ட இந்தக் கதையின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார் நடிகர் அரவிந்த் சாமி. இதில் ரித்விகா, ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

பயானகம் (அச்சம்)

பயம் எனும் உணர்வினை மையமாக் கொண்டு உருவாகியிருக்கும் இக்கதைக்கு ‘இன்மை’ என பெயரிட்டுள்ளனர். ரதீந்திரன் பிரசாத் இயக்கியிருக்கிறார். இந்தக் கதையில் சித்தார் & பார்வதி நடித்துள்ளனர்.

தைரியம்

அதர்வா, அஞ்சலி , கிஷோர் உள்ளிட்ட பலர் நடிக்க உருவாகியிருக்கும் இக்கதைக்கு ‘துணிந்த பின்’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்தக் கதையை சர்ஜூன் இயக்கியிருக்கிறார்.

அருவருப்பு

அருவருப்பு எனும் ரசத்தை மையமாகக் கொண்டு உருவாகியிருக்கும் கதையை வஸந்த் சாய் இயக்கியுள்ளார். இந்தக் கதைக்கு 'பாயசம்' என பெயரிட்டுள்ளனர். இந்தப் படத்தில் டெல்லி கணேஷ், ரோகினி, அதிதி பாலன் ஆகியோர் நடித்துள்ளனர்.

ஒவ்வொரு நடிகர்களின் எமோஷன்களை படமாக்கி அப்படியே டீஸராக ரிலீஸ் செய்திருக்கிறார்கள். வித்தியாசமான டீஸர் முயற்சியே, படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகமாக்குகிறது. மணிரத்னத்தின் நவரசங்கள் வருகிற ஆகஸ்ட் 06ஆம் தேதி வெளியாகிறது.

- ஆதினி

'ஓ சொல்றியா பாடல்': சமந்தாவின் சம்பளம் எவ்வளவு?

3 நிமிட வாசிப்பு

'ஓ சொல்றியா பாடல்': சமந்தாவின் சம்பளம்  எவ்வளவு?

வெள்ளி 9 ஜூலை 2021