மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 8 ஜூலை 2021

ஒளிப்பதிவு சட்டதிருத்தம் : விஜய், அஜித், ரஜினி மவுனம்!

ஒளிப்பதிவு சட்டதிருத்தம் : விஜய், அஜித், ரஜினி மவுனம்!

ஒளிப்பதிவு சட்ட திருத்த மசோதா2021 எதிர்த்து கமல்ஹாசன், சூர்யா, கார்த்தி, விஷால் உள்ளிட்ட நடிகர்கள் தொடர்ந்து அது குறித்த தங்களது எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் தங்களது சங்கத்தின் மூலமாகவும், தனிப்பட்ட முறையும் முறைப்படி உரிய வழியில் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.

திரைப்பட துறை பிரதிநிதிகள் தமிழ்நாடு முதல்வரை சந்தித்து சட்டத்தின் அபாயத்தையும், அதனால் ஏற்படக்கூடிய தொழில் நெருக்கடியை விளக்கியபின் ஒளிப்பதிவு சட்டதிருத்த மசோதா முயற்சியை கைவிட வேண்டும் என்று சம்பந்தபட்ட துறை அமைச்சருக்கு தமிழ்நாடு முதல்அமைச்சர் கடிதம் எழுதியுள்ளார்.

ஆனால், தமிழ் சினிமாவில் அதிக அளவில் வியாபாரத்தையும், வசூலையும் பெறும் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், விஜய், அஜித்குமார் ஆகியோர் இந்த மசோதா குறித்த தங்களது கருத்துக்களை இதுவரை பதிவு செய்யவில்லை.

அவர்கள் இப்படி எந்த ஒரு கருத்தையும் சொல்லாமல் மவுனமாக இருப்பது திரையுலகத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஜினிகாந்த் தற்போது அமெரிக்காவில் மருத்துவ சிகிச்சையில் இருக்கிறார். விஜய் அவருடைய 'பீஸ்ட்' படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். அஜித்குமார் எந்தப் படப்பிடிப்பும் இல்லை, வீட்டில் தான் ஓய்வெடுத்து வருகிறார்.

அறிவு சார்ந்த இது போன்ற விஷயங்களை பற்றி தினந்தோறும் பத்திரிகை படிக்கும் தொலைக்காட்சி செய்திகளை பார்ப்போரால் மட்டுமே முழுமையாக அறிந்திருக்கமுடியும். வெளிநாடுகளில் திரைப்பட கலைஞர்களுக்கு அறிவுசார்ந்த தகவல்களை தினந்தோறும் கூறவும் அது சம்பந்தமாக கருத்து கூறுவது பற்றிய வழிகாட்டவும் ஆலோசகர்களை நியமனம் செய்யும் பழக்கம் உள்ளது.

இந்திய சினிமாவில் இது போன்ற நடைமுறைகள் பின்பற்றப்படுவதில்லை. ஆனால் நடிகர் கமல்ஹாசன் தன்னைப் பற்றி ஊடகங்களில் வருகின்ற செய்திகள், சினிமா துறைசார்ந்த செய்திகளை அது சாதாரண அச்சு ஊடகத்தில் வெளியிடப்பட்டிருந்தாலும் அவைகள் சேகரிக்கப்பட்டு கமல்ஹாசன் பார்வைக்கு வைக்கப்படுவதற்கு ஒரு குழுவே செயல்பட்டு வருகிறது இதற்கு என்று கமல்ஹாசன் அந்தக் குழுவிற்கு மாத ஊதியம் வழங்கிவருகின்றார்.

தமிழ் சினிமாவில் வேறு எந்த நடிகரும் இது போன்ற நடைமுறையை கடைப்பிடிக்கவில்லை பத்திரிகையாளர்களை சந்திப்பதையே பயம் காரணமாக தவிர்த்து வரும் அஜித்குமார், விஜய் போன்ற நடிகர்கள் தங்கள் உதவியாளர்கள் கூறும் தகவல்களை கொண்டு அவர்கள் கூறும் முடிவுகள் எடுக்கின்றனர்.

ரஜினிகாந்த் எப்போதும் சினிமா, பொதுப் பிரச்சினைகளில் கழுவுகிற மீனில் நழுவி செல்லும் மீன் போன்றவர். ஒளிப்பதிவு சட்ட மசோதா மத்தியில் ஆளும் பாஜகவின் கொள்கை அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ள முடிவு இயல்பாகவே பாஜக ஆதரவாளராக தன்னை வெளிப்படுத்திக்கொள்வதில் தயக்கம் கொள்ளாத ரஜினிகாந்த் எந்த கருத்தையும் தெரிவிக்காமல் மௌனமாக இருந்து விடுவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

அஜித்குமார் எந்த ஒரு மக்கள் சார்ந்த, திரைதுறை சார்ந்த விஷயங்களில் தனிப்பட்ட முறையில் கருத்து கூறுவது இல்லை. நடிப்பதற்கான சம்பளம், நடிப்பது அத்துடன் தனது வேலை முடிந்தது என்று ஒதுங்கிவிடும் பழக்கத்தை கடந்த பத்தாண்டுகளாக கடைப்பிடித்து வருகிறார். தான் நடிக்கும் படங்களின் பத்திரிகையாளர் சந்திப்பு, பட விழா, புரமோஷன் போன்ற நிகழ்வுகளுக்கு வர மாட்டேன் என்பதை ஒப்பந்தமாக ஏற்றுக்கொள்ளும் தயாரிப்பாளர் படங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.

நடிகர் விஜய் தொழில் ரீதியாக காரியவாதி என்பது கோடம்பாக்கம் அறிந்த ரகசியம், படங்களில் மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக வசனம் பேசுவதில் வரம்புகளை கடப்பவர், அதேவேளை அந்தப் படம் வெளியாவதற்கு பிரச்சினை என்றால் சம்பந்தபட்டவர்களை சங்கோஜம் இன்றி சந்தித்து சமரசமாகிவிடுவதில் விஜய் "புலி" பாய்ச்சலில் செயல்படக்கூடியவர்.

இந்திய சினிமாவே அலறிக்கொண்டிருக்கிறது, இந்திய நடிகராக மாற திட்டம் போட்டுக் கொண்டிருக்கும் விஜய் ஒளிப்பதிவு சட்ட திருத்த மசோதா எதிர்ப்பு இயக்கத்தில் இணைவார் என்பது இந்த நிமிடம் வரை உறுதிப்படுத்தபடவில்லை.

இந்திய சினிமாவில் முதலீட்டு அளவில் மூன்றாவது இடம் தமிழ் சினிமாவுக்கு. அதிகமான தோல்வி படங்களை தயாரிப்பதில் முதல் இடம் தமிழ்சினிமாவுக்கு.

அதிகமான சம்பளம் வாங்கும் நடிகர்கள் தமிழ் சினிமாவில் அதிக எண்ணிக்கையில் இருக்கிறார்கள், இருந்தபோதிலும் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித்குமார் இவர்களின் கருத்து என்ன என்பதை பொதுப் பிரச்சினைகளில் தமிழ் சமூகம் எல்லா காலங்களிலும் எதிர்பார்க்கிறது.

இப்போது அவர்களின் வளத்துக்கும் புகழுக்கும் காரணமான சினிமா துறை சிக்கலுக்கு கமல்ஹாசன் தலைமை ஏற்றுவிட்டார். எஞ்சியவர்கள் மெளனம் சாதிப்பது கோடம்பாக்க சினிமாக்காரர்களின் கோபத்தை அதிகப்படுத்தி வருகிறது.

-இராமானுஜம்

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

நிறத்தால் ஏற்பட்ட அவமானம் : மனம் திறந்த வினுஷா

3 நிமிட வாசிப்பு

நிறத்தால் ஏற்பட்ட அவமானம் : மனம் திறந்த வினுஷா

அடுத்தடுத்து 2 பாலிவுட் படங்களில் தனுஷ்

3 நிமிட வாசிப்பு

அடுத்தடுத்து 2 பாலிவுட் படங்களில் தனுஷ்

வியாழன் 8 ஜூலை 2021