மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 7 ஜூலை 2021

ஒலிம்பிக்: இந்திய தேசிய கொடியை ஏந்திசெல்லும் இருவர்!

ஒலிம்பிக்: இந்திய தேசிய கொடியை ஏந்திசெல்லும் இருவர்!

32ஆவது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வருகிற 23ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை நடக்கிறது. இந்தப் போட்டியின் கோலாகலமான தொடக்க விழாவில் அணிவகுத்து செல்லும் இந்திய அணிக்கு குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம், ஆண்கள் ஆக்கி அணியின் கேப்டன் மன்பீரித் சிங் ஆகியோர் தலைமை தாங்கி தேசிய கொடியை ஏந்தி செல்வார்கள் என்று இந்திய ஒலிம்பிக் சங்கம் அறிவித்துள்ளது. நிறைவு விழாவில் மல்யுத்த வீரர் பஜ்ரங் பூனியா இந்திய அணிக்குத் தலைமை ஏற்று தேசிய கொடியை ஏந்தி செல்வார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக ஓர் அணிக்கு ஒருவர்தான் தலைமை தாங்கி வழிநடத்துவார். தொடக்க விழாவில் பாலின பாகுபாடு இன்றி இருபாலரும் அணிக்கு தலைமை தாங்கி, தேசிய கொடியேந்தி செல்ல வேண்டும் என்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி கடந்த ஆண்டு முடிவு எடுத்ததை அடுத்து அணிக்கு வீரர், வீராங்கனை இணைந்து தலைமை தாங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்திய அணிக்குத் தலைமை தாங்கும் கவுரவத்தைப் பெற்றிருக்கும் ஆறு முறை உலக சாம்பியனான 38 வயது குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் இதுகுறித்து பேசுகையில், “என்னுடைய கடைசி ஒலிம்பிக் போட்டியில் கிடைத்த மிகப்பெரிய தருணம் இதுவாகும். இதனால் நான் அதிகப்படியான உணர்ச்சியை அடையக்கூடும். அணிக்குத் தலைமை தாங்கும் மிகப்பெரிய கவுரவத்துக்கு என்னை தேர்வு செய்த மத்திய விளையாட்டு அமைச்சகத்துக்கும், இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கும் நன்றி தெரிவித்துகொள்கிறேன். இது எனக்குக் கூடுதல் உத்வேகத்தை அளிக்கும். பதக்கம் வெல்வதற்கு எனது மிகச் சிறந்த திறனை வெளிப்படுத்துவேன்” என்று கூறியுள்ளார்.

இந்திய ஆக்கி அணியின் கேப்டன் மன்பிரீத் சிங், “வியக்கதக்க வீராங்கனையான மேரி கோமுடன் இணைந்து ஒலிம்பிக் தொடக்க விழாவில் தேசிய கொடியை ஏந்த இருப்பதை மிகப்பெரிய கவுரவமாகக் கருதுகிறேன். இது அற்புதமானதாகும். இதை விவரிக்க வார்த்தையில்லை. மேரி கோமின் வாழ்க்கை பயணம் எனக்கு எப்போதும் உத்வேகம் அளிப்பதாகும். எனக்கு மட்டுமின்றி ஹாக்கிக்கும் இது மிகப்பெரிய தருணமாகும். இந்த சிறந்த வாய்ப்பை அளித்த இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். தொடக்க விழா அணிவகுப்பு பொறுப்பை எதிர்நோக்கி இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

2016இல் ரியோ டிஜெனீரோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டி தொடக்க விழாவின்போது இந்திய அணி சார்பில் அபினவ் பிந்த்ரா தேசிய கொடியை ஏந்தி சென்றார்.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் 63 வீரர்கள், 52 வீராங்கனைகள் என மொத்தம் 115 பேர் பல்வேறு விளையாட்டு பிரிவுகளில் பங்கேற்கின்றனர். இவர்கள் 14ஆம் தேதி ஜப்பான் செல்கின்றனர்.

ராஜ்

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

3 நிமிட வாசிப்பு

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

பிக்பாஸ் அக்‌ஷரா ரெட்டியின் மறுமுகம்!

6 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் அக்‌ஷரா ரெட்டியின் மறுமுகம்!

முதல்வர் வீட்டின் முன் உண்ணாவிரதம் இருப்பேன்: டி.ராஜேந்தர்

8 நிமிட வாசிப்பு

முதல்வர் வீட்டின் முன் உண்ணாவிரதம் இருப்பேன்: டி.ராஜேந்தர்

புதன் 7 ஜூலை 2021