மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 6 ஜூலை 2021

ஒலிம்பிக்கில் ஐந்து தமிழக வீரர்-வீராங்கனைகள்: குவியும் பாராட்டுகள்!

ஒலிம்பிக்கில் ஐந்து தமிழக வீரர்-வீராங்கனைகள்: குவியும் பாராட்டுகள்!

டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐந்து வீரர்-வீராங்கனைகள் தேர்வாகியுள்ளனர்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 23ஆம் தேதி முதல் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ளன. அதில் தடகளப் போட்டிகள் ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 9வரை நடைபெறுகின்றன. இந்திய அணி சார்பில் பங்கேற்கும் 26 பேரில், ஐந்து பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்.

மதுரையைச் சேர்ந்த ரேவதி வீரமணி, திருச்சியைச் சேர்ந்த சுபா வெங்கடேசன், தனலட்சுமி சேகர் ஆகியோர் கலப்பு 4x400 மீட்டர் தொடர் ஓட்டத்திலும், ஆரோக்கிய ராஜீவ், நாகநாதன் பாண்டி ஆகியோர் ஆண்களுக்கான 4x400 மீட்டர் தொடர் ஓட்டத்திலும் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் முதல் முறையாக ஒரே மாநிலத்திலிருந்து டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு ஐந்து பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதற்கு அரசியல் தலைவர்கள் உள்பட பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி,” ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தமிழ்நாட்டைச் சேர்ந்த மேலும் ஐவர் தகுதி பெற்றிருப்பது பெருமையளிக்கிறது. ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று சாதனை படைத்து உலகளவில், தமிழ்நாட்டுக்கும் தமிழ் மக்களுக்கும் பெருமை சேர்த்திட சகோதர சகோதரிகளை வாழ்த்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி துணை நிலை ஆளுநர், மருத்துவர் தமிழிசை சௌந்தரராஜன்,” தமிழ்நாட்டின் மதுரையை சேர்ந்த தடகள வீராங்கனை ரேவதி, ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவிற்காக கலந்துகொள்ள உள்ளது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. தடகள வீராங்கனை ரேவதி ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்று தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் ட்விட்டரில், “டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ரேவதி, தனலட்சுமி, சுபா, ஆரோக்கிய ராஜீவ், நாகநாதன் பாண்டி ஆகியோர் 4*400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டத்தில் கலந்துகொள்ள தேர்வாகியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. முயற்சி திருவினையாக்கும் என்பதை நிரூபித்து உலக அரங்கில் தமிழகத்திற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்க்கும் விதமாக வெற்றிவாகை சூட மனதார வாழ்த்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தனது ட்விட்டரில், “பெற்றோரைச் சிறு வயதிலேயே இழந்து, பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்த மதுரையைச் சேர்ந்த ரேவதி ஒலிம்பிக்கிற்கான இந்திய தடகள அணியில் இடம் பெற்றிருக்கிறார் என்ற செய்தி மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.

சாதாரண ஏழைக் குடும்பத்தில் பிறந்தாலும், விடாமுயற்சியுடன் பயிற்சியினை மேற்கொண்டு விளையாட்டு வீரர்களின் உச்சக் கனவான ஒலிம்பிக் போட்டியில் 4x400 மீட்டர் கலப்புத் தொடர் ஒட்டத்தில் கலந்து கொள்ளும் தகுதியினை பெற்றிருப்பது பாராட்டுக்குரியது. இவர் தொடர்ந்து பயிற்சி மேற்கொண்டு ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் தங்கம் வென்று தமிழ்நாட்டிற்கு பெருமை தேடிக் கொடுப்பார் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. அவர் வெற்றி பெற எனது மனம் நிறைந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பல தலைவர்களும் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.

-வினிதா

விவாகரத்து செய்யும் தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

3 நிமிட வாசிப்பு

விவாகரத்து செய்யும் தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

புதிய படங்களை ஓரங்கட்டிய எம்.ஜி.ஆர்

5 நிமிட வாசிப்பு

புதிய படங்களை  ஓரங்கட்டிய எம்.ஜி.ஆர்

'ஓ சொல்றியா பாடல்': சமந்தாவின் சம்பளம் எவ்வளவு?

3 நிமிட வாசிப்பு

'ஓ சொல்றியா பாடல்': சமந்தாவின் சம்பளம்  எவ்வளவு?

செவ்வாய் 6 ஜூலை 2021