மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 1 ஜூலை 2021

ஊரடங்கில் தமிழ் சினிமா: சிறப்பு பார்வை!

ஊரடங்கில் தமிழ் சினிமா:  சிறப்பு பார்வை!

மனித வாழ்க்கை நவீனமயம், உலகமயமாக்கலில் சுருங்கியும், ஆயுள் குறைந்தும் வருகிறது.

விஞ்ஞான வளர்ச்சி, அதன் மூலம் ஏற்படும் மாற்றங்களை தனக்குள் கிரகித்து கொண்டு அதனை வளர்ச்சிக்கு பயன் படுத்துகிற மனிதனும், தொழிலும் சரிவை சந்தித்தது கிடையாது.

நவீனத்தை பயன்படுத்தி பணம் பார்க்க மட்டுமே தெரிந்தவர்களுக்கு நெருக்கடி வருகிறபோது, நவீனத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த தெரியாமல் பாதாளத்துக்குள் பயணிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அதற்கு ஆகச்சிறந்த உதாரணம் சினிமாவும் அதனை நம்பி இருக்கும் திரையரங்குகள் என்றால் மிகையாகாது.

தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு ஆண்டின் துவக்கமே 50 சதவீத இருக்கைகளுடன் ஆரம்பமாகிய வரலாறு இதற்கு முன் நிகழ்ந்திருக்காது. கொரோனா முதல் அலையின் காரணமாக 2020ம் ஆண்டு மார்ச் மாதம் மூடப்பட்ட தியேட்டர்கள், மீண்டும் நவம்பர் மாதம் 50 சதவீத இருக்கை அனுமதியுடன் திறக்கப்பட்டது. அந்த அனுமதி 2021ம் ஆண்டிலும் தொடர்ந்தது.

தொடரும் கொரோனா சோகம், தமிழக அரசு ஜனவரி 10 முதல் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி வழங்கியது. ஆனால், மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து அந்த அனுமதி ரத்து செய்யப்பட்டு மீண்டும் 50 சதவீத இருக்கைகளே தொடர்ந்தது. அதன் பின் பிப்ரவரி 1ம் தேதி முதல் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அதற்கு முந்தைய சுமார் 11 மாத காலத்தில் 8 மாதங்கள் தியேட்டர்களே இல்லாமலும் மூன்று மாத காலங்களில் 50 சதவீத இருக்கைகளுடனும் தியேட்டர்கள் செயல்பட்டன.

பிப்ரவரி 1 முதல் வழங்கப்பட்ட 100 சதவீத அனுமதியும் நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. கொரானோ இரண்டாவது அலையின் காரணமாக மீண்டும் ஏப்ரல் 10ம் தேதி முதல் 50 சதவீத இருக்கைகளுடன் செயல்பட்டன தியேட்டர்கள். அடுத்து ஏப்ரல் 26 முதல் தியேட்டர்கள் முழுவதுமாக மூடப்பட்டன. அப்போது மூடப்பட்ட தியேட்டர்கள் கடந்த இரண்டு மாதங்களாக மூடியே உள்ளன.

ஜனவரி, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் ஆகிய நான்கு மாதங்களில் மட்டுமே தியேட்டர்களில் புதிய படங்கள் வெளியாகின. அந்த நான்கு மாதங்களில் பிரபல முன்னணி நடிகர்களின் படங்கள் சில மட்டுமே வெளியாகின

1.மாஸ்டர்,

2. ஈஸ்வரன்,

3. பாரிஸ் ஜெயராஜ்,

3. சக்ரா,

3. சுல்தான்,

4.கர்ணன்

ஆகியவை மட்டுமே முன்னணி நடிகர்கள் நடித்த படங்கள்.

இவற்றில் மாஸ்டர், சுல்தான், கர்ணன் ஆகிய படங்கள் மட்டுமே வசூல் ரீதியாக வெற்றி பெற்ற படங்களாகும்,

அதற்கடுத்த கட்டத்தில் இருக்கும் நடிகர்கள் நடித்த படங்களில்,

1.கபடதாரி, 2.களத்தில் சந்திப்போம், 3. நெஞ்சம்மறப்பதில்லை 4.காடன் ஆகிய படங்கள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாததால் திரையரங்குகள் கல்லாவில் கால் பகுதி கூட நிரம்பவில்லை.

வெளியீட்டிற்கு முன்பு கதைக்கு முக்கியத்துவம் உள்ள சிறிய படங்கள் என்று சொல்லப்பட்ட 1.C/OFகாதல், 2.சங்கத்தலைவன், 3.அன்பிற்கினியாள், படங்களுக்கு ஊடகங்கள் மூலம் விமர்சன ரீதியாக வரவேற்பு கிடைத்தாலும் ரசிகர்களிடம் எந்த தாக்கத்தை இந்தபடங்கள்

ஏற்படுத்தவில்லை.

2021 ஜனவரி மாதம் 1ம் தேதி முதல் தியேட்டர்களை மூடுவதற்கு முன்பு கடைசியாக, ஏப்ரல் 23ம் தேதி வரை சுமார் 60க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகின. அந்த படங்களில் வசூல் ரீதியாக ஓரளவிற்கு லாபத்தைக் கொடுத்த படங்கள் என மூன்றே மூன்று படங்களைத்தான் குறிப்பிடலாம். 50 சதவீத இருக்கைகளிலும் அந்தப் படங்கள் குறிப்பிடும் அளவிற்கான லாபத்தைக் கொடுத்தது பெரிய விஷயம் என கூறப்பட்டாலும் நகர்புறங்களில் உள்ள . மால் தியேட்டர்களில் மட்டும்தான் 50% இருக்கை டிக்கட்டுகள் விற்பனை செய்யப்பட்டது பிற திரையரங்குகளில் வந்த அனைவருக்கும் டிக்கெட் விற்பனை செய்யப்பட்டது. அதன் காரணமாகவே மாஸ்டர், சுல்தான்,கர்ணன் படங்கள் பாக்ஸ் ஆபீஸ் வசூலில் சாதனை நிகழ்த்தியது

ஏப்ரல் மாதத் துவக்கத்தில் கொரானோ தொற்று பயம் ஒரு பக்கம், தமிழ்நாடு சட்டசபை தேர்தல் ஒரு பக்கம், அதற்காக மார்ச் மாதத்தில் நடந்த பிரச்சாரம், ஓடிடி தளங்களில் சில படங்களின் வெளியீடு என தியேட்டர்களுக்கு மக்கள் வரும் எண்ணிக்கை மிக மிக குறைவான அளவில்தான் இருந்தது.

அதிதீவிர சினிமா பார்க்கும் ரசிகர்கள் மட்டும்தான் தியேட்டர்களுக்கு மீண்டும் வந்தார்கள். அதில் கூட விஜய் நடித்த மாஸ்டர் படத்தைப் பார்க்க வந்த அளவிற்கு மற்ற படங்களுக்குக் கூட்டம் வரவில்லை. மாஸ்டர் படத்தையும் படம் தியேட்டர்களில் வெளியான 16 நாட்களிலேயே ஓடிடி தளத்தில் வெளியிட்டார்கள். அதன் காரணமாகவும் அந்தப் படத்தின் வசூல் பெரிதும் பாதிக்கப்பட்டது. இருப்பினும் சில தியேட்டர்களில் ஓடிடி வெளியீட்டிற்குப் பின்பும் படத்தை திரையிட்டார்கள்.

தனுஷ் நடித்த கர்ணன் படத்திற்கு விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனால், படம் வெளியான இரண்டே வாரங்களில் தியேட்டர்களை முழுவதுமாக மூடியதால் இப்படத்திற்கான வசூல் தொகை குறைந்து போனது.

ஒவ்வொரு ஆண்டும் வழக்கம் போல வெளிவரும் படங்களைப் போல இந்த அரையாண்டிலும் வந்த சுவடே தெரியாமல் வந்து போன பல படங்கள் இருந்தன. சில படங்களுக்கான டிரைலர்கள், தகவல்கள் ஆகியவற்றை கூகுளில் தேடினாலும் கிடைக்கவில்லை.

கடந்த வருடத்தில் நிகழ்ந்த ஓடிடி நேரடி வெளியீடு புது வருடத்தின் துவக்கமான ஜனவரி மாதத்திலும் இருந்தது. மாதவன் நடித்த மாறா, ஜெயம் ரவி நடித்த பூமி ஆகிய படங்கள் ஒரு வார இடைவெளியில் ஓடிடி தளங்களில் வெளியானது. இரண்டு படங்களுமே ஓடிடிரசிகர்களின் வரவேற்பைப் பெறவில்லை..

இருப்பினும் ஆர்யா நடித்த டெடி படம் ஓடிடியில் வெளியாகி சிறுவர், சிறுமியர்களைக் கவர்ந்தது. டிவியில் நேரடியாக வெளியான சமுத்திரக்கனி நடித்த ஏலே படமும், யோகி பாபு நடித்த மண்டேலா படமும் மாறுபட்ட படங்களாக அமைந்து ரசிக்க வைத்தன.

அப்படங்கள் டிவியில் முதலில் வெளியானலும் உடனே ஓடிடி தளங்களிலும் வெளியாகி பலரையும் பார்க்க வைத்தது. த்ரிஷா நடித்த பரமபத விளையாட்டு, ஜிவி பிரகாஷ்குமார் நடித்த வணக்கம்டா மாப்ளே ஆகிய படங்கள் ஓடிடி தளத்தினருக்கு ஏமாற்றத்தையே தந்தன. அந்த ஏமாற்றத்திற்கு மேலும் பெரிய ஏமாற்றமாக தனுஷ் நடித்து ஓடிடி தளத்தில் வெளிவந்த ஜகமே தந்திரம் படம் அமைந்தது.

தியேட்டர்களில் எதற்கு வெளியாகிறது என்று தெரியாமலேயே வெளியாகும் சில படங்களைப் போலவே ஓடிடி தளங்களிலும் சில படங்களை எதற்கு வெளியிடுகிறார்கள் என்றே தெரியவில்லை என்கிற விமர்சனங்கள் கடுமையாக இருந்தன.

2020ம் ஆண்டில் கொரோனா தொற்று முதல் அலையின் காரணமாக தியேட்டர்கள் மூடப்படுவதற்கு முன்பாக சுமார் மூன்று மாதங்களில் 50 படங்கள் வெளியாகியிருந்தன. 2021ல் கொரானோ தொற்று இரண்டாவது அலையின் காரணமாக தியேட்டர்கள் மூடப்படுவதற்கு முன்புவரை நான்கு மாதங்களில் 60 படங்கள் வரை வெளியாகியுள்ளன.

இரண்டிற்கும் பெரிய வித்தியாசமில்லை. இருப்பினும் 2021ஆம் அரையாண்டில் 50 சதவீத இருக்கை, 100 சதவீத இருக்கை, மீண்டும் 50 சதவீத இருக்கை, தியேட்டர்கள் மூடல் என தியேட்டர்களுடைய நிலை வெவ்வேறாக இருந்தது. 100 வருடத்திற்கும் மேலான தமிழ் சினிமா வரலாற்றில் வேலைநிறுத்தம் இல்லாத காலங்களில் இப்படி நடப்பது இதுவே முதல் முறை.

தியேட்டர்களை மீண்டும் எப்போது திறக்க தமிழக அரசு அனுமதி கொடுப்பார்கள் என்பது உறுதியாகத் தெரியவில்லை. ஜுலை 15 முதலோ அல்லது ஆகஸ்ட் 1 முதலோ 50 சதவீத இருக்கைகளுடன் திறக்க அனுமதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

தியேட்டர்கள் மீண்டும் திறக்கப்பட்டால் மக்களை மீண்டும் வரவழைக்க முன்னணி நடிகரின் படங்கள் தான் தேவை. அப்படி ஒரு படமாக அஜித்குமார் நடித்துள்ள வலிமை படம் மட்டுமே தற்போது உள்ளது.

கொரோனா முதல் அலைக்குப் பிறகு தியேட்டர்கள் திறக்கப்பட்ட போது மக்கள் வருவதற்குக் காரணமாக விஜய்யின் மாஸ்டர் இருந்தது போல, இரண்டாவது அலைக்குப் பிறகு தியேட்டர்கள் திறக்கப்பட்டால் வலிமை படம் மக்கள் வருவதற்குக் காரணமாக இருக்கும் என எதிர்பார்க்கிறார்கள்.

2021ம் ஆண்டில் அரையாண்டு முடிந்திருக்கும் சூழலில் தட்டுத் தடுமாறிக் கொண்டிருக்கும் தமிழ் சினிமாவை பழைய நிலைக்கு கொண்டுவர நவீனத்துவத்தின் துணையுடன் வெற்றிபெற என்ன வழி என்பதை திரைப்பட துறையினர் யோசிக்க வேண்டிய தருணம் இது. ஆனால் அதற்கான எந்த முன்முயற்சியும் தமிழ்சினிமாவில் இல்லை என்பது கவலைக்குரியது.

-இராமானுஜம்

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

வசூலில் வாகை சூடிய ‘வீரமே வாகை சூடும்’!

3 நிமிட வாசிப்பு

வசூலில் வாகை சூடிய ‘வீரமே வாகை சூடும்’!

பரத்தை அடித்தேனா?- சர்ச்சைகளுக்கு வெங்கடேஷ்பட் விளக்கம்!

3 நிமிட வாசிப்பு

பரத்தை அடித்தேனா?- சர்ச்சைகளுக்கு வெங்கடேஷ்பட் விளக்கம்!

வியாழன் 1 ஜூலை 2021