மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 29 ஜுன் 2021

முதல்வரின் வருகையை மறக்க முடியாது:ஷங்கர்

முதல்வரின் வருகையை மறக்க முடியாது:ஷங்கர்

தமிழகத்தின் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பு ஏற்றபிறகு ஆட்சி நிர்வாகத்தில் மாற்றங்கள் ஏற்பட்டது. அது மட்டுமல்ல அரசியல் நாகரிகத்தில், தன்னை ஜென்ம விரோதியாகப் பார்ப்பவர்களிடத்திலும் மு.க.ஸ்டாலின் அணுகுமுறை எதிரிகளையும் வெட்கப்பட வைத்திருக்கிறது.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கட்சி தொடங்கிய நாள் முதல் கடுமையாக விமர்சிக்கப்படும் கட்சி திமுகவும் அதன் தலைவர் மு.க.ஸ்டாலினும்தான். நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைவர்களைக் காட்டிலும் மு.க.ஸ்டாலினை கடுமையாக விமர்சித்தார் சீமான். அந்த ஈரம் காய்வதற்குள் அவரது தந்தை காலமானார்

அந்த செய்தியறிந்த மு.க.ஸ்டாலின் கட்சித் தலைவர், முதல்வர் என்கிற முறையில் அனுதாபச் செய்தி வெளியிட்டதே போதுமானது, அதிகபட்சமானது. ஆனால் அதையும் கடந்து சீமானை தொலைபேசியில் தொடர்பு கொண்டு துக்கத்தைப் பகிர்ந்து கொண்டு ஆறுதல் தெரிவித்தது தமிழக அரசியல் வட்டாரத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

இந்த சூழ்நிலையில் பிரபல இயக்குநர் ஷங்கர் மகள் திருமணத்திற்கு மாமல்லபுரம் வரை பயணம் செய்து மணமக்களை வாழ்த்தியது அரசியல் வட்டாரத்தைக் காட்டிலும் தமிழ் சினிமா வட்டாரத்தில் அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ஷங்கர் இயக்குநராக அறிமுகமான முதல் படமான"ஜென்டில்மேன்". திமுகவின் அடிப்படைக் கொள்கையான இட ஒதுக்கீட்டுக்கு எதிரான படம். அடுத்து அவர் தயாரித்து இயக்கிய முதல்வன் படம் முழுக்க முழுக்க மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் அரசியல் வாழ்க்கை, ஆட்சியை விமர்சித்து, கேலி செய்து எடுக்கப்பட்ட படம். ஷங்கர் இயக்கிய அனைத்து தமிழ்ப் படங்களிலும் திமுக, அதன் தலைவர்களை அரசியல் பகடி செய்யத் தவறியதில்லை.

இருந்தபோதிலும் "இன்னாசெய்தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயம் " என்பதற்கு ஏற்ப ஷங்கர் மகள் திருமணத்தில் தன் மகன் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் மா.சுப்ரமணியன் ஆகியோருடன் சென்று கலந்துகொண்டதாகவே சினிமா வட்டாரத்தில் பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் திருமணத்துக்கு வருகை தந்த முதலமைச்சருக்கு ட்வீட்டர் மூலம் ஷங்கர் நன்றி தெரிவித்துள்ளார். நேற்று அவர் வெளியிட்ட பதிவில், "மகளின் திருமணத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்துகொண்டு வாழ்த்தியது மறக்க முடியாது. இதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மணமக்களை வாழ்த்திய மா.சுப்ரமணியன், உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கும் நன்றி” என குறிப்பிட்டுள்ளார்

-இராமானுஜம்

என்னை கைது செய்ய வந்தால்...: கங்கனா

2 நிமிட வாசிப்பு

என்னை கைது செய்ய வந்தால்...: கங்கனா

ஐந்து உணர்வுகள்: ஞான ராஜசேகரன் ஆதங்கம்!

2 நிமிட வாசிப்பு

ஐந்து உணர்வுகள்: ஞான ராஜசேகரன் ஆதங்கம்!

மாநாடு ரிலீஸ் ஆனது எப்படி?

10 நிமிட வாசிப்பு

மாநாடு ரிலீஸ் ஆனது எப்படி?

செவ்வாய் 29 ஜுன் 2021