மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 27 ஜுன் 2021

போயஸ் கார்டனில் தனுஷ் கட்டும் வீட்டின் பட்ஜெட்!

போயஸ் கார்டனில் தனுஷ் கட்டும் வீட்டின் பட்ஜெட்!

ஒரு படத்துக்கு ஒப்புக்கொண்டால் தாமதமானாலும் சரி, நேரம் எடுத்து முடித்துக் கொடுத்துவிட்டு அடுத்த படத்தில் கவனம் செலுத்தும் நடிகர் தனுஷ், சமீப காலமாக ஒரே நேரத்தில் பல படங்களை கமிட் செய்துவருகிறார். ஒரே மொழியில் அல்ல, பல மொழிப் படங்களுக்கும் சம்மதம் சொல்கிறார். இதற்கெல்லாம் ஒரே காரணம் தனுஷின் கனவுகளை சுமந்துக்கொண்டு உருவாகிவரும் போயஸ் கார்டன் வீடு.

ஆழ்வார்பேட்டையில் குடும்பத்துடன் குடியிருக்கும் தனுஷ், சமீபத்தில் போயஸ் தோட்டத்தில் வீடு கட்ட திட்டமிட்டார். மாமனார் ரஜினியின் வீட்டருகில் வீடு கட்டும் பணியும் சமீபத்தில் தொடங்கியது. பூமி பூஜையில் ரஜினி கலந்துகொண்டார் என்பதெல்லாம் இணையத்தில் செய்தியானது நினைவிருக்கலாம். பேரக் குழந்தைகளை ரஜினி எளிதில் சந்திக்கவும், ரஜினியை மகள் ஐஸ்வர்யா கவனித்துக்கொள்வதற்கும் போயஸ் தோட்டத்துக்குள் வீடு கட்டி வருகிறார் என்கிற காரணம் சொல்லப்பட்டாலும், தமிழகத்தில் முக்கிய பிரபலங்கள் பலரும் இருக்கும் இடம் போயஸ் கார்டன். அதற்குள் வீடு வாங்குவதெல்லாம் நிச்சயம் கெளரவமான விஷயமும் கூட.

சத்யஜோதி பிலிம்ஸ் மற்றும் வி கிரியேஷன் ஆகிய தயாரிப்பு நிறுவனங்களுக்கு அடுத்தடுத்து படங்கள் ஒப்பந்தமானதெல்லாம் இந்த வீட்டுக்காகத்தான். இந்த வீடு திட்டமிட்டதை விட அதிக பட்ஜெட்டில் கட்டப்பட்டு வருகிறதாம். சமீபத்திய தகவல்படி, மொத்தமாக 150 கோடிக்கு இந்த வீடு தயாராகி வருகிறதாம். இறுதிக்கட்ட கட்டுமான வேலைகள் நடந்துவருகிறது.

வீட்டுக்குள் சகல வசதிகளும் இருக்கும்படி திட்டமிட்டுக் கட்டிவருகிறார்கள். அதாவது, நீச்சல் குளம், ஜிம் மற்றும் ஹோம் தியேட்டர் என சுகபோக வாழ்க்கைக்கான அனைத்தும் அடங்கியிருக்குமாம். புதிதாக ஒப்பந்தமாகியிருக்கும் படங்களின் சம்பளங்கள்கூட, வீட்டின் செலவுக்குத்தான் பெரும்பாலும் போகிறதாம். ஹாலிவுட் படங்களிலெல்லாம் நடித்து வந்திருப்பதால், தனுஷ் கேட்கும் சம்பளமும் உயர்ந்திருக்கிறதாம். இந்தச் சம்பள உயர்வும் கட்டும் வீட்டினை மனதில்கொண்டே என்கிறார்கள்.

தனுஷுக்கு கர்ணன், ஜெகமே தந்திரம் படங்கள் வெளியாகிவிட்டன. பாலிவுட்டில் அக்‌ஷய் குமாருடன் உருவாகிவரும் அட்ராங்கி ரே படம் அடுத்து வெளியாக இருக்கிறது. ஹாலிவுட்டில் க்ரே மேன் படம் தயாராகி வருகிறது. தமிழில், கார்த்திக் நரேன் இயக்கத்தில் ‘டி 43’, செல்வராகவனின் ‘நானே வருவேன்’, சன் பிக்சர்ஸ் இயக்கத்தில் மித்ரன் ஜவகர் படம், ராட்சசன் ராம்குமார் இயக்கும் படம், வெற்றி மாறனுடன் ஒரு படம், மாரி செல்வராஜுடன் மீண்டுமொரு படம், தெலுங்கில் சேகர் கம்முலா இயக்கும் படங்களில் அடுத்தடுத்து நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் தனுஷ்.

- தீரன்

சித்தார்த் விவகாரத்தில் நடிகை கஸ்தூரி கருத்து!

3 நிமிட வாசிப்பு

சித்தார்த் விவகாரத்தில் நடிகை கஸ்தூரி கருத்து!

‘அழகி-2’: நடிகை நந்திதா தாஸின் ஆசை!

3 நிமிட வாசிப்பு

‘அழகி-2’: நடிகை நந்திதா தாஸின் ஆசை!

100 மில்லியன் பார்வைகளைக் கடந்த ‘டம் டம்’

2 நிமிட வாசிப்பு

100 மில்லியன் பார்வைகளைக் கடந்த ‘டம் டம்’

ஞாயிறு 27 ஜுன் 2021