மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 26 ஜுன் 2021

தெலுங்கு நடிகர் சங்க தேர்தல்: இன பிரச்சினையை கிளப்பிய நடிகர்கள்!

தெலுங்கு நடிகர் சங்க தேர்தல்: இன பிரச்சினையை கிளப்பிய நடிகர்கள்!

தெலுங்கு திரையுலகின் நடிகர் சங்கத்திற்கு இந்தாண்டு தேர்தல் நடத்தப்படவுள்ளது. Telugu Movie Artistes Association எனப்படும் தெலுங்கு நடிகர்கள் சங்கத்திற்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்படுவது வழக்கம்.

தற்போது அங்கே நடிகர் நரேஷின் தலைமையில் சங்கம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. செப்டம்பர் மாதம் சங்கத்திற்கு புதிதாகத் தேர்தல் நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

இந்தத் தேர்தலில் தலைவர் பதவிக்கு தான் போட்டியிட இருப்பதாக நடிகர் பிரகாஷ்ராஜ் முதல்நபராக அறிவித்தார். தனக்கு நடிகர் சிரஞ்சீவியின் ஆதரவும் இருப்பதாக பிரகாஷ்ராஜ் தெரிவித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் மூத்த நடிகரான மோகன் பாபுவின் மகனும், நடிகருமான விஷ்ணு மஞ்சு தானும் தலைவர் பதவிக்குப் போட்டியிடப் போவதாக அறிவித்து பரபரப்பையூட்டினார்.

ஏனெனில் கடந்த இரண்டு முறைகளும் நடிகர் சங்கத்தில் பலத்த போட்டிகள் ஏற்பட்டு பலவித சர்ச்சைகள் எழுந்தன. இதனால் இந்த முறை அப்படி போட்டியில்லாமல் நிர்வாகிகளை ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கலாம் என்று பல நடிகர், நடிகைகள் பேட்டியும் அளித்திருந்தார்கள்.

ஆனால் உண்மையில் போட்டி உறுதி என்ற நிலை வந்தவுடன் தெலுங்கு திரையுலகம் பரபரப்பாகிவிட்டது. இந்தப் பரபரப்பில் இன்னும் கொஞ்சம் கூடுதல் டென்ஷனை ஏற்படுத்தி உள்ளார் நடிகை ஜீவிதா ராஜசேகர்.

தற்போதைய நிர்வாகத்தில் செயலாளராகப் பணியாற்றி வரும் நடிகை ஜீவிதா, தான் இந்த முறை தலைவர் பதவிக்குப் போட்டியிடுவதாகக் கூறினார்.

இதையடுத்து நடிகர் மோகன்பாபு தரப்பில் இருந்து ஜீவிதாவுடன் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்கள். விஷ்ணு மஞ்சு “நான் இந்த முறை தலைவராக நின்று கொள்கிறேன். நீங்கள் செயலாளராக இருங்கள். அடுத்த முறை நான் செயலாளராக நிற்கிறேன். நீங்கள் தலைவராகுங்கள். உங்களது வெற்றிக்கு நான் பாடுபடுவேன்…” என்று இப்போது சமரசக் கொடியை நீட்டியிருக்கிறார். ஜீவிதா இதற்கு இன்னமும் பதில் சொல்லவில்லை.

இதற்கு நடுவில் தற்போதைய நிர்வாகத்தில் துணைத் தலைவராகப் பதவி வகிக்கும் குணச்சித்திர நடிகையான ஹேமா, தானும் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவதாக அறிவித்திருக்கிறார்.

இவர் கடந்த 3 நிர்வாகங்களிலும் பணியாற்றியவர் என்பதால் தனது ஆதரவாளர்கள் “இனிமேல் நீ நின்றால் தலைவருக்குத்தான் நிற்க வேண்டும்” என்று சொல்லிவிட்டதாகச் சொல்கிறார் ஹேமா.

ஆக, மொத்தத்தில் தலைவர் பதவிக்கே இத்தனை போட்டிகள் என்றால் மற்ற பதவிகளுக்கு என்னாகுமோ தெரியவில்லை என்கிறார்கள் தெலுங்கு நடிகர், நடிகையர்.

“இந்தக் குழப்பத்திற்குக் காரணமே பல்லாண்டுகளாக நீடித்து வரும் சிரஞ்சீவி-மோகன்பாபு இடையிலான பனிப்போர்தான். சென்ற இரண்டு நிர்வாகத்திலும் மோகன் பாபு நிறுத்தியவர்கள்தான் வெற்றி பெற்றார்கள். சிரஞ்சீவி யாரை ஆதரித்தாலும் அவர்களை மோகன்பாபு எதிர்ப்பார். இப்படியே நீடித்து வரும் இந்த இருவரின் ஈகோ போராட்டம்தான் நடிகர்கள் சங்கத் தேர்தலை ஒவ்வொரு முறையும் பரபரப்பாக்கி வருகிறது” என்கிறார்கள் தெலுங்கு திரையுலக பத்திரிகையாளர்கள்.

தெலுங்கு திரைப்பட நடிகர்கள் சங்கத்தின் தேர்தலில் தலைவர் பதவிக்கு பிரகாஷ்ராஜ் போட்டியிடுவது குறித்து பல்வேறு சர்ச்சை பேச்சுக்கள் எழுந்துள்ளன. பிரகாஷ்ராஜ் கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த கன்னடர், அவர் எப்படி தெலுங்கு நடிகர்கள் சங்கத் தேர்தலில் போட்டியிடலாம் என்று தெலுங்கு நடிகர் நடிகைகளே பேச தொடங்கியுள்ளனர்.

பிரகாஷ்ராஜ் அடிப்படையில் கர்நாடகத்தைச் சேர்ந்தவர் என்றாலும் தற்போது தென்னிந்திய மொழிகள் அனைத்திலுமே வில்லன், கதாநாயகன், குணசித்திரம் என்று அனைத்து வித கதாபாத்திரங்களிலும் நடித்து புகழ்பெற்றவர். தென்னிந்திய கதாநாயகர்கள் அனைவருடன் வில்லனாக நடித்துவிட்டார். இவரது தேதிக்காக கதாநாயகர்களின் கால்ஷீட் தேதிகள் மாற்றப்படும் அளவிற்கு தெலுங்கு சினிமாவில் ஆதிக்கம் செலுத்தியவர்.

தற்போது தெலுங்கு திரைப்பட நடிகர் சங்கத்தில் பிரகாஷ்ராஜ் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவது பிடிக்காமல் பல மூத்த நடிகர்களே அவருக்கு எதிராக பலரையும் தூண்டிவிட்டு பேச வைப்பதாக தெலுங்கு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் இந்தத் தேர்தலில் போட்டியிடவிருக்கும் தனது தலைமையிலானஅணி வேட்பாளர்களை பிரகாஷ்ராஜ் அறிமுகப்படுத்தினார். இந்த சந்திப்பில் பத்திரிகையாளர்களும் இதே கேள்வியை கேட்டபோது வெடித்துச் சிதறினார் பிரகாஷ்ராஜ்

"நான் தெலுங்கில் நடிக்க வரும்போது யாரும் நான் வெளிமாநிலத்தவன் என்று சொல்லவில்லையே, வெளிமாநிலத்தவன் என்றால் என்னை ஏன் இங்கே இத்தனை படங்களில் நடிக்க வைத்தார்கள், வைத்தீர்கள்..?

நான் இங்கே, ஆந்திராவிலேயே சொத்துக்களை வாங்கியிருக்கிறேன் இங்கேயே வீடும் உள்ளது. எனது ஆதார் கார்டும் இந்த ஆந்திரா மாநில முகவரியில்தான் உள்ளது. எனது பிள்ளை இங்கேதான் பள்ளியில் படிக்கிறான்.நான் ஆந்திராவில் இரண்டு கிராமங்களைத் தத்தெடுத்து உள்ளேன். அப்போதெல்லாம் யாரும் நான் வெளிமாநிலத்தவன் என்று சொல்லவில்லை. தெலுங்கு பேசும் விஷால் தமிழ்நாட்டில் நடிகர் சங்க தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுகிறார் என்கிறபோது நான் ஏன் இங்கு போட்டியிடக் கூடாது?

அந்தப்புரம் என்ற தெலுங்குபடம் தானே எனக்கு தேசிய விருது வாங்கித் தந்தது. தெலுங்குபடங்களில் நடித்துத்தானே ஒன்பது நந்தி விருதுகளை வாங்கினேன். நான் உள்ளூர்காரனா, இல்லையா என்பதல்ல பிரச்சினை சிலரது குறுகிய மனப்பான்மையும், குறுக்குப் புத்தியும்தான் காரணம். 30 ஆண்டு காலமாக நான் இந்த இண்டஸ்ட்ரியில் இருக்கிறேன்

எனக்குப் பெயர், புகழ்,பணம் எல்லாவற்றையும் இந்த இண்டஸ்ரிதான் தந்தது. இதற்காக நான் பதிலுக்கு ஏதாவது செய்ய வேண்டாமா அதனால்தான் இந்தத் தேர்தலில் தலைவர் பதவிக்குப் போட்டியிடுகிறேன். ஆனால், இப்போது இந்தத் தேர்தலில் நிற்கப்போகிறேன் என்றவுடன் ஏன் இந்தக் கேள்வி? எங்கேயிருந்து இந்தக் கேள்வி வருகிறது? நான் தெலுங்கு திரையுலகத்தில் வாழ்கிறேன் தெலுங்குப் படங்களில் நடிக்கிறேன், தெலுங்கு திரைப்பட நடிகர்கள் சங்கத்தில் உறுப்பினராக உள்ளேன், அதனால் இந்தச் சங்கத் தேர்தலில் போட்டியிடுகிறேன். என்னை யாரும் வெளிமாநிலத்தவனாக பார்க்கவும் கூடாது, முடியாது. நான் இந்தத் தேர்தலில் நிச்சயமாகப் போட்டியிடுவேன் என்றார் பிரகாஷ்ராஜ்.

-இராமானுஜம்

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

4 நிமிட வாசிப்பு

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

3 நிமிட வாசிப்பு

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

‘எனிமி’க்கு எனிமியான அண்ணாத்த

10 நிமிட வாசிப்பு

‘எனிமி’க்கு எனிமியான அண்ணாத்த

சனி 26 ஜுன் 2021