மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 23 ஜுன் 2021

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: ஐந்தாம் நாள் முடிவில் இந்தியா 64/2

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்:  ஐந்தாம் நாள் முடிவில் இந்தியா 64/2

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் ஐந்தாம் நாள் ஆட்ட முடிவில் இந்தியா 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 64 ரன்கள் எடுத்துள்ளது.

முதலில் பேட் செய்த இந்தியா முதல் இன்னிங்ஸில் 217 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. நியூசிலாந்து 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 101 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மூன்றாவது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. நான்காவது நாள் ஆட்டம், மழை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில், ஐந்தாவது நாளான நேற்றும் (ஜூன் 22) மழை குறுக்கிட்டது. இதனால் ஒரு மணி நேரம் தாமதமாக ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 249 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கேன் வில்லியம்சன் 49 ரன்னும், சவுத்தி 30 ரன்னும் எடுத்தனர். இந்தியா சார்பில் ஷமி 4 விக்கெட்டுகளும், இஷாந்த் 3 விக்கெட்டுகளும், அஷ்வின் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

32 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்தியா இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் சர்மாவும், சுப்மான் கில்லும் களமிறங்கினர்.

சுப்மான் கில் 8 ரன்னில் சவுத்தியிடம் அவுட்டாகி வெளியேறினார். நிதானமாக ஆடி வந்த ரோஹித் சர்மா 30 ரன்னில் சவுத்தியிடம் வீழ்ந்தார். புஜாராவும், அடுத்து வந்த கேப்டன் விராட் கோலியும் மேற்கொண்டு விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டனர்.

ஐந்தாம் நாள் ஆட்ட முடிவில் இந்தியா 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 64 ரன்கள் எடுத்துள்ளது. புஜாரா 12 ரன்னுடனும், கோலி 8 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர். நியூசிலாந்து சார்பில் சவுத்தி 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இந்தப் போட்டி டிராவை நோக்கி போய்க்கொண்டிருக்கும் நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் அளித்துள்ள பேட்டியில், “தற்போது நடந்து வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி டிராவில் முடியும் என்றே தோன்றுகிறது. டிராவில் முடிந்தால் கோப்பைப் பகிர்ந்தளிக்கப்படும். உலகப் போட்டியில் கோப்பை கூட்டாகப் பகிர்வது இதுவே முதன்முறையாக இருக்கும்.

கால்பந்து விளையாட்டில் ஆட்டம் சமனில் முடிந்தால் வெற்றியாளரை முடிவு செய்ய பெனால்டி முறை கடைப்பிடிக்கப்படுகிறது. டென்னிஸ் போட்டியில் 5 செட் மற்றும் டைபிரேக்கர் கொண்டு வரப்படுகிறது.

இதேபோல்,வருங்காலத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி டிரா ஆகும்போது, இவ்விரு அணிகளில் ஒன்றை வெற்றியாளராக அறிவிக்கும் வழிமுறையைக் கண்டறிய வேண்டும். ஐசிசி கிரிக்கெட் கமிட்டி இதுகுறித்து சிந்தித்து முடிவு செய்ய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

-ராஜ்

என்னை கைது செய்ய வந்தால்...: கங்கனா

2 நிமிட வாசிப்பு

என்னை கைது செய்ய வந்தால்...: கங்கனா

ஐந்து உணர்வுகள்: ஞான ராஜசேகரன் ஆதங்கம்!

2 நிமிட வாசிப்பு

ஐந்து உணர்வுகள்: ஞான ராஜசேகரன் ஆதங்கம்!

மாநாடு ரிலீஸ் ஆனது எப்படி?

10 நிமிட வாசிப்பு

மாநாடு ரிலீஸ் ஆனது எப்படி?

புதன் 23 ஜுன் 2021